Arts
10 நிமிட வாசிப்பு

உள நலனுக்கான உதவி

September 11, 2024 | முருகேசு கோவிந்தராஜா

பொதுவாக ஒரு சமூகத்தில் உளரீதியான பிரச்சனைகள் காணப்படுவது இயல்பு. அத்துடன் ஒரு சமூகம் பல வகையான துன்ப அனுபவங்களையும், இடர்பாடுகளையும் அனுபவித்திருக்குமேயானால் அந்தசமூகத்தில் பலருக்குப் பலவகையான மன அழுத்தங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பிரத்தியேகமாக ஒரு பெரும் போரையும் அந்த போரின் கொடூரத்தையும் அநேக காலம் அனுபவித்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினுள் அநேகருக்குப் பல்வேறுபட்ட துன்ப அனுபவங்கள் பலவிதமான மன அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றது.

அதேவேளையில் நமது சமூகத்தினுள் மனரீதியான பிரச்சனைகள் பற்றிய பிழையான புரிதலும் அதைப் பற்றி பலவகையான மனக்கறைகளும் உண் டு. ஒரு சமூகம் அதன் கட்டுப்பாடுகளினாலும், அதன் கலாச்சார வழிமுறைகளினாலும் ஏற்படுத்தி வைத்திருக்கும் கறைகளிலிருந்து வெளிவருவது சுலபமானதாய் இருக்காது. இவற்றிலிருந்து ஒரு சமூகத்தை வெளிக்கொணர் வதற்குப் பலவகையான வழிகளில் முயற்சிக்கவேண்டி இருக்கும். முதலில் மனவருத்தங்களும் உடல் வருத்தங்களைப் போன்ற வருத்தங்களே என்ற தெளிவு ஏற்படவேண்டும். இந்த தெளிவு ஏற்பட்டு விட்டால் மற்றைய கறைகளிலிருந்தும், கலாசாரப் பின்னணியால் சிந்தனையில் ஊடுருவி இருக்கும் மன நோய் பற்றிய பிழையான புரிதல்களிலிருந்தும் நம்மவர்களை வெளிக்கொணர முடியும்.

பல வேளைகளில் உளசமூகப் பிரச்சனைகளின் விளைவுகள் மிகச் சாதாரணமானவை. உதாரணத்திற்கு, இயலாமை, தலைவலி, நித்திரை குழப்பம், உறவுகளுடன் சச்சரவு, செயற்பாட்டுத் திறன் குன் றுதல் போன்றவற்றைக் கூறலாம். இவை பல்வேறு விதங்களைப் பிரதி பலிக்கலாம். பிரத்தியேகமாக நமது சமூகம் மிகக்கொடூரமான போரையும் அதன் கொடூரத்தினுள்ளும் வாழ்ந்து மீண்டிருக்கின்றது.

புலம் பெயர்ந்து இந்த நாட்டில் வாழும் போருள் வாழ்ந்த முதல் தலை முறையும் இரண்டாம் தலைமுறையும், அதாவது பெற்றோரும் பிள்ளைகளும், தாங்க முடியா துன்பங்களிலிருந்து மீண்டிருக்கின்றார்கள். அவர் களின் மனதில் எத்தனையோ விதமான நினைவுகள், அழுத்தங்கள் , கறைகள், துன்பங்கள் இருக்கும். இவர்களை இந்த துன்பங்களிலிருந்து மீட்டெடுத்து இயல்பு வாழ்வில் இணைத்து முன்னேற்றிக் கொண்டு செல்லவேண்டிய கடமைப்பட்டு எமக்கு உண்டு.

இவற்றை முன்னேற்றிச் செல்வதற்கு முதலில் பாரிய அளவிலான விழிப்புணர்ச்சிச் சேைவாயின் தேவை இருக்கின்றது. பல சமூகத் தொண்டர்கள் ஒன்றிணைந்து பொருத்தமான எளிய உத்திகளைப் பயன்படுத்தி அநேக மக்களுக்கு உதவலாம். மேலும், பல எளிய, பாரம்பரிய, நவீன முறைகள் மூலம் மனரீதியான நலத்தைப்பேணி, மேம்படுத்தி, மேலும் பிரச்சனைகள் வராமல் தடுத்து முன்னோக்கிச் செல்வதற்கு உதவலாம். இவற்றுக்கு உதவக்கூடிய அடிப்படை மனநல தத்துவங்களை விளக்குவதும், மனநோய்களின் வித்தியாசங்களையும், விளைவுகளையும் விளக்கிப் புரியவைத்து, அவற்றின் தாக்கங்களில் இருந்து குணப்படக் கூடிய எளிய வழிமுறைகளையும், இந்த நாட்டில் இருக்கும் வசதிகளையும் வாய்ப்புக்களையும் கற்பித்தலிலும் பெரிய அளவில் உதவலாம்.

