Arts
10 நிமிட வாசிப்பு

சிந்திக்க

February 24, 2024 | நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

சிட்னியின் கோடைக் காலத்திலே அதிகாலை கலா வீட்டு விறாந்தையிலே அமர்ந்திருந்தாள். இளமஞ்சள் வெய்யில் இதமான உஷ்ணத்தைப் பரப்பியது. முற்றத்துச் செடிகள் மலர்ந்து அழகு காட்ட, அருகிலிருந்த மல்லிகை மணம் கலாவிற்கு ஒரு வித மயக்கத்தை ஊட்டியது. 76 வயது நிரம்பிய அவள் கடந்த ஒரு வருடமாக மகனுடன் வாழ்ந்து வருகிறாள். கலா எத்தனை வயதைத் தாண்டியும் அவள் தன்னை ஒரு மூதாட்டியாகக் கருதியது கிடையாது. ஆனால் அவள் அதை அங்கீகரிக்கிறாளோ இல்லையோ, உடலில் ஏற்படும் உபாதைகள் அதை உணர்த்தாமல் இல்லை.

 அவள் சிந்தனை சிறகடித்துப் பறந்தது. அவளது 74 வயது வரை சுழன்று ஆடி ஓடிய உடல்தான் இது. தனக்கென ஒரு வீட்டிலே வாழ்ந்து காரை ஓடித் திரிந்த காலம் அது. பயங்கரமான கொரோனா நோய் ஊரிலே வேகமாகப் பரவியது. “அவசர தேவையற்று வெளியே போகாதீர்கள், ஆனால் தனிமையிலே உடற்பயிற்சியிலோ நடைப் பயிற்சியிலோ ஈடுபடுங்கள்” இப்படி அரச கட்டுப்பாடு உலகையே கிடுகிடுக்க வைத்த காலம். எத்தனை எத்தனை கட்டுப்பாடுகள். இது கலாவின் வாழ்வையுமே பாதித்தது. அதிகாலை ஒரு மணி நேரம் பூங்காவிலே சீன இனத்தவருடன் இணைந்து செய்த Tai-Chi என்ற உடற்பயிற்சி காலை வெயிலும் சுத்தமான காற்றும் உடலுக்கு உறுதியைக் கொடுத்தது. அவள் உடலை முதுமை அடையாது காத்தது.

வாரம் மூன்று நாட்கள் காலையிலே கலா செய்து வந்த வானொலி நிகழ்ச்சிகள் பலரையும் கவர்ந்தது. அவளும் அதில் தன்னை இணைத்தாள் என்றே கூறவேண்டும்.

“உங்களின் இன்றைய நாள் வெற்றிகரமானதாக மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்” என்பதைக் கேட்டு மகிழ்ந்தவர் பலர். இவ்வாறு நிகழ்ச்சி காதுக்கினிய பாடல்களுடன் ஆரம்பமாகி, உலக வலம் வந்து, பலதும் பத்தும் பேசி, இறுதியிலே பண்பாட்டுக் கோலங்கள் என ஆழமான அர்த்தமுள்ள கட்டுரைகளை எழுதி வாசித்தாள். மூன்று மணி நேரம் நீண்ட நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது. 

மாலையானால் வீட்டை நோக்கி வரும் சின்னஞ்சிறுசுகள் முதல் வயதின் அழகு பரிமளிக்கும் கன்னியர்வரை நடனக் கலை கேட்க வருவார்கள். அழகிய ஆடல் கலையைக் கற்றுக் கொடுப்பதோடு அவர்களை ஆடத் தயாரித்துப் பழக்கி மேடையிலே ஏற்றிய கலா ஒவ்வொரு நொடியையும் இரசிக்கத் தவறுவது  இல்லை. அவர்கள் உறவே அவள் உறவு. அன்பையும் பாசத்தையும் பொழிந்தவர் பலர். மக்களிடையே கலா வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடன ஆசிரியை மட்டுமல்ல வெவ்வேறு சஞ்சிகைகளிலே வரும் அவளது எழுத்துக்கள் அவளை ஒரு எழுத்தாளராகவும் இனம் காட்டியது. ஆதவனின் இளமஞ்சள் கதிர்கள் இப்பொழுது உஷ்ணமாகி அவளின் பாதங்களைச் சுட்டெரிக்க உள்ளே செல்கிறாள். ஆனால் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை கொரோனா காலத்துக் கட்டுப்பாடு அவளது வாழ்வையே புரட்டிப் போட்டுவிட்டது அவள் உள்ளே இருந்த நோய்களும் விஸ்வரூபம் எடுத்ததோ? ஒரு வருட காலத்தில் மூன்று அறுவை சிகிச்சையை ஏற்றது அவள் உடல். அதைத் தொடர்ந்து விழுந்ததால் கையிலே ஏற்பட்ட பாதிப்பு கார் ஓட முடியாத நிலைக்கு அவளை தள்ளியது. எங்கு போவதானாலும் பிறரது கையை எதிர்பார்க்கும் நிலை.

ஆனால் கலாவின் திடமான உள்ளம் சோர்வை அணைத்துக்கொள்ள மறுக்கிறது.

“உடலை மனதாலும், மனதை உடலாலும் உத்வேகப்படுத்த முடியும்”

மனம் தளர்ந்தால் உடல் தளர்ந்து விடும், உடல் தளர்ந்தாலோ மனம் தளர்ந்து விடும். உடல் மனம் என்ற இரட்டை மாட்டு வண்டி ஓட வேண்டும். உடல், மனம் என்ற இரு மாடுகளுமே ஒத்துழைக்க வேண்டும். அவற்றைக் கட்டுப்படுத்தி வண்டியை ஓட்டுவதற்கு “திடசித்தம் ” அல்லது “வைராக்கியம்” என்ற ஓட்டுனர் வேண்டும்.

“தொடர்ந்து உழைக்க வேண்டும். இறுதி மூச்சு நிற்கும் வரை உழைக்க வேண்டும் ” என்ற மனோ நிலையை வளர்த்தல் அவசியம்”

“அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்”

இருக்கும் வசதிகளைக் கொண்டு திருப்தியாக ஆனந்தமாக வாழலாம். எல்லாமே முடிந்து விட்டது என்ற சிந்தனை வந்தால் எல்லாமே முடிந்து விடும். முதுமையும் வாழ்வின் ஒரு அங்கம், அதையும் ஏற்கும் மனோ பக்குவம் வராவிட்டால் நாம் நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் வேண்டாதவர் ஆகி விடுவோம் . மாற்றமே மாறாததொன்று. அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றவளே கலா.

அவளே சோர்ந்தால் இத்தனை நான் எழுதியும் பேசியும் வந்தது வந்தது அர்த்தமில்லாமல் போய்விடாதா?

கலாவின் உதட்டிலே புன்னகை தவழ்ந்தது.

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


53 பார்வைகள்

About the Author

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்