Arts
10 நிமிட வாசிப்பு

பிள்ளை

September 11, 2024 | ஜேகே

எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை.

நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளி களை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப் பிக் கொண்டேயிருப்பாள். ஒரு நாய் தூங்கும் போது மற்ற நாய் சொறிவது. நாய நீச்சல் குளத்தில் பாய்ந்து பந்தை மீட்பது. தவறுசெய்துவிட்டு நாய் பாவமாய் பாவ்லா காட்டுவது. இப்படித் தினமும் தூங்குவதற்கு முன்னர் அவளிடமிருந்து பல நாய் காணொளிகள் எனக்கு வருவதுண்டு. அதற்கு உடனேயே ஹார்ட்டின் போட்டு விட்டுத்தான் நான் தூங்கப்போவேன். சில சமயங்களில் அவள் அந்தப்பக்கம் தூக்கம் வராமல் தவிப்பதுண்டு. அப்போது என்னையும் அவள் நிம்மதியாகத் தூங்கவிடமாட்டாள். ஐந்து நிமிடத்துக்கொருமுறை எனக்கு மெசேஜ் வந்துகொண்டேயிருக்கும். அல்லது ஸ்டோரியில் டாக் பண்ணுவாள். இன்னொருவருடைய போஸ்டிலே சென்று “டேய் சேகர், இத பாத்தியாடா?” என்று என்னை இழுத்துவிடுவாள். எல்லாவற்றுக்கும் உடனேயே நான் ரியாக்ட் செய்யவும் வேண்டும். சில சமயம் ‘ஸோ லவ்லி, கியூட்’ என்றெல்லாம் சொல்ல வேண்டும். அல்லது தொலைந்தேன். அதற்காகவே நான் அலாரம் வைத்து மணிக்கொருதடவை எழுந்து இன்ஸ்டகிராமில் அவள் நாய்களுக்கு ஹார்ட்டின் போட்டுவிட்டுப் படுப்பதுண்டு. அதெல்லாம் காதலிக்கும்வரையில்தான். நிக்காஹ் முடிந்து இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்னாடி நாய் காணொளிகளை அவள் இப்போது எனக்கு அனுப்புவதில்லை. ஆனால் அடிக்கடி என்னுடைய சில்மிசங்களை காணொளி எடுத்து தனது இன்ஸ்டகிராமில் போட்டுக்கொள்வாள். இந்த சேகர் நாராயணன் பிள்ளையை இன்ஸ்டகிராமில் நாய சேகர் ஆக்கிய பெருமை என்னுடைய காதல் மனைவி சாயிலா பானுவுக்கே சேரும்.

அப்படிப்பட்ட சாயிலா பானு, அதுவும் இந்தச் சைவப்பழத்தைக் காதலித்து நிக்காஹ் செய்த சாயிலா பானு, இஸ்லாத்தின் ஏதோ ஒரு பழைய நம்பிக்கையைக் காட்டி, எங்கள் வீட்டிலே நாய் வளர்ப்பதை மறுப்பாளா என்ன? உண்மை அதுவல்ல.

சொல்லப்போனால் திருமணமான புதிதில் சாயிலாவுக்கு ஒரு நாயை வளர்ப்பதில் ஆர்வம்தான் அதிகமிருந்தது. கவூடுள் நாயொன்றை வாங்குவதற்கு நாங்கள் திட்டம்கூடத் தீட்டியிருந்தோம். அப்போதுவேறு கொரோனா காலம் என்பதால் நண்பர்கள் உறவினர்களை நேரில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பமும் எமக்கு இருக்கவில்லை. அதனால் வீட்டில் ஒரு நாயாவது வளர்ந்தால் பேச்சுத்துணையாக இருக்கும் என்று நாங்கள் யோசித்தோம். நாய எப்படிப் பேச்சுத்துணையாகும் என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம்.