ஒரு சமூகம் அதன் அதி உச்ச செயலாற்றல் திறனுடன் கரியமாற்றி முன்னேறிச் செல்வதற்கு அந்தசமூகத்தின் மக்கள் திருப்தி உடையவர்களாயும், மனநிறைவு பெற்றவர்களாயும், பிரத்தியேகமாக மன ஆரோக்கியத்தில் உச்ச நிலையில் இருக்கவேண்டியது ஓர் அடிப்படையான தேவையாகும். மனவழுத்தங்கள் நிறைந்த ஒரு சமூகத்தை அந்த அழுத்தங்களிலிருந்து வெளிக்கொணர்ந்து முன்னேற்றிச் செல்வதற்கும், அவர்களுள் பதிந்திருக்கும் கறைகளைப் போக்கி அவர்களுள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அவர்களின் கலாச்சாரத்துக்கு ஒத்த பிரயோசனமான விளக்கங்களும் அணுகு முறைகளும் இன்றியமையாதவையாகும்.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் நமக்கு, நமது கலாசார கண் ஊடாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் உளநலமருத்துவதத்துவங்களையும், முறைகளையும் விளங்கிக்கொள்ள வேண்டிய அவசியமும் அந்த அறிவுமுறைகளையும், விளக்கங்களையும், உதவிகளையும் எங்கெல்லாம் பெறலாம் என்பதை அறிந்திருப்பது மிகவும் அவசியமாகும். நமது மக்களிடையே பல பாரம்பரிய முறைகள் மனநலனை மேம்படுத்த உள்ளன என்ற உறுதியான நம்பிக்கை உண்டு. உதாரணத்திற்கு, யோகாசன முறைகள் பல உளநலப் பிரச்சனைகட்கு உதவும் என்றும், இவை மன ஆரோக்கிய நிலையை உயர்த்தி உளநலனை பேணவும், உளரீதியான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் என்ற நம்பிக்கை பலமாக உண்டு. இதனால், இந்நாட்டு மருத்துவ வழிமுறைகளுக்கும், நமது பாரம்பரிய துறைகளுக்கும் இடையே தொடர்புகளைப் பலப்படுத்தி ஒருவருக்கொருவர் இரண்டையும் பற்றிய வழிகாட்டுதலையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இன்றிய மையாததாகும்.

நமது நாட்டில் மனநோய்களைக் குறிக்க விசர், பைத்தியம், ஒருமாதிரி, ஒரு போக்கு, விசர்க்குணம், கழண்டது, லூஸ் போன்ற சொற்பதங்களை பாவிப்பதுண்டு. ஒருவரில் அசாதாரணமான நடத்தை மாற்றங்கள் ஏற்படும்போது இப்படியான வார்த்தைகளால் அவரை வர்ணிப் பதுவும், கருதுவதும் உண் டு. அதேவேளையில், கடுமை குறைந்த நரம்புத்தளர்ச்சி, மனச்சோர்வு, மனவழுத்தம் போன்ற மிதமான மனநோய்கள் சுலபமாகக் குணப்படுத்தக் கூடியவை. இங்கு வாழும் எமது சமூகத்தில் உள்ள மனவழுத்தங்களால் பாதிக்கப்பட்டு அவஸ்தையும் பலருக்குக் குணப்படுத்தக் கூடிய மிதமான மனநோய்களே உள்ளன என்று கணிக்கலாம். ஆனால், இந்த வகையில் அவஸ்தையுறுபவர்கள் இவர்களின் குடும்பங்கள் மேலும், பிள்ளைகள் – அதாவது அடுத்த தலைமுறை, மேல் ஏற்படுத்தும் பாதிப்பு கடுமையானதாக உள்ளதையும் அவதானிக்கலாம்  ஒருவகையில், இவற்றைத் தாங்கிக்கொண்டும், பொறுத்துக்கொண்டும் வாழும் மௌனமான பெரும்பான்மை ஒன்று நம்மிடையே உண்டு. இவர்களை இனம்கண்டு, வெளிக்கொணர்ந்து, முன்னேற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

