Arts
10 நிமிட வாசிப்பு

“அசாதாரண வாழ்வைக்கொண்ட சாதாரண மனிதரின் வாழ்வு கிருஷ்ணமூர்த்தியுடையது”

February 25, 2024 | இளவேனில் ஆசிரியர் குழாம்

நேர்காணல் – அசோக்குமார்

கிருஷ்ணமூர்த்தி அண்ணாவுடன் இந்த உரையாடல் நடக்கும்முன் அவரை ஒன்றிரண்டு முறை சில நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். அவ்வளவாகப் பேசியதில்லை. இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர் குழு இவருடன் உரையாடி அவர் அனுபவங்களை அறிந்துகொள்ளலாம் எனக் கூறியபோது என் நினைவிலிருந்து கிருஷ்ணமூர்த்தி அண்ணாவின் முகத்தை மீட்டெடுக்க முயன்றேன் ஆனால் துல்லியமாக அவர் முகம் நினைவிலில்லை. எந்த முன்முடிவுகளுமின்றி அவரைப்பற்றி ஒன்றுமே அறியாமல் அவருடன் உரையாடத் தொடங்கினேன். “என் உரையாடல் எதற்கு? நான் ‘செலிபிரட்டி’ இல்லையே. என் அனுபவங்களைப்போல இங்குள்ள அனைவருக்கும் ஓர் அனுபவமிருக்கும். இதிலென்ன சுவாரஸ்யம் இருக்கும்?” எனக் கேட்டார். எனக்கும் ஆரம்பத்தில் அப்படிதான் தோன்றியது. ஆனால் இவ்வுரையாடல் வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்த என்னைப்போன்று ஒருவன், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. அவர் தன் அனுபவங்களை ஓர் நண்பனுடன் பகிர்ந்துகொள்வதுபோல் மிக இயல்பாக என்னிடம் பகிர்ந்துகொண்டார். நிதானமாக ஆழமாக அதே சமயம் பல இடங்களில் அங்கதத்துடன் உரையாடினார். அவரின் வாசிப்பும் வாழ்க்கை அனுபவங்களும் எவ்வளவு ஆழம் என்பது அவருடன் உரையாடிய இந்த சில நாட்களில் அறிந்துகொண்டேன். அவர் பேசிய “எல்லோருக்கும் யாரையாவது நம்பவேண்டியதுள்ளதே” போன்ற ஓர் சில வரிகளைத் தனியாக அமர்ந்து பல மணிநேரம் சிந்தித்திருக்கிறேன்.

அசாதாரண வாழ்வைக்கொண்ட அசாதாரண மனிதர்கள் மட்டுமே செலிபிரட்டிகள் அல்ல. அசாதாரண வாழ்வைக்கொண்ட சாதாரண மனிதர்களும் செலிபிரட்டிகள்தான். கிருஷ்ணமூர்த்தி அண்ணா அப்படி ஒருவர். A simple man with extraordinary life.

வணக்கம் அண்ணா. எப்படியிருக்கிறீர்கள்?

நலம் அசோக்.

எத்தனை வருடங்களாக இங்கே ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள்?

நான் வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி விட்டது. 1988இல் இங்கு வந்தேன்.

நீங்கள் வந்த பொழுது இருந்த ஆஸ்திரேலியா வேறு மாதிரியாக இருந்திருக்கும். எப்படி இங்கு வந்தீர்கள்?

என் சொந்த ஊர் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு அருகில் விவசாயிகள் நிறைந்த ஒரு கிராமம். எனக்கு இப்போது 61 வயது. நான் நாட்டை விட்டு வெளியேறியது என் 22 வயதில். அப்போது, படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு சம்பவம் நான் நாட்டை விட்டு விரைவாக வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

விருப்பமென்றால் அந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ள இயலுமா அண்ணா?