ஆனால் என்னோடு ஓர் ஐந்து நிமிடத்துக்குத் தொடர்ந்தாப்போல பேசினாலே சாயிலா பானுவுக்கு இப்போதெல்லாம் காதுக்குள் கம்பளிப்பூச்சி ஊர ஆரம்பித்து விடுகிறது. பத்து நிமிடங்கள் பேசினால் அணு உலை வெடித்துச் சிதறுகிறது. ஆனால் நாயோடு பேசுவதால் எந்தச் சிக்கலும் வந்துவிடப்போவதில்லை. இங்கே எந்த நாய்க்கும் தமிழ்வேறு ஒழுங்காகத் தெரியாதா? ஓர் எலும்புத்துண்டைக் காட்டிவிட்டால் போதும். எல்லா நாயளும் வாலை ஆட்டிக்கொண்டு எம் முன் னால் மண்டியிட்டு அமர்ந்து நாங்கள் எந்தக் குப்பையை வாயிலிருந்து கொட்டினாலும் ஆர்வமாகச் செவிமடுத்துக்கொண்டிருக்கும். எனக் குத் தெரிந்த நண்பர் வீட்டில் அதுகூடக் கொடுப்பதில்லை. சின்னதாக ஒரு காரட்டைக் கொடுத்தால் போதும். அவர்கள் வீட்டு நாய் வாலை ஆட்டியபடி காலடியில் குறண்டிவிடும். காட்டிலே வேட்டையாடித்திரிந்த ஓநாய் குலச் சிங்கம், பாவம், கேவலம் வெறுங் காரட் துண்டுக்கு வாலை ஆட்டிப் பிழைக்கவேண்டிய விதியை நாம் ஒரு கணம் நினைத்துப்பாருங்கள். சிங்களவன் காரிலே ஸ்ரீ எழுதியதற்கு எதற்காகத் தமிழன் வீணாக டென்சனாகி அழிந்தான் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

ஆக வீட்டுக்குள் எந்த நாயும் வரகக்கூடாது என்று சாயிலா உறுதியாகச் சொன்னதற்கு இஸ்லாம் என்பது ஒரு சாட்டுதான். அதற்கு மொத்தக் காரணமும் நவஉ. தங்கை அமுதவிஷா. அதென்ன அமுதவிஷா என்று கேட்கிறீர்களா? என் அப்பாவுக்கு அமுதா என்ற பெயரில் ஒரு பெரு விருப்பம். ஏனென்று கேட்காதீர்கள். அம்மாவுக்குப் பெயரில் ஷ என்ற எழுத்து வந்தால் கொஞ்சம் ஸ்டைலாக இருக்கும் என்று ஓர் எண்ணம். என்னைக்கூட அவர் ஷேகர் என்றுதான் கூப்பிடுவார். அதனால் அம்மாவும் அப் பாவும் இந்தப் பெயர் விசயத்தில் ஒத்துவரவேயில்லை. கடைசியில் குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்துத்தான் அமுதவிஷா என்ற சமரசத்துக்கு இருவரும் ஒத்துவந்தார்கள். பெயர் வைத்த இராசி, ஒரு பானை அமுதத்தில் ஒரு துளி விசத்தைக் கலந்தாலும் அது விசம்தான் என்பதை நிரூபிப்பதுபோல அமுதவிஷாவும் வளரும்போது ஒரு முழு விசச் செடியாகவே வளர்ந்தாள். அவளைக் கேட்டால் அண் ணன் ஒரு விச விருட்சம் என்று பொய் சொல்வாள். நம்பி விடாதீர்கள்.