மேலும் அகதிகளாக இங்கு வந்து குடியேறிய வர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் மிகப்பெரியவையாகவும், கஷ்டங்கள் நிறைந்தவை யாகும். பிரத்தியேகமாக, மொழி மற்றும் தொடர் புகளைப் பேணுதல், இனவெறி பாகுபாடு, சமூக அணுகுமுறைகள், பிள்ளைகளின் பள் ளிக் கல்வியில் சீர்குலைவின் தாக்கம், ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம், சொந்த நாடு மற்றும் அல்லது புகுந்த நாடுகளில் உள்ள குடும்பங்களுடனான தூரம் மற்றும் தொடர்பு இல்லாமை, தொழில் இன்மை, தொழில் தேடுதல், தொழில் பெறுதல் போன்றவற்றில் ஏற்படும் கஷ்டங்கள், பணநெருக்கடி, நிரந்தர குடியுரிமை இல்லாமையும் அதன் பொருட்டு அனுபவிக்கும் மனவழுத்தங்கள். இப்படி பலவகையான துன்பத்துடன் நமது சமூகத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியான சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக மீண்டு எழும் திறனும், ஓர்மமும் நம்மவர்கள் பலருக்கு இருக்கின்றபோதும் ஒரு சமூகமாய் உதவிகள் செய்ய வேண்டிய கடமைப்பாடும் இந்த நாட்டின் நடைமுறைகள் பற்றிய அறிவை கொடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தார்மீகக்கடமை ஒரு சமூகமாய் நம் எல்லோருக்கும் உண்டு.

அதேவேளையில், பிள்ளைகளும் இளை ஞர்களும் எதிர்கொள்ளும் சவால்கள், பிரத்தியேகமாக அவர்களுடைய வயதையும் அனுபவத்தையும் வைத்துக் கணக்கிட்டால், மிகவும் துன்பம் நிறைந்தவையாகும். அவர்கள் போரினால் ஏற்பட்ட காயங்களுடனும் இடம்பெயர்ந்ததினால் ஏற்பட்ட கறைகளுடனும் வாழவேண்டிய நிலையில் பலவகையான மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்கள். இப்படியான துன்பங்களிலிருந்து மீண்டெழும் ஆற்றல் பிள்ளைகளுக்கு அதிகம் உள்ள போதும் சில பிள்ளைகளும் இளைஞர்களும் பலவிதமான அழுத்தங்கட்கு உள்ளாவதுடன் பல வகையான சவால்களையும் எதிர்கொள்கின்றார்கள்.

பிரத்தியேகமாக, மாறுபட்ட சூழல், வேற்று மொழி, மொழி ஆற்றல், குழம்பிப்போன அல்லது வரையறுக்கப்பட்ட முன் கல்வியும் தற்போதைய படிப்பும், அவர்களின் தனித்துவம், அடையாளம், உடைமை போன்றவை அவர்களைப் பாதித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவார்கள்  இத்தகைய பாதிப்புகளால் மனச்சோர்வுக்கு உள்ளான பல இளைஞர்களையும், பிள்ளைகளையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். இவர்கள் பெரும்பாலும் கவலையில் மூழ்கியிருத்தல், தொடர்ச்சியாக யோசித்தபடி இருத்தல், எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாமை, விரக்தி மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை, மகிழ்வின்றி இருத்தல், உதவி அற்றவர்களாய், உதவிகளை எங் கு பெறமுடியும் என்று தெரியாதவர்களாய் இருப்பார்கள்.

இவை எல்லாவற்றிலிருந்தும் நமது எதிர்கால சந்ததியினரை வெளிக்கொணர்ந்து முன்னேறிச் செல்ல வைப்பது எங்கள் எல்லோருடைய தலையான கடமையாகும். மற்றவர்கட்கு உதவி செய்வது ஒரு அளப்பரிய சேவை என்பதை உணர்ந்து, அந்த உணர்வுடன் சேவை செய்வது மனநிறைவைக் கொடுக்கக்கூடியதொன்றாகும். நாம், நம்முள் உண்மையான கரிசனை, தெளிவான சிந்தனை, சுயவிழிப்பு ணர்வு, இதமான மனப்பாங்கு, பொறுமை, திறந்த மனநிலை, மற்றவர்களை மதித்தல், நேர்மை, இசைந்தும ; விட்டும் கொடுத்தல், போன்ற பண்புகளை வளர்த்து நமது சமூகத்தில் துன்பங்களுடன் வாழுபவர்களை இனம் கண்டு அவர் கட்கு உதவி, அவர்களை வெளிக்கொணர்ந்து முன்னேற்றிச் செல்வோம்.

முருகேசு கோவிந்தராஜா


17 பார்வைகள்

About the Author

முருகேசு கோவிந்தராஜா

One Comment

  1. Vathany J says:

    A well written post about mental health in Tamil community.

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்