எனக்கு ஒரு அண்ணன். அந்தக் காலம் ஊரில் இயக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலம். எங்கள் நண்பர் ஒருவர் இயக்கத்தில் சேர்ந்தார். மிக அழுத்தமான மனிதர். ஒரு நாள் சில ஆயுதங்களை என்னிடம் கொடுத்து சில நாள் மறைத்து வைத்திருக்கும் படி சொன்னார். நானும் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் எங்கள் வீட்டிலுள்ள வெங்காயப் பரணில் ஒளித்து வைத்துவிட்டேன். என் அண்ணனுக்குக் கூடத் தெரியாது. சில மாதங்களுக்குப்பின் ஆமிக்காரர்களிடம் எங்கள் ஊரில் இயக்கத்தொடர்புள்ள என் நண்பன் ஒருவன் பிடிபட்டுவிட்டான். ஆமி ஊருக்குள் வந்து அனைத்து வீட்டையும் சோதனை செய்வார்கள் எனத் தெரியும். அப்போது தான் என் அண்ணனிடம் வீட்டில் ஆயுதங்கள் ஒளித்து வைத்திருப்பதைச் சொன்னேன்.  அவசர அவசரமாக அதை இடம்மாற்றி என்னையும் வயல் வழியாக ஓட்டமும் நடையுமாகப் பக்கத்துக்கு ஊருக்கு இரவோடு இரவாக அனுப்பி வைத்துவிட்டார். பின்பு அங்கிருந்து கொழும்பு சென்று நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். அன்று நான் வீட்டைவிட்டு வெளியேறிய உடனேயே நமது ஊர் ஆமியால் சுற்றிவளைக்கப்பட்டு எனது பல நண்பர்களைப் பிடித்துச் சென்றார்கள் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அண்ணாவும் மெட்ராசுக்கு சென்றுவிட்டார்.

அண்ணா, இது நடக்கும்போது உங்களுக்கு என்ன வயதிருக்கும்?

22 வயதிருக்கும்.

மிக ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு இப்போது 38 வயதாகிறது. இன்றும் துப்பாக்கியை ஏதோ கண்காட்சியிலோ அல்லது காவலரிடமோ கண்டால் உள்ளுக்குள் உதறல் எடுக்கும். ஆயுதங்களை மறைக்கும் போதில் உங்களுக்குப் பயமாக இல்லையா? வீடு, குடும்பம், வேலை, எதிர்காலம் என்பதெல்லாம் யோசித்து உங்களுக்குத் தயக்கமில்லையா?

பயமோ, தயக்கங்களோ இல்லை என்று பொய் சொல்லமுடியாது. ஆனால் அதையும் மீறி கோபம் அதிகமாக இருந்தது.  1983 கலவரத்தில் பலர் இறந்த செய்தி, ஆங்காங்கே நடக்கும் கொலைகள் எல்லாம் கேள்விப்படும்போது கோபம் அதிகமாக வந்தது. அதனால் தான் செய்ய முடிந்தது.

உண்மை தான். புரிகிறது. கொழும்பிலிருந்து நேராக ஆஸ்திரேலியா வந்து விட்டீர்களா?

இல்லை இல்லை. முதலில் சவுதியில் சில காலம் வேலை செய்தேன். குறுகிய காலம் தான். சவுதியில் ஒப்பந்தம் முடியும்முன் கொம்பனி மூடி விட்டார்கள். திரும்பி நாட்டிற்கும் திரும்பக் கூடிய சூழலில்லை. நானும் சில நண்பர்களும் நான்கு நாட்கள் சவூதி விமான நிலையத்தில் தங்கினோம். அங்கு என்னுடைய மேனேஜர் எங்களுக்கு இந்திய விசா எடுக்க எவ்வளவோ போராடினார். முடியவில்லை. பின்பு வேறு வழியின்றி இலங்கை திரும்பினேன். சில மாதங்கள் இலங்கையில் இருந்தேன். பின்னர் இந்தியா சென்று இரண்டு வருடம் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் தங்கி இருந்து வேலை பார்த்தேன். அந்த இரண்டு வருடங்களில் பல அனுபவங்கள். ஒரு சிறிய அறையில் பலர் தங்கி இருந்தோம். ஏமாற்றமும் எதிர்பார்ப்புமாகக் காலம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது எங்காவது பத்திரமாக இருந்தாலே போதும் என்றுதான் இருந்தது.

ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்று எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஆஸ்திரேலியாவை நான் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பெல்லாம்கூட கிடையாது. எந்த நாட்டிற்கு விசா கிடைக்கிறதோ அங்குச் சென்றுவிட வேண்டும் என்று தான் இருந்தேன். கனடா, சுவிற்சர்லாந்து விசாவும் முயற்சி செய்தேன். ஆஸ்திரேலியா பிசினஸ் விசா கிடைத்தது. அதனால் இங்கு வந்து விட்டேன்.

ஆஸ்திரேலியாவிற்கு வந்த போது உங்களுக்கு இங்கு யாரையும் தெரியுமா?

நான் இங்கு வந்த காலத்தில் மொபைல் எல்லாம் இல்லை. கையிலொரு சீட்டில் சிட்னியில் இருந்த ஒரு நண்பருடைய முகவரியும், மெல்பனில் ஒரு நண்பருடைய முகவரியும் இருந்தது. சிட்னியில் தான் முதலில் வந்து இறங்கினேன். விமான நிலையத்திலிருந்து நேராக நண்பரின் வீட்டிற்குச் செல்ல வேண்டும். நண்பர் என்று சொல்வதைவிட நண்பரின் நண்பர் என்று சொல்வதுதான் சரி.

இந்தக் காலத்தில் நின்று நீங்கள் சொல்வதைக்கேட்டால் வியப்பாக இருக்கிறது. பக்கத்துத் தெருவிற்குச் செல்ல வேண்டும் என்றாலே இரண்டு மூன்று தடவை கூகிள் மாப்ஸ் பார்த்துத்தான் செல்வேன். நீங்கள் கடல் கடந்து வெறும் ஒரு முகவரியுடன் வந்திருக்கிறீர்கள்.

உண்மை தான் இன்று உள்ள எந்த தொழில்நுட்ப வசதியும் அன்று இல்லை. ஆனால் வேறு வழியும் இல்லைதானே. எனக்குப் புது நாட்டிற்குப் போகிறோம் என்ற பயமெல்லாம் இல்லை. எதுவானாலும் பார்த்துவிடலாம் என்ற மனநிலை தான் அன்று இருந்தது. இன்று வரையிலும் அது தொடர்கிறது. அதனால் மிக அதிகமாக யோசித்துப் பயந்ததில்லை.

மிகுந்த ஆர்வத்தோடு கேட்கிறேன். நீங்கள் இங்கு வந்த முதல் நாள் நினைவிருக்கிறதா?

இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு சுவாரஸ்யமான கதை தான். சிட்னிக்குத்தான் முதலில் வந்து இறங்கினேன் என்று சொன்னேன் அல்லவா. விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. அப்போது ஒருவர் நான் நிற்பதைப் பார்த்து வந்து பேசினார். அவரும் தமிழர் தான். முகவரியைக் காட்டி எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டேன். அவர் தன்னோடு என்னை அழைத்துச்சென்று ஒரு ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். அங்கு ரயில் பிடித்து மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கி விசாரித்தால் யாரவது வழிகாட்டுவார்கள் என்று சொன்னார். சரி என்று ரயில் நிலையத்திற்குச் சென்று விட்டேன். வந்த பின்பு எந்தத் திசையில் செல்கின்ற ரயிலில் ஏற வேண்டுமென்ற குழப்பம் வந்து விட்டது. சரி ஏதோ ஒரு பக்கம் செல்லும் ரயிலில் ஏறுவோமென்று ஏறி விட்டேன். மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கி வெளியே வந்து முகவரியில் இருந்த தெருவைக் கண்டுபிடித்து விட்டேன் ஆனால் எந்த வீடு என்று தெரியவில்லை. அந்தத் தெருவிலேயே சில நிமிடங்கள் நடந்துகொண்டிருந்தேன். நான் அப்படி நடந்துகொண்டிருந்ததை ஒரு வெள்ளைக்கார பெண்மணி பார்த்து என்னை நோக்கி வந்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார். நான் முகவரியைக் காண்பித்து விவரத்தைச் சொன்னேன். அப்படியே என் கையை பிடித்துக்கொண்டு போய் ஒரு அபார்ட்மெண்டில் விட்டு இது தான் நீங்கள் தேடிவந்த முகவரி. இந்த எண் உள்ள அறையைத் தட்டுங்கள் என்று கூறிச் சென்று விட்டார்.