ஒருமுறை என் தங்கையோடு பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் ஒரு நாயை வாங்கி வளர்க்கப்போகிறோம் என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டேன். அவளும் ‘அப்படியா, ஸோ லவ்லி’ என்று ஆர்வத்துடன் கேட்டாள். அப்போதே நான் சுதாகரித்திருக்கவேணும். ஆனாலும் கேட்பதற்கு ஆள் கிடைத்ததே என்று நானும் விசயம் தெரியாமல் எம்முடைய ஆராய்ச்சி எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். கவூடுள்தான் கியூட், வளர்ப்பதும் எளிது, வடிவி, சொல் வழி கேட்கும், எதிரித்துப் பேசாது, குரைக்காது, கடிக்காது, சரியாகப் பயிற்சி கொடுத் தால்கக்காவை அடக்கி வைத்து வெடித்துச்சாகுமே ஒழிய, ஒருகாலமும் நடு வீட்டுக்குள் இருக்காது என்றெல்லாம் அளந்துவிட்டேன். என்னே ஆச்சரியம், அடுத்த வாரமே அமுதவிஷா வீட்டில் புதிதாக ஒரு நாய் வந்துவிட்டது. அதுவும் ஒரு கவூடுள் நாய். இதுதான் அவளது நாறக் குணம். எங்கள் வீட்டில் ஐபொன் வாங்கினால் அவள் ஐபொன் புரோ வாங்குவாள். நான் டொயோட்டோ கொரொல்லா வாங்கினால் அவள் ராவ்4 வாங்குவாள். நான் சாயிலா பானுவைக் காதலித்துக்கொண்டிருந்த காலத்தில் அந்த விசம் பல்கலைக்கழகத்தில் தன்னோடு கூடப்படித்த சவுதி அரேபிய முஸ்லிம் பெடியனை விறுமாப்பில் கொஞ்சநாள் சைட் அடித்துக்கொண்டிருந்தது. நல்ல காலம் அவன் படித்து முடித்ததும் எண்ணெய் விற்க ஊருக்குப் போனதில் விஷம் கடைசியில் ஒரு சிங்களப் பெடியனைக் காதலித்து இருவரும் ஒன்றாக இப்போது வாழ்ந்து வருகிறார்கள். அம்மாவும் அப்பாவும் கூட அதற்கு ஒன்றும் சொல்ல வில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அந்தச் சிங்களப்பையனின் பெயர் பெர்னாந்தோபிள்ளை. பெயரைக் கேட்டதும் என் அப்பன் நாராயணன் பிள்ளைக்குச் சந்தோசம் தாளவில்லை. இரண்டாவது காரணம் அவன் என் அம்மாவைப் பார்த்ததுமே ‘அன்ரி நீங்கள் மாதுரி டீக்ஷிட்போல இருக்கிறீர்கள்’ என்று டபக்கென்று சொல்லிவிட்டான். சொல்லப்போனால் ‘that’s a pretty shitty assessment. ஆனாலும் உத்திவேலை செய்துவிட்டது. உடனேயே ‘அந்தப் பிள்ளை ஒரு நல்ல பிள்ளை’ என்று இருவரும் சொல்லிவிட்டார்கள். அமுதவிஷமும் பெர்னாந்தோபிள்ளையும் புதிதாக வீட்டுக்குள் குடிபுகுந்தபோது எல்லாமே எம் வீட்டில் இருப்பதுபோலவே வாங்கினார்கள். எங்களிடம் ஒரு சோனி டிவி இருந்தது. அவர்களும் அதே டிவி வாங்கினார்கள். பத்து இஞ்சி பெரிதாக. எங்களிடம் சாம்சங் துவைப்பான் இருந்தது. அவர்களும் அதையே வாங்கினார்கள்.

கேவலம் என்னவென்றால் நாங்கள் அமேசனின் ஓர்டர் பண்ணிய மஞ்சள் நிற பிரிட்ஜ் தவறுதலாக பச்சை நிறத்தில் வீட்டுக்கு வந்துவிட்டது. இனி அதை எப்படி ரிட்டேர்ன் பண்ணுவது என்று தெரியாமல் நாங்கள் அப்படியே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அது தெரியாத விசம் அதே பச்சை நிறத்தில் பாரிய இரடைக்கதவு பிரிட்ஜை தன்வீட்டிலும் வாங்கிவிட்டது.

இப்படிப்பட்ட அமுதவிசத்திடம் நாய வாங்கும் விசயத்தைச் சொன்னது என் தவறுதான். ஆனால் உளறிவிட்டேன். விளைவு அடுத்த வாரமே பீநட் வந்துவிட்டது. பீநட்தான் அந்த நாயின் பெயர். இதுவும் நவஉ. தவறுதான். பேசும் போது நாங்கள் எங்கள் நாய்க்குக் கோகனட் என்று பெயர் வைக்கலாம் என்று சொல்லியிருக்க வேண்டும். அமுதவிசம் உடனே தன் நாய்க்கு பீநட் என்று பெயர் வைத்துவிட்டது. விசமும் நவஉ. சிங்கள மச்சானும் பீநட் பீநட் என்று அதனைக் கொஞ்சுவார்கள். அதுவேறு லொக்டவுன் காலமென்பதால் சூமில்தான் முதன் முதலில் அவர்கள் பீநட்டை எமக்குக் காட்டினார்கள். எனக்கோ பயங்கரக் கடுப்பு.

