Arts
10 நிமிட வாசிப்பு

இக்கணம்

February 6, 2025 | ஜேகே

எங்கள் வீட்டின் பின் வளவில் சிறு புற்தரை ஒன்றுண்டு. அதன் நடுவே பறவைகள் நீர் அருந்தவும் நீராடி மகிழவும் எனச் சிறு நீர்த்தொட்டி ஒன்றை வைத்திருக்கிறோம். வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அந்தத் தொட்டியைத் தேடிப் பலவிதமான பறவைகள் வருவதுண்டு. பச்சைக் கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், புறாக்கள், மக் பைகள், கொக்கடூகள், புலுனிக்குஞ்சுகள், மைனாக்கள், காகங்கள், பலாக்கொட்டைக் குருவிகள் என்று அவற்றின் பெயர்களைச் சரியாக அறிந்துகொள்ளவே எனக்கு வருடக்கணக்கானது. குளிர் காலத்தில் அவற்றைப் பெரிதாகக் காணக்கிடைப்பதில்லை. எம்மைப்போலவே அவையும் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்தியபடி மூச்சுப்பேச்சு இல்லாமல் குறண்டிக்கொண்டு தூங்கும்போல. அவ்வப்போது உணவுக்காக வெளியே எட்டிப்பார்த்தாலும் வந்தார்கள், தின்றார்கள், சென்றார்கள் என்பதாகத்தான் அவர்களின் நடமாட்டம் இருக்கும்.  

ஆனால் குளிர்காலத்தின் கடைக்காலம் வந்தாற்போதும். நிலைமையே தலைகீழாகிவிடும். இந்த நிலத்தில் வசந்தம் வெயிலையும் குளிரையும் மழையையும் ஒருசேர அழைத்து வரவல்லது. அவற்றோடு கூடவே எங்கோ ஓடி ஒளிந்திருந்த அந்தப் பறவைகளையும் அது வெளியே இழுத்து வரும். பறவைகளுக்குப் பின் குளிர் பருவம்தான் கூடற்பொழுது. அதனால் ஊரே இந்திர விழாக்கோலம் பூண்டு நிற்கும். அங்கு பறவைகளின் ஆட்டமும் பாட்டமும் ஒரே களேபரமாக இருக்கும். திருவிழாக் காலங்களில் ஹால்ப் சாரிகளுக்குப் பின்னே சுற்றித்திரிகின்ற அரை முழத்து வேட்டிகள்போல இங்கும் ஆண் பறவைகள் எல்லாம் பெண் பறவைகளுக்குப் பின்னாலே பிரதிட்டை அடித்துக்கொண்டு திரியும். கிளி கீச்சு கீச்சு என்று பேசியே மயக்கிவிட வல்லது. சில புலுனிகள் வேகமாக நடனம் ஆடிப் பெண்களை மகிழ்விக்க முயற்சி செய்யும். ஆனாலும் சில பெண் புள்ளினங்கள் இந்தப் புரட்டுகளுக்கெல்லாம் இலகுவில் மசிந்துபோவதில்லை. பிகு பண்ணும். கொக்கட்டுகளின் நிலைதான் பரிதாபமானது. அவற்றின் குரலைச் சகிக்கவே முடியாது. ஆனாலும் அவற்றுக்குத் தமக்கு சிரேயா கோசல் குரல் என்ற நினைப்பு. பாடிப் பரிசு கெட்டுக்கொள்ளும். இன்னும் சில பறவைகள் இருக்கின்றன. குறிப்பாக இந்திய மைனாக்கள். குச்சியும் தும்பும் சேர்த்து, பெரிதாக ஒரு மாளிகைக் கூடு கட்டி, அதற்கு முன்னால் கோர்ட் சூட் போட்டுப் படம் எடுத்து பெண்ணை மயக்கப் பார்ப்பவை. பறவைகளின் கூடல் பொழுது என்னவோ கண நேரம்தான். அந்த ஒரு கணத்துக்காக அவை நாள் கணக்கில் படும் பாட்டைப் பார்த்தால் சமயத்தில் பாவமாகத்தான் இருக்கும்.