வீட்டைக் கண்டுபிடித்தீர்களா? உங்கள் நண்பரைச் சந்தித்தீர்களா?

உடனடியாக இல்லை. முகவரியில் இருந்த அறை எண்ணைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினால் யாருமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் அங்கு அமர்ந்திருந்தேன். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண் குழந்தையுடன் வந்தார். என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, யார் நீங்கள் என்று கேட்டார். நான் நண்பரின் பெயரைச் சொல்லி, அவரை பார்க்க வந்தேன், அவரின் அறைக் கதவு மூடியிருக்கிறது, அவர் வீட்டில் யாருமில்லை அதனால் காத்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். நான் பார்க்க வந்த நண்பரின் மனைவி தான் அவர். வெள்ளை இனத்தவர். நண்பர் வெளிநாட்டிற்குப் போயிருக்கிறார் என்று சொல்லி வீட்டிற்குள் அழைத்துச் சென்று தேநீர் கொடுத்து, அவருடைய கணவரின் வேறு சில நண்பர்களை அழைத்து அவர்களுடன் இரவு தங்கிக் கொள்ளுமாறு சொல்லி அனுப்பி வைத்தார். அன்று இரவு புது நண்பர்கள் வீட்டில் தங்கினேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்போது ஒரு வசனம் கூட ஆங்கிலத்தில் பேசவோ, மற்றவர்கள் பேசுவதை விளங்கிக்கொள்வதோ கடினம். ஆனால் எல்லாம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது.

சிட்னியில் எத்தனை நாள் இருந்தீர்கள்?

ஒரு இரவு தான். அந்த நண்பர்கள் அடுத்த நாள் சிட்னியிலிருந்து மெல்போன் செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்தார்கள். காலையில் சிட்னியில் பேருந்து ஏறிய எனக்கோ மெல்போன் வந்துசேரப் பத்து மணிநேரத்திற்கும் அதிகமாகும் எனத் தெரியாது. பேருந்து மாலைவரை சென்றுகொண்டே இருக்க எனக்குச் சிறிது பயமே வந்து விட்டது. பேருந்தில் இருந்தவாறு வீட்டிற்கு நாலைந்து பக்கங்களில் கடிதம் எழுதினேன். மாலையில் மெல்போனில் இறங்கி டாக்ஸி பிடித்து நண்பரின் முகவரிக்குச் சென்று விட்டேன். இன்றும் நண்பர்களாக உள்ள பலர் மெல்போன் வந்த சில நாட்களில் நான் சந்தித்தவர்கள் தான்.

புது நாட்டிற்கு வந்து விட்டீர்கள். சம்பாதிப்பதற்கு வழி கண்டுபிடிப்பதே அடுத்த வேலையில்லையா? என்னை நான் பணிபுரிந்த கம்பெனியே இந்தியாவிலிருந்து இங்கு அனுப்பி, ஆறு மாதம் இங்கேயே வேலை பார்ப்பாய் என்ற உத்தரவாதமும் அளித்து அனுப்பியது. அதற்கே எனக்கு ஆறு மாதம் என்பது குறுகிய காலமென்றும் அதன் பிறகு என்னவென்ற பதற்றமும் இருந்தது. உங்களுக்கு அடுத்த நாள் என்னவென்பதே அப்போது தெரியாதில்லையா. என்ன வேலை செய்தீர்கள்?