சாயிலா அவர்கள் பீநட்டை காணொளியில் காட்டும்போது வேறு திரையில் டானியல் ஆன்றூசின் பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இப்போது சாயிலாவின் ஆதங்கம் புரிகிறதா? அமுதவிசம் நாய வாங்கியபிறகு நாமும் நாய வாங்கினால் நமக்கென்ன மரியாதை என்பதுதான் அவளது அடிப்படை வாதம்.

“அந்தக் கச்சானிண்ட மூஞ்சியைப் பார்க்கவே சகிக்கல. இதில இவர் தேங்காய் ஒண்டைக் கொண்டுவரப்போகிறாராம்”

கடுப்பில் சாயிலாபானு பீநட்டையும் கோகனட்டையும் தமிழ்ப்படுத்திவிட்டாள். புரிகிறது. சிலர் கச்சான் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பீர்கள். அவர் களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். முதலில் தமிழ் என்பதே ஒரு தமிழ் வார்த்தையா? தொல்காப்பியத்தில் தமிழ் என்ற சொல் இருக்கிறதா என்ன? ஓகே. சில வேலையற்றதுகள் ஓடிப்போய் அந்த ஆராய்ச்சியைச் செய்யட்டும். நாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவோம்.

இப்போது நாம் வீட்டிலே நாயை வாங்கி வளர்க்கமுடியாது என்று ஆகிவிட்டதா? சரி அதற்கென்ன, ஒரு பூனையை வளர்க்கலாம் என்று நாம் ஏகமனதாக முடிவெடுத்தோம். இஸ்லாத்திலும் நாய் தான் கூடாது, பூனை நல்லது என்று ஒரு கோட்பாடு இருப்பதால் சாயிலா பானுவுக்கும் இன்ஸ்டகிராமில் பூனைப்படம் போடும்போது பிரச்சனைகளும் வரப்போவதில்லை. யாரோ பெயர் முகம் தெரியாத நாயெல்லாம் வந்து ‘நீ எப்படி நாய்ப்படம் போடலாம்?’ என்று சொல்லும் அறிவுரையைக் கேட்கவேண்டியதில்லை. அதனால் பூனை வசதியானது என்பது அவளது எண்ணம்.

எனக்குமே பூனைதான் பொருத்தமானது என்று தோன்றியது. நவஉ. குணத்தோடு பூனையின் குணம்தான் பொருந்தியும் போகும். பேசிக்கலி நாய் நல்லது. அன்பு பாராட்டுவது. அதற் குத் தன்னலம் என்பதே கிடையாது. தன் எசமானரைத் திருப்திப்படுத்துவது மாத்திரமே அதனது இருத்தலின் பிழைப்பு. பிறவிப்பயன். தன் விழியால் பிறருக்கு அழும் அலாதியான மிருகம் அது. ஆனால் நானோ என் சோகத் துக்குக்கூடப் பிறர் அழவேண்டும் என்று யோசிப்பேனே ஒழிய நான் அழ மாட்டேன். ஆனால் பூனை அப்படிப்பட்டதல்ல. அது ஒரு கிருமி. பூனையைப் பொறுத்தவரையில் அதற்குத் தான்தான் இந்தப் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி என்ற எண்ணம் எப்போதுமிருக்கும். மீதி எல்லாமே அதற்காகத் தோன்றி சேவை செய்ய வந்தவை என்பதுதான் அதன் நம்பிக்கை. எல்லாப்பூனைகளும் “I think therefore I am” என்று சொல்லிக்கொண்டே அலைகின்றன. சொல்லப்போனால் வீடுகளில் யாருமே பூனையை வளர்ப்பதில்லை. பூனைதான் அவர்களை வைத்து தன்னை வளர்த்துக்கொள்கிறது. கண்ணை மூடினால் பூனைக்கு உலகமே இருண்டுவிடும் என்று கேலியாகச் சொல்வார்கள் அல்லவா? ஆனால் அதுதான் உண் மை. அது எப்படி எனக்குத் தெரியும் என்கிறீர்களா? ஏனெனில் கிட்டத் தட்ட நானும் அப்படிப்பட்டவன்தான். நானொரு பூனை. எந்தளவுக்கு ஒரு பூனை என்றால் இன்னொரு பூனை இந்த வீட்டினுள் வந்தால் என்னுடைய செல்வாக்கு குறைந்துவிடும் என்று நினைக்குமளவுக்கு ஒரு பூனை. ஒரே கவசத்தில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது அல்லவா? ஆனாலும் இப்போதுள்ள நாய் வளர்க்கமுடியாத சூழலில் பூனை பரவாயில்லை என்றே தோன்றியதால் பூனைக்குச் சம்மதம் கொடுத்துவிட்டேன். சாயிாலவுக்கோ இரட்டிப்புச் மகிழ்ச்சி.