வசந்தம் முழுமையாக மலரும் பொழுதினில் இந்திரா விழா அமளிகள் எல்லாம் ஓய்ந்து, இன்னாருக்கு இன்னார் என்பதெல்லாம் தீர்மானமாகிவிடும். காதலாகிக் கசிந்து உருகி ஓதுவார்களில் எவர் நனி சிறந்தவர் என்பதைப் பெண் இறுதி செய்துவிடுகிறாள். அப்புறம் அவசர அவசரமாகக் கூடல். கூடல் முடிய, கூடும் கட்டி முடிய, முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சுகளைப் பொரித்து அவற்றை வளர்க்க ஆரம்பித்து விடுவர். குஞ்சுகளுக்கு இரை தேடுவது, ஆபத்துகளிலிருந்து அவற்றைப் பாதுகாப்பது, அவற்றுக்குப் பறக்கக் கற்றுக்கொடுப்பது என்று தம் குஞ்சுகளின் வளர்ப்பிலேயே அடுத்த சில மாதங்கள் அவற்றுக்கு ஓடிவிடும். அப்போதெல்லாம் குளிர் பருவத்தின் இறுதி நாட்களில் தாம் ஆடிப் பாடி மகிழ்ந்து கழித்த நாட்கள் அப்பறவைகளுக்கு நினைவில் வந்துபோகுமோ என்பது சந்தேகம்தான்.

அது ஒரு வீங்கு இளவேனில் நாள் ஒன்று. 

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. மெல்பேர்னில் மழை ஒருபோதும் ஓவென்று ஒப்பாரி வைக்காது. மிருதுவாகப் பன்னீர்போலத் தூவும். மழை வருது, மழை வருது, குடை கொண்டுவா என்ற இளையராஜா பாடல்போல. அந்தப் பாடலின் தழுவல்போலத்தான் இந்த நிலத்தின் மழையும் இருக்கும். நான் யன்னல் திரையை ஏற்றிவிட்டு வழமைபோலத் தேநீருடனும் புத்தகத்துடனும் இருக்கையில் அமர்ந்தேன்.

அப்போது பின் வளவு நீர்த்தொட்டியில் மைனா ஒன்று செட்டையை அடித்து நீராடிக்கொண்டிருந்தது. யன்னல் திரை ஏறியதைப் பார்த்ததும் என்னை அது ஒரு கணம் உற்றுக் கவனித்தது. பின்னர் என்ன நினைத்ததோ தெரியாது, இன்னமும் ஆர்ப்பாட்டமாகக் குளிக்க ஆரம்பித்தது. ஒரு கணம் அது தொட்டிக்குள் முற்றாக முங்கி வெளியே வரும். பின்னர் தொட்டியின் கரையில் நின்று சட சடவெனச் செட்டையை உதறித் தண்ணீர்த் திவலைகளை வீசியடிக்கும். நான் தன்னைப் பார்க்கிறேனா என்பதை உறுதிப்படுத்திவிட்டு ஒரு பக்கமாகத் தொட்டிக்குள் சரிந்து வீழும். பின் எழுந்து அடுத்த பக்கச் செட்டையை மாத்திரம் உதறும். திடீரென்று இரண்டு இறக்கைகளையும் அகல வைத்து மழையில் நனையும். இப்படி இந்தக் காலைக் காட்சி தொடர்ந்து பதினைந்து நிமிடங்களாக நிகழ்ந்துகொண்டேயிருந்தது. இதற்கிடையே அதன் இணை மைனாவும் அங்கு வந்து சேர்ந்தது. இவர்கள் இருவரும் கட்டிய கூடு எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்துக் கூரை வடிகாலுக்கு மேலே இருக்கிறது. அங்கே ஐந்தாறு குஞ்சுகளும் பிறந்திருக்கிறார்கள். எங்கள் வீட்டு அனெக்ஸில் தங்கியிருப்பதுபோலத்தான் அவர்களின் நடவடிக்கைகள் அமையும். நான் புல்வெளிக்குள் இறங்கினாலும் அவை அச்சமுற்றுப் பறப்பதில்லை. நீ உன் வேலையைப்பார், நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்பதுபோல அவை நகர்ந்து செல்லும். நான் புல் வெட்டும்போது எனக்குப் பின்னாலேயே வந்து மண் புழுக்களைத் தேடித் தின்னும். நான் வெளியே நாற்காலி போட்டு அமர்ந்தால் என்னருகே வந்தமர்ந்து பருப்புத் தீனி தாடா என்று அதிகாரத்தோடு கேட்கும். எங்களது வீட்டில் அவர்களது குடும்பம் வாழ்கிறது. அவர்களது வீட்டில் எங்களது குடும்பம் வாழ்கிறது.