நான் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தேன். வீடியோகிராபராக பல காலம் வேலை செய்தேன். இங்கு ஒரு நண்பர் நல்ல வீடியோகிராபராக இருந்தார். அவருடன் சேர்ந்து சிறிது சிறிதாக வேலை கற்றுக்கொண்டு பல நிகழ்ச்சிகளுக்கு வீடியோ எடுத்தேன். அந்த நண்பர் பின்பு வேலை மாற்றத்தினால் வேறு ஊர் சென்றுவிட நான் தனியாக நிகழ்ச்சிகளுக்கு வீடியோ எடுத்தேன். சில காலம் டாக்ஸி ஓட்டினேன். காலையில் வீடியோ வேலையும் இரவுகளில் டாக்ஸியும் ஓட்டினேன். எனக்கு அப்போது பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருந்தது. எப்போது எந்த நண்பர் அழைத்து உதவி கேட்பாரென்று தெரியாது. வீட்டிலும் நிறையப் பொறுப்புகள். வெளிநாட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள் எல்லாரும் வெளிநாட்டிற்குச் செல்ல முயற்சி செய்பவர்களுக்கு உதவுவதை ஒரு சிரமமென்று பார்க்காமல் செய்தோம். அதனால் எவ்வளவு உழைத்து பணம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு உழைத்தோம். நானும் நேரம் காலமென்றில்லாமல் உழைத்தேன். இங்கு உள்ள ஒரு தொழில்நுட்பக்கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் படிக்கவும் சேர்ந்தேன். இரவில் தூங்காமல் டாக்ஸி ஓட்டியதால் வகுப்பில் தூங்கி, பின்பு இது சரி வராதென்று நிறுத்திவிட்டேன்.

இன்று மறுபடியும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சேர்ந்து படிப்பீர்களா?

படிக்கும் ஆர்வமும், படிக்க முடியும் என்ற நம்பிக்கையும் உண்டு ஆனால் அதற்கான தேவை இன்றில்லை என நினைக்கிறன். ஓடி ஓடி உழைத்து, இன்று குடும்பம் பொருளாதாரம் எனக் கொஞ்சம் செட்டிலாகி விட்டேன். அப்போது நிறையப் பணத்தேவை இருந்ததினால் உழைப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவுசெய்தேன். என் மனைவி பிள்ளைகளுடன் செலவுசெய்த நேரம் குறைவுதான். இந்த விஷயத்தில் என் மனைவிக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும். இப்போது குடும்பத்துடன் நிறைய நேரம் செலவிடவேண்டும் என்றுதான் எண்ணம் உள்ளது.

நீங்கள் இங்கு வந்த காலத்தில், வேலை பார்த்த காலத்தில் ஏதேனும் ஒரு அறிவுரையோ அல்லது வழிகாட்டுதலோ இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்போது நினைக்கிறீர்களா?

நான் இங்கு வந்த காலத்தில் சந்தித்த பெரிய சவாலென்றால் அது ஆங்கில மொழிதான். படித்திருந்தாலும் எங்கள் நாட்டில் தினம் ஆங்கிலம் பேசும் தேவையெல்லாமில்லை. இங்குள்ள மனிதர்களுடன் உரையாட நன்றாக ஆங்கிலம் பயில வேண்டியதிருந்தது. இலங்கையிலிருந்து புலம்பெயர்பவர்கள் இரண்டு வகை. படித்து புலம் பெயர்பவர்களும் உண்டு. அகதிகளாகப் புலம்பெயர்பவர்களும் உண்டு. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் அகதிகளாகப் புலம்பெயர்பவர்களை, படித்துப் புலம்பெயர்ந்தவர்கள் படிக்காதவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. அனைவரும் அப்படியல்ல. நன்றாக உதவக்கூடியவர்களும் இருக்கிறார்கள். படித்துப் புலம்பெயர்ந்தவர்கள் இங்கு நல்ல வேலையில் இருப்பார்கள். அவர்கள் அகதிகளாகப் புலம்பெயர்பவர்களுக்கு இங்குள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், இங்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளச் சில வழிகாட்டுதல்களையும் அளித்தால் உதவியாக இருக்கும். இந்த உதவியெல்லாம் இல்லாமல் யாரும் இங்கு முன்னேற முடியாது என்றில்லை ஆனால் நிச்சயமாகக் கொஞ்சம் உதவியாக இருக்கும். ஆனால் இன்று கொஞ்சம் அந்த நிலைமை மாறிவிட்டதென்று நினைக்கிறன்.