அப்படித்தான் பிள்ளை எங்கள் வீட்டுக்கு வந்தான்.

பிள்ளை ஒரு கறுவல் குட்டி. அங்கேயே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் சிவலையான குட்டியைத்தான் முதலில் சாயிலா தேர்ந்தெடுத்தாள். ஆனால் நான் விடாப்பிடியாக மறுத்துவிட்டேன். ஏனெனில் நான் கொஞ்சம் கறுப்பு. அதனால் வீட்டுக்குள் வரும் பூனை என்னைவிடக் கறுப்பாக இருக்கவேண்டுமென்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். உன்னைவிடக் கறுப்பாக வேண்டுமென்றால் கரிச்சட்டியைத்தான் வளர்க்கவேண்டும் என்று சாயிலா சொன்னாள். இப்படி நிறத்தை வைத்து அவமரியாதை செய்யலாமா என்று கேட்டேன். வெள்ளைக்காரர்கள் செய்தால்தான் தவறு. தான் செய்யலாம் என்று அதற்கும் ஒரு பதில் வந்தது. எல்லாவற்றுக்கும் சாயிலா பானுவிடம் ஒரு பதில் இருக்கும். அல்லது அவளிடன் பதிலிருக்கும் கேள்விகளை மாத்திரமே நான் கேட்டுப் பழகிவிட்டேனோ என்னவோ. எப்படியோ இரண்டு மூன்று இடங்கள் அலைந்து கடைசியில் ஒரு கட்டக் கறுவல் பூனைக் குட்டியை சாயிலா தேர்ந்தெடுத்தாள். உண்மையில் அவளுக்குத்தான் என்னைவிடக் கறுவலைப் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் அதை அவள் இலேசில் ஒப்புக்கொள்வதில்லை.

அடுத்தது பெயர் வைக்கும் படலஉ;. எனக்கு இந்தப் பெயர் விசயத்தில் அத்தனை படைப்பாற்றல் கிடையாது. அந்தக் கோகனட் பெயர் கூட அலுவலக நண்பி ஒருத்தியின் பூனையுடைய பெயர்தான். நான் அந்தக் கறுவலுக்கு சிம்பா எனப்பெயர் வைக்கலாம் என்று சொன்னேன். ஆனால் சாயிலா சிம்பா ஒரு சிங்கம், அதன் பெயரை பூனைக்கு எப்படி வைப்பது என்று விட்டாள். ஒரு அழகான தமிழ்ப்பெயரை வைக்க வேண்டுமென்று அவள் வாதிட்டாள். சரி என்று நம் இலக்கியத்தில் பூனைகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தேடினேன். அசோகனின் வைத்தியசாலையில் மாத்திரம் கொலிங்வூட் என்று ஓர் பூனை வந்தது. மற்றபடி பழந்தமிழ் இலக்கியத்தில் யாருமே பூனைக்குப் பெயர் வைப் பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்று தோன்றியது. எடுபட்டுத் திரியும் கழுதைக்கு பெயர் வேறு ஒரு கேடா என்று நம் முன்னோர்கள் யோசித்திருக்கக்கூடும். பூனையை அவர்கள் வெருகு, வெருக்கு, பிள்ளை, பூசை என்று வேறு பல பெயர்களில் அழைத்திருக்கிறார்கள். ஆனால் ஏனோ பூனையை பூனை என்று அழைக்கவேயில்லை. இதைக்கேட்ட உடனேயே சாயிலா பானுவின் முகம் அகமலர்ந்துபோனது.

“பிள்ளை என்று வைக்கலாமா? ஸோ கியூட்”

“என்னடி சொல்றாய்? பிள்ளையா? நாராயணன் பிள்ளை பெயரை ஒரு பூனைக்கு வைப்பதா? அப்பா கோவிக்கப்போறார்”

“ம்ஹூம், மனுசன் சந்தோசப்படுவார். பெர்னாந்தோபிள்ளைக்கு ஓகே

சொல்லவில்லையா அவர்?”