இப்போது இரண்டு மைனாக்களும் சேர்ந்து நீராடத் தொடங்கினார்கள். மழை இன்னமும் துமித்துக்கொண்டிருந்தது. ஜேசுதாஸ் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் என்று சரணத்துக்குத் தாவியிருந்தார். அந்த மைனாக்களுள் ஒன்று குரலெடுத்துப் பாட ஆரம்பித்துவிட்டது.

உனது தோளில் நான் பிள்ளைபோல உறங்கவேண்டும், கண்ணா, வா. 

இரண்டும் ஏகச் சமயத்தில் அந்த நீர்த்தொட்டிக்குள் சரிந்து இறங்கின. இங்கொருவன் உட்கார்ந்து தம்மை விடுப்புப் பார்க்கிறானே என்ற பிரக்ஞை அவற்றுக்கு இல்லை. இனியும் பார்த்துக்கொண்டிருந்தால் எனக்கும் அது அழகு இல்லை. 

இந்த மழையில் அருகிலிருந்த கடையில் கோப்பி வாங்கிக் குடித்துக்கொண்டு ஒரு சுற்று நடந்தால் நன்றாக இருக்கும்போலத் தோன்றியது. நான் ஊற்றிய தேநீரை அப்படியே வைத்துவிட்டு, எழுந்து உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டேன். மழை சற்று அடங்கியிருந்தாற்போல. மழை பெய்து அடங்கிய நிலத்தில் பறவைகளின் ஒலி எப்போதும் தெள்ளெனக் கேட்கும். இயர்போனில் கேட்கும் ஏ. ஆர். ரகுமான் இசைபோல. நான் நடந்து செல்லும்போது ஒரு பக்கம் பிங்க் நிறத்துக் கொக்கட்டூகளும் மறு பக்கம் வெள்ளி நிறக் கொக்கட்டூகளும் கொக்கரித்துக்கொண்டிருந்தன. ஆங்காங்கே யூகலிப்டஸ் மரங்களின் பச்சை இலைகளுக்கு நடுவே பஞ்ச வர்ணக் கிளிகள் பூத்துக் குலுங்கிக் கீச்சிக்கொண்டிருந்தன. திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த மக் பை பறவை ஒன்று என் தலையை முட்டி எச்சரித்துச் சென்றது. நான் திடுக்கிட்டுத் திரும்புகையில் அது மறுபடியும் சுற்றிச் சுழன்றடித்துக்கொண்டு என்னை நோக்கி வந்தது. குண்டு விமானங்கள் பதிவதுபோல. ஆண் மக் பைதான். மேலே மரத்து உச்சிக் கூட்டினுள் பெண் முட்டை பொரித்திருக்கவேண்டும். அதனால் இவர் வீதியால் போன என்னிடமிருந்து குஞ்சுகளைக் காக்கிறாராம் என்ற பெயரில் என்னைத் தாக்குகிறார். நான் மேலும் வேகமாக நடக்க, அது மறுபடியும் தாக்க வந்தது. எனக்குச் சின்னதாகப் பதற்றம். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த நொய்சி மைனர் (noisy miner) பறவை இந்த மக் பையைத் தாக்க ஆரம்பித்தது. நொய்சி மைனர் அளவில் சிறியது. பார்த்தால் சுரங்கப் பணியாளர் உடைபோலத் தூசுப் புழுதி நிறத்தில் இருப்பதால் அதனை மைனர் என்று அழைக்கிறார்கள். ஆளின் சத்தம் ஊரை எழுப்பக்கூடியது என்பதால் நொய்சி என்ற பெயரும் முன்னே குந்திவிட்டது. அளவில் சிறியது என்றாலும் அதன் கூச்சலாலும் படக்கென்று இறக்கை அடித்துப் பறக்கும் வித்தையாலும் பெரிய மக் பை பறவைகள்முதல் வளர்ப்பு நாய்கள்வரை எல்லோரையும் அது மிரட்டி வைத்திருக்கும். இப்போது இந்த மக் பை என்னைத் தாக்க வரும்போது, அது தன்னைத்தான் தாக்க வருவதாக நினைத்த மைனர் மக் பையோடு சண்டைபோட ஆரம்பித்துவிட்டார். இப்படி இவை இரண்டும் அடிபட்டுக்கொண்டிருக்கையில் நான் துரிதமாக அவ்விடத்தைக் கடந்து சென்றேன்.