அண்ணா, வெளிநாட்டவர்கள் நாற்பத்தைந்து வயதில் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளை ‘mid life crisis’ என்று சொல்வார்கள். ஒரு மனிதனுக்கு அவனுடைய ‘identity’, ‘purpose’, ‘sense of fulfillment’ பற்றியெல்லாம் மனதில் கேள்விகளும் குழப்பங்களும் எழும் காலகட்டம் என்று அதைச் சொல்வார்கள். நீங்கள் அந்த வயதைக் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு அப்படித் தோன்றியதா? அதை எப்படிக் கடந்தீர்கள்?

நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடந்த போது தான் என் மனம் இன்னும் பக்குவம் அடைந்ததென்று சொல்வேன். அந்தக் காலகட்டத்தில் என் கவனம் வேலையிலும், குடும்பத்திலும் இருந்தது. பிள்ளைகள் ‘kids’ என்ற பருவத்தைக் கடந்து ‘Young Adults’ ஆக மாறிய காலம். பிள்ளைகள் வளர்ப்பில் என் கவனம் இருந்ததால் எனக்கு அப்படி ‘mid life crisis’ என்றெல்லாம் தோன்றவில்லை. நானும் கொஞ்சம் மனதைச் சமநிலையில் வைத்துக் கொள்ளும் ஆள் தான். அதிகமாக மகிழ்ச்சியோ அல்லது அதிகமாகச் சோகமோ என்னைத் தாக்கியதில்லை. அந்த ‘attitude’ ஒரு காரணம். வாசிப்பு இன்னொரு முக்கிய காரணம். இடம்பெயர்ந்து இங்கு வந்து வாழ்ந்துகொண்டிருந்தாலும் நாங்கள் இங்கு எங்கள் சமூகத்துடன்தான் பழகுவோம். அதனால் வேறு வாழ்க்கை முறை, கலாச்சாரம் எல்லாம் தெரியும் வாய்ப்புகள் குறைவு. வாசிப்பு எனக்கு அந்த வாய்ப்பை அளித்தது. Reading gave me exposure. சொல்லப்போனால் பல முக்கிய முடிவுகளை இந்தக் காலகட்டத்தில் எடுத்திருக்கிறேன். கோவிட் பெருந்தொற்று காலத்தில் நான் பலநாட்கள் செய்த வீடியோ வேலையை விட்டுவிடலாமென்று முடிவுசெய்து நிறுத்திவிட்டேன்.

அண்ணா உங்களுக்கு அறுபத்தொன்று வயது என்பதை உங்களைப் பார்க்கும் யாரும் நம்பமாட்டார்கள். எப்படிப் பிட்டாக இருக்கிறீர்கள்?

கொஞ்சக் காலம் நண்பர் ஒருவரிடம் கராத்தே பயின்றேன். இன்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி செய்கிறேன். வேலை செய்வதை விருப்பத்தோடு செய்கிறேன். இது சாப்பிட வேணும், அது சாப்பிடக்கூடாது என்றெல்லாம் நான் வரைமுறை போட்டுக் கொள்வதில்லை. எது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் ஆனால் நன்றாக உழைக்க வேண்டும். இன்றும் எந்த வேலை என்றாலும் தயக்கமில்லாமல் இறங்கிச் செய்துவிடுவேன்.

கொஞ்சம் பொறாமையாகத்தான் உள்ளது. காபியில் கூட இரண்டு சர்க்கரை போட்டீர்கள்.

ஆமாம். உணவில் எது சாப்பிட்டாலும் நன்றாக வேலை செய்தால் அது உடலுக்குத் தீங்கில்லை. வயதைக்கூட நான் ரொம்ப மனதில் போட்டுக்கொள்வதில்லை. நானும் என் மனைவியும் ஒரு சுற்றுலா சென்றோம். அங்குப் பல படிகள் ஏறிப்போய் ஓரிடத்தைப் பார்க்க வேண்டும். எங்களுடன் வந்தவர்கள் கொஞ்சம் தயங்க, நான் ஒரே மூச்சில் ஏறிவிட்டேன்.

சுற்றுலா எனக் குறிப்பிட்டீர்கள். நீங்கள் அதிகம் பயணம் செய்வீர்களா?

அதிகம் என்று சொல்ல முடியாது. இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. பார்க்கலாம்.

உங்கள் நண்பர்கள் பற்றிச் சொல்லுங்கள்.

நான் இங்கு வந்த பொழுதில் சந்தித்த பலர் இன்றும் நண்பர்களாக உள்ளனர். எல்லோருமே நல்ல நண்பர்கள்தான். என்னைக் கடந்து செல்லும்போது புன்னகைக்காதவர் குறைவு. இங்கு MKS ஓனரை சிட்னியில் வந்த பொழுது சந்தித்தேன் இன்றும் அவர் நல்ல நண்பர். முருகபூபதி பல நாட்களாக நல்ல நண்பர். இப்படிப் பலர் உண்டு. நான் இங்கு வந்த புதிதில் ஆங்கிலம் கற்க ஒரு வகுப்பில் சேர்ந்தேன். அங்கு ஒரு பெண் நண்பர் அறிமுகமானார். நல்ல நண்பர். அவர் எனக்கு நண்பர் ஆனதில் வகுப்பிலுள்ள மற்ற நண்பர்களுக்குச் சிறிது பொறாமையும் கூட. அவர் எனக்குப் பல ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்தினார். இன்றும் நினைவில் நிற்கும் நண்பர்களில் அவரும் ஒருவர். அதுபோல் வாழ்வின் முக்கியமான தருணத்தில் என்னைச் சரியான பாதையில் ஆற்றுப்படுத்திய நண்பரும் உண்டு.

அது போன்ற நண்பர்கள் கிடைப்பது பெரும் பேறுதான். அத்தருணத்தை பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அது வலி நிறைந்த ஒரு சம்பவம் தான். என் அண்ணன் மிகப்பெரிய தைரியசாலி. என் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்தார். என்னை யாரும் எதுவும் பேசி விட்டாலோ அல்லது என் மேல் யாரும் கை வைத்து விட்டாலோ, பேசியவனை அடித்து விட்டுத்தான் என்னென்று கேட்பார். நானும் அண்ணனும் அவ்வளவு நெருக்கம். என் வாழ்வில் மிக முக்கியமான மனிதர். நான் இங்கு வந்தபோது சில நாட்களில் அவரின் இறப்புச் செய்தி தொலைப்பேசி வழியாக வந்தது. அதைக் கேட்ட தருணத்தில் மிகுந்த கோபம் வந்தது. உடனே ஊருக்குப் புறப்பட வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போது அந்த நண்பர் தான் உன்னை நம்பி இன்னும் ஊரில் குடும்பம் உள்ளது. சற்று பொறுமையாக யோசியென்று என்னை நிதானப்படுத்தினார்.

உங்கள் வலிமிகுந்த நினைவுகளைத் திரும்பவும் பேச வைத்ததற்கு மன்னித்து விடுங்கள். உங்களை நிறையக் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். இலக்கியத்தில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?

நான் சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் கொண்டவன். எத்தனை நாடுகளுக்கு மாறி மாறி வந்தாலும், எத்தனை சிரமங்களைத் தாண்டி வந்தாலும், வாசிக்கும் பழக்கத்தை மட்டும் விடவில்லை. வீட்டில் சிறிய நூலகமும் வைத்திருக்கிறேன். நான் மிகவும் விரும்பி செய்வது வாசிப்பதுதான்.

அருமை அண்ணா. இப்போது எந்தப் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

மௌனியின் சிறுகதைகள் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் சிறுகதைகள் நேரடியாகப் புரியவில்லையென்றாலும், அவர் சிறுகதையை வாசிப்பது நன்றாக இருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம்.

மௌனியின் எழுத்து அப்படிதான். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

அப்படி ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அன்றைய புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், பாலகுமாரன், ஜானகிராமனின் இருந்து இன்றைய ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ஜே.கே, தெய்வீகன், ஷோபாசக்தி வரை நீண்டு கொண்டே போகிறது. சமீபத்தில் அராத்து என்ற எழுத்தாளரின் எழுத்தை வாசித்தேன். டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ வாசித்திருக்கிறேன். அனைவரும் பிடித்த எழுத்தாளர்களே.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் வாசிப்புக் களம் ஆழமானதும் அகலமானதுமாகத் தோன்றுகிறது. ஏதாவது எழுதி பார்த்திருக்கீர்களா?

நான் சிறியதாக எழுதிப்பார்த்திருக்கிறேன். என்னால் நன்றாக எழுத முடியும். ஆனால் என் சொந்தக் காரணங்களுக்காக நான் எழுதுவதைத் தொடரவில்லை.

இனிமேல் எழுதுவீர்களா?

இப்போதைக்கு அந்த எண்ணமில்லை. ஆனால் எழுதவே மாட்டேனென்றும் இல்லை. நேரம் கிடைத்தால் முயற்சி செய்து பார்ப்பேன்.

உங்கள் சில அனுபவங்களைக் கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. You are truly an inspirational personality. நீங்கள் எழுத முடிவெடுத்தால் உங்கள் முழு அனுபவங்களையும் எழுதுங்கள். பலருக்கு ஊக்கமாக இருக்கும்.

பாப்போம் காலம் கனிந்துவந்தால்.

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?

இல்லை. ஆனால் என் வீட்டில், என் உறவினர்கள் கடவுளைக் கும்பிடுவதையும், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதையும் நான் தடுப்பதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் கடவுளை வேண்டியதே இல்லை என்று சொல்லமாட்டேன். எல்லோருக்கும் யாரையாவது நம்பவேண்டியதுள்ளதே.

ஏன் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை? நம்பிக்கை என்பது தனி மனித உரிமை. அதைக் கேள்வி கேட்கவில்லை. ஆனால் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?

சின்ன வயதில் இருந்தது. அது பழக்கத்தினாலும் பயத்தினாலும். காலப்போக்கில் என் அனுபவங்கள் அதில் நம்பிக்கையின்மையை வளர்த்துவிட்டது. இன்றும் நம்பிக்கை ஒருவருக்கு உதவுகிறதென்றால் இருக்கட்டும். ஆனால் எனக்குப் பெரிதாக நம்பிக்கை இல்லை.

நான் திடீர் என்று கடவுள் நம்பிக்கை பற்றிக் கேட்கக் காரணம், நீங்கள் இத்தனை இடர்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள். அப்படிப் பல கஷ்டங்களைப் பார்த்து வருபவர்கள் கடவுளை ஒரு பிடிப்பாக (hold) வைத்திருப்பார்கள். what is your hold in life?

My hold in life is my self confidence. எனக்குத் தன்னம்பிக்கை அதிகம். இன்று கூட எதுவானாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அனைத்திலும் வெற்றி பெறுவேன் என்று நான் சொல்லவில்லை. எந்த ஒரு விஷயமென்றாலும் முழு மனதுடனும் ஆற்றலுடனும் செய்வேன். தோல்வி வந்தால் சரியென்று கடந்து விடுவேன். அதையே நினைத்து நினைத்துத் தேங்கிவிட மாட்டேன். ஒரு வகையில் தோல்வியைக் கண்டு பயப்படுகிறவனுக்குத் தான் கடவுள் தேவை.

இளவேனில் ஆசிரியர் குழாம்


65 பார்வைகள்

About the Author

இளவேனில் ஆசிரியர் குழாம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்