எனக்கென்றால் இந்தப் பெயர்ஆராய்ச்சியை சாயிலா பானு முதலிலேயே செய்துவிட்டுத்தான் என் னிடம் தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று அலப்பறை பண்ணினாளோ என்ற சந்தேகம் வந்தது.

“கலரை உங்கட இஷ்டத்துக்கு விட்டனான். அதால பெயரை நான்தான் வைப்பன். பிள்ளைதான் பைனல்.”

அவ்வளவுதான். அவள் பிள்ளையைத்தூக்கி மடியில்வைத்து காதில் மூன்றுமுறை ‘பிள்ளை, பிள்ளை, பிள்ளை’ என்று உச்சரிக்க எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வந்துவிட்டது.

இப்போதுதான் சிக்கல் வெடித்தது. ஏதோ பிள்ளை வேண்டுமென்ற ஆசையில் அதைக் கொண்டுவந்துவிட்டோமே ஒழியப் பிள்ளை வளர்ப்பு எவ்வளவு கடினம் என்பது பின்னர்தான் தெரியவந்தது. நாங்கள் நிக்காஹ் செய்த இந்த ஐந்து வருடங்களில் கண்ட கண்ட நாய்களெல்லாம் எம்மைப்பார்த்து ‘எங்கே பிள்ளை? எப்போ பிள்ளை?’ என்று கேட்டுத் தொந்தரவு பண்ணிக்கொண்டிருந்தன. அதனால் வீட்டில் பிள்ளை வந்த பின்னர் அதுகள் எல்லாம் ஆர்வத்தோடு வீடு தேடி வந்து பிள்ளைக்குக் கக்கா துடைத்து, குளிப்பாட்டி, நித்திரையாக்கி வளர்த்தெடுக்குமென்று நாம் நம்பினோம். ஆனால் அத்தனை நாய்களும் அப் புறம் வேறு பிள்ளையில்லா சோடியிடம் போய்க் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனவே ஒழிய எங்கள் வீட்டுப்பக்கம் எட்டிப்பார்க்கவேயில்லை. எமக்கென்றால் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

முதலில் பிள்ளை கண்ட கண்ட இடத்தில் எல்லாம் கக்காவும் சிச்சாவும் இருந்தது. வீட்டின் கார்ப்பற் நாறியது. சரி வேண்டாம் என்று வெளியே கொண்டுபோய் விட்டால் சீவன் போவதுபோல அது அழுது ஆர்ப்பாட்டம் செய்தது. நான் வேலையில் பிஸியாக இருக்கும்போது காலடியில் வந்து கிடந்து தன் வயிற்றைத் தடவிவிடுமாறு கட்டளை இட்டது. இரவு உணவுக்குப் பின்னர் நானும் சாயிலாவும் உட்கார்ந்து டிவி பார்க்கும்போது அது நடுவில் வந்து உட்கார்ந்துவிடும். நான் ஆசையில் சாயிலாவை அணைத்து முத்தமிட நெருங்கினால் அந்தக் கழுதை தன் முன்னங்காலால் நவஉ. கன்னத்தை விளாசிவிடுகிறது. இந்தப்பிரச்சனை கட்டில் வரை வந்துவிட்டது. கொஞ்ச நாளிலேயே பிள்ளையும் சாயிலாவும் நம் கட்டிலில் படுக்க நான் விருந்தினர் அறைக் கட்டிலுக்கு ஷிப்ட் ஆகிவிட்டேன். பூசை சமயம் இந்தப் பூசை கரடியாட்டம் குறுக்கே வந்துவிடும். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால் பிள் ளையைக் கொண்டுபோய் கராஜில் நின்ற மகிழுந்துக்குள் அடைத்தால்தான் முடியும் என்ற நிலை எங்கள் வீட்டில் வந்துவிட்டது. அப்போதும்கூட எங்கள் பிள்ளை கடுப்பில் அந்த மகிழுந்தை என்ன செய்து வைத்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அடுத்த முக்கிய பிரச்சனை desexing இல் வந்தது. அதாவது எங்கள் தமிழில் சொல்லுவதென்றால் பிள்ளைக்கு நலமடிப்பது. எனக்கு இதிலே சம்மதமேயில்லை. அடிப் படையில் நான் விலங்குரிமைவாதி. ஒரு மிருகத்துக்கு நலமடித்துவிட்டு உன் நல்லதுக்குத்தான் செய்தேன் என்று சொல்லுவது, ஊர் முழுதும் ஆர்மி சென்றியைப் போட்டு, இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கிவிட்டு உங்கள் நன்மைக்குத்தான் செய்தேன் என்று சொல்வதற்குச் சமம். அதுவும் நவஉ. பிள்ளையை நானே நலமடிப்பதா என்று எனக்குப் பயங்கர கோபம். இன்னொரு முக்கிய காரணம் நலமடிப்பதற்கு எப்படியும் இருநூறு டொலர்கள்வரை செலவாகும் என் பது. ஆனால் அதை நான் மறந்தும் சாயிலாவுக்கு சொல்லவில்லை. என் தொடர்ச்சியான பிடிவாதத்தால் ஈற்றில் பிள் ளையைப் பிள்ளையாகவே விட்டுவிட சாயிலாவும் சம்மதித்துவிட்டாள்.

ஆனால் பிரச்சனை அப்புறம்தான் ஆரம்பித்தது.

வீட்டுக்கு வந்து நான்கே மாதங்களில் பிள்ளை அக்கம் பக்கமிருந்த வீடுகளுக்கு வேலி தாண்ட ஆரம்பித்துவிட்டது. சமயத்தில் வேறு பல பூனைகளும் எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தன. எங்கள் வீட்டுப் பிள் ளையை நாம் சரியாக வளர்த்தாலும் வெளியிலிருந்து வரும் பிள் ளைகள் எம் முற்றத்துப் புற்தரையில் கக்கா இருக்க ஆரம்பித்தன. வீட்டுப் பின்வளவின் சாயிலா ஆசை ஆசையாக ஓர் ஆப்பிள் மரத்தை அப்போது தான் நட்டு வளர்க்க ஆரம்பித்திருந்தாள். இந்தப் பூனைகள் அதனடியில் வந்து தங்கள் வரலாற்றை எழுதிவைத்துவிட்டுப் போக ஆரம்பித்தன. ஒருநாள் பொறுக்கமுடியாமல் நான் பூனைகளை எப்படித் துரத்துவது என்று இணையத்தில் தேடியபோது அவற்றுக்கு லாவண்டர் வாசமென் றால் ஒவ்வாமை என்பதை அறிந்தேன். உடனேயே நான் பன்னிங்ஸ் கடைக் குச் சென்று லாவண்டர், எலுமிச்சம் பழச்சாறு அடைத்த போத்தல்களை வாங்கி வந்து வேலிக்கரை முழுதும் தூவிவிட்டேன். இரண்டு நாட்களுக்கு எந்த எடுபட்ட பூனைகளும் நம் வீட்டுக்கு வரவில்லை. பிள்ளைகூட வீட்டுக்குள்ளேயே பதுங்கிவிட்டது. ஆனால் பின்னர் ஒரு மழை பெய்து எல்லா வாசத்தையும் கரைத்து விட மறுபடியும் பூனைகள் வளவுக்குள் வரத்தொடங்கின. அதைவிட எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த போர்த்துக்கேயன் எங்கள் வீட்டுக்கு வந்து பிள்ளை அவர்கள் வீட்டு வளவில் கக்கா இருப்பதாக முறைப்பாடு செய்தான். இதற்குமேல் சமாளிக்கமுடியாது என்று எங்கள் பிள்ளைக்கு நலமடிக்கலாம் என்று நான் கடைசியில் ஒரு வழிக்கு வந்துவிட்டேன். மிருக வைத்திய நிலையத்துக்கு அழைப்பெடுத்து வார இறுதியில் சத்திர சிகிச்சைக்குப் பதிந்தும் விட்டேன்.

அதை அறிந்தோ என்னவோ, அடுத்த நாளே பிள்ளை வீட்டைவிட்டு ஓடிவிட்டது.

அப்புறமென்ன? எங் குத் தேடியும் அதனைக் காணக்கிடைக்கவில்லை. பிள் ளையின் படத்தை லாமினேட் செய்து, ‘காணவில்லை’ என்று எழுதிச் சுற்று வட்டாரம், பல்பொருள் அங்காடி முகப்பெல்லாம் ஒட்டிவைத்தோம். காவல் துறையிடமும் புகார் கொடுத்தோம். ஆனால் போன பிள்ளை போனதுதான். இரண்டு வாரங்கள் பயங் கரக் கவலையாக இருந்தது. பிள்ளை இல்லாத நம் வாழ்வை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பிள்ளை எம்மோடு இறுதிவரை கூடயிருந்து நம்மை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என்று நம்பியிருந்தோம். ஆனால் திடீரென்று ஒரு நாள் அது குடை துலைவதுபோல துலைந்துபோனது. ஆனால் கடவுள் நம்மைக் கைவிடவில்லை. பிள்ளை தொலைந்த மூன்றாவது வாரமே நல்லூரான் அருளிள், சாயிலாவைக் கேட்டால் அல்லாவின் கருணை என்பாள், எது எப்படியோ, நல்லவிசயம்,

என் மனைவி சாயிலா பானு கருத்தரித்துவிட்டாள்.

எனக்கென்றால் பயங் கரச் சந்தோசம். இந்த சேகர் நாராயணன் பிள்ளைக்கு உண்மையிலேயே ஒரு வாரிசு உருவாகிவிட்டது. ஸ்கான் பண்ணியும் பார்த்துவிட்டோம். ஆண் வாரிசு. அதற்கு முதல் சொத்து எல்லாவற்றையும் பிள்ளைக்கு, அதாவது காணாமற்போன பிள்ளைக்கே எழுதுவதாக யோசித்திருந்தேன். இப்போது நிஜத்திலேயே ஒரு மனித வாரிசு. சந்தோசம் என் றால் அப்படி ஒரு சந்தோசம். அதனால் பெயரையும் சந்தோஷ் நாராயணன் பிள்ளை என்று வைக்கலாமென்றே யோசித்தேன். ஆனால் வழமைபோல சாயிலா சம்மதிக்கவில்லை. அவள் பிள்ளைக்கு ஏ ஆர் ரகுமான் என்று வைக்கலாம் என் றாள். எந்த முடிவும் எட்ட முடியாமல் நாட்கள் நகர ஆரம்பித்தன. சாயிலா பானுவும் நிறைமாதக் கர்ப்பிணியாகிவிட்டாள்.

இந்தச்சூழலில்தான் ஒருநாள் அமுதவிஷா அந்தப் பெர்ணாந்தோ புள்ளேயுடன் வீட்டுக்கு வந்தாள். அவர்களோடு அந்தக் கச்சானும் வந்திருந்தது. வழமைபோல பலதும் பத் தும் பேசிக்கொண்டிருந்தோம். கச்சான் எங்களது வரவேற்பறை துருக்கிய கார்ப்பற்றைத் துவம்சம்

செய்துகொண்டிருந்தது.

அதைப்பார்த்துக்கொண்டிருந்த

கடுப்பில் திடீரென்று நான் தங்கையிடம் சொன்னேன்.

“அமுதவிஷா எவ்வளவு காலம்தான் நீங்கள் இரண்டுபேரும் தனியாவே இருப்பீங்கள்? வயது போனால் பிறகு நினைச்சாலும் செய்ய ஏலாது. எப்ப எங்களுக்கெல்லாம் நல்ல நியூஸ் சொல்லி டிறீட் தரப்போறீங்கள்?”

அவளுக்குக் கோபம் வரவேண்டுமென்று தான் நான் கேட்டேன். ஆனால் ஆச்சரியமாக அமுதவிசம் வெட்கப்பட்டது. பக்கத்தில் நின்ற பெர்ணாந்தோபுள்ளேயின் கைகளைப் பற்றிக்கொண்டது.

“அண்ணா நானும் இப்ப பிரக்னண்ட்தான். ஆம்பிளைப்பிள்ளை. பெயர்கூட முடிவு செய்துவிட்டோம்”

நான் அதிர்ந்து போனேன். சாயிலா பானு வின் முகத்தில் ஈயாடவில்லை. அவள் சடக்கென்று டென்சனாகிக் கேட்டாள்.

“என்ன பெயர் அது?”

அமுதவிசம் மேலும் வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னது…

“அனிருத் பெர்ணாந்தோ பிள்ளை”

ஜேகே


91 பார்வைகள்

About the Author

ஜேகே

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்