அடுத்து சிறு குளம் ஒன்று. அங்கு ஏராளமான வாத்துகள், அன்னங்கள், நீர்க்காகங்கள், தாராக்கள், பெயர் உச்சரிக்கக் கடினமாக பல்வேறு அவுஸ்திரேலியப் பறவைகளோடு பன்னிரண்டு கூழைக்கடாக்களும் வாழ்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர்வரை அங்கே எட்டு கூழைக்கடாக்கள்தான் இருந்தன. இப்போது நான்கு புதிதாகக் குடியேறிவிட்டன. கூழைக்கடாக்கள் எப்போதும் ஒன்றாகத்தான் சேர்ந்து ஓய்வெடுக்கும். நீந்தும். ஏக சமயத்தில் எல்லாமே இரைக்காக நீரில் மூழ்கித் தலையெடுக்கும். அவ்வப்போது அவற்றுள் சில கோபித்துக்கொண்டு தனியாக வேறொரு மூலையில் சென்று உட்காருவதுண்டு. கூட்டுக்குடும்பத்திலிருந்து பிரிந்து செல்லும் இளைய பிள்ளையின் குடும்பம்போல. சில சமயம் தனியாகவும் சிலது திரியும். நான் நேரமே போவது தெரியாமல் அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பதுண்டு. பின்னர் ஐயையோ இந்த இக்கணம் தொலைந்துபோய்விடுமே என்ற அச்சத்தில் படங்களையும் காணொளிகளையும் பிடித்துத் தள்ளுவதுண்டு. 

மழைத் தூறல் நின்று ஒரு கூதல் காற்று அடிக்க ஆரம்பித்திருந்தது. யூகலிப்டஸ் மரங்களெல்லாம் சன்னமாக ஆடியதில் பூக்களும் மழைத்துளிகளும் என்மீது சொரிந்து உடை நனைந்துவிட்டது. எனக்குத் தாமரையின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் எனைத் தொடர்வதை
ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை 
மறவேனே.
முன்னும் இதுபோல ஒரு அனுபவம்
கண்டேன் எனச் சொல்லும்படி நினைவில்லை
இன்னும் எதிர்காலத்திலும் வழியில்லை
மறவேனே.
பௌதிகவியலாளரான பிரையன் காக்ஸ் சொன்னது இது. 

நம்முடைய சூரியக் குடும்பத்தில் எங்களது பூமி கொஞ்சம் சூரியனுக்கு அருகில் சென்றிருந்தால் இந்த நிலமே வெப்பத்தில் தீய்ந்துகொண்டிருந்திருக்கும். சற்றுத் தள்ளிப் போயிருந்தால் குளிரில் உறைந்து கிடந்திருக்கும். கொஞ்சம் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சுற்றியிருந்தால் நிலைமையே தலைகீழ். எல்லாமே வெறும் பத்துச் சதவீதம் மாறியிருந்தாலே இப்படியொரு உயிர் சூழ் உலகு நமக்கு அமைந்திருக்காது. எங்கள் நிலாவின் சுற்றுப்பாதை இருக்கும் இடம், எங்கோ தூரத்திலிருக்கும் வியாழனின் இருப்பு என ஒவ்வொன்றும் பூமியில் நாங்கள் வாழும் சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றுள் ஒன்றுகூட இம்மி பிசகியிருந்தாலும் இதனைப் பேச இங்கே நாம் உருவாகியிருக்கமாட்டோம். இந்தப் பிரபஞ்சம் லட்சம் கோடி கலக்சிகளால் ஆனது. வேறு எங்காவது இதேபோன்றதொரு பூமி இருப்பதற்குச் சாத்தியமுண்டு. ஆனால் அங்கு நாம் சென்று சேர்வதற்கான சாத்தியங்கள் மிக மிக அரிது. அப்படியே சென்றாலும், அடடே நாம் ஒரு புது உலகத்தைக் கண்டுபிடித்துவிட்டோமே என்று சொல்லிக் கொண்டாடுவதற்காகத் திரும்புவதற்கு நம் பூமி அப்போது உயிரோடு இருக்குமா என்பது கேள்விக்குறியே. யார் கண்டார், நாம் இந்த அண்டப் பிரபஞ்சத்தில் தனியராகக்கூட இருக்கலாம். இறந்த காலம் என்பது எம்முடைய நினைவு மாத்திரமே. எதிர்காலம் என்பது இனிமேல்தான் நம் நினைவாகப்போவது. நாம் அறியாதது. இந்த இக்கணம் இருக்கிறதே. அதை நாம் அனுபவிக்கிறோம் அல்லவா? அனுபவிப்பதை உணர்கிறோம் அல்லவா? எவ்வளவு பெரிய அதிட்டசாலிகள் நாங்கள்.

வானத்தில் பறந்துகொண்டிருந்த கூழைக்கடா ஒன்று சர்ர்ர்ரென்று நீரைத் தேய்த்தபடி குளத்திலே தரையிறங்க, அருகிலிருந்த அன்னப் பறவைகள் அதற்கு வழிவிட்டு அப்பால் நீந்திச்சென்றன. தாமரையின் பாடலை மறுபடியும் வாய் முணுமுணுத்தது.

முன்னும் இதுபோல ஒரு அனுபவம்
கண்டேன் எனச் சொல்லும்படி நினைவில்லை
இன்னும் எதிர்காலத்திலும் வழியில்லை
மறவேனே.

கோப்பிக்கடையில் என்னைக் கண்டதுமே, வணக்கம் சொல்லி சுகம் விசாரித்த நத்தாலி, நான் கேட்காமலேயே என் வழமையான கப்புசீனோ கோப்பியை ஊற்ற ஆரம்பித்தாள். நான் வாடிக்கையாளர் அட்டையை ஸ்கான் செய்துவிட்டுப் பணம் செலுத்தத் தயாரானேன்.

இன்றைக்கு உனக்கு அதிட்டத் தினம் நண்பனே. இந்தக் கோப்பி இலவசம் தெரியுமா? 

நான் பக்கென்று சிரித்துவிட்டேன். இந்த இக்கணம் நமக்குக் கிடைப்பதே அதிட்டம்தான் நட்டாலி என்றேன். அவள் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடியே கோப்பியை ஊற்றினாள். இன்றைய தினம் இனிமையாகக் கழியட்டும் என்று புன்னகையுடன் கோப்பிக் குவளையை நீட்டினாள். நான் குளத்தைச் சுற்றிய நடைபாதையினூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

மறுபடியும் மழை துமிக்க ஆரம்பித்தது. இசை தேவனின் இசைக்கு இரண்டு அன்னப்பறவைகள் தம் கழுத்தை நிமிர்த்தி எசப்பாட்டுக்குத் தயாராகின.

கடந்த காலம் மறந்து போவோம்.  
தடங்கள் சேர்த்து நடந்து போவோம்.|
உலகம் எங்கும் நமது ஆட்சி.
நிலவும் வானும் அதற்குச் சாட்சி.
இளைய தென்றல் தாலாட்டுப் பாடும்.
இனிய இராகம் கேட்கும்.
வா.

என்னை அவ்விரு அன்னப்பறவைகளும் இன்முகத்தோடு அழைத்தாற்போலத் தோன்றியது. தொடர்ந்து அவை பாடிக்கொண்டிருக்க, குளத்திடை பறவைகள் எல்லாம் இசைக்கருவிகளை மீட்டிக்கொண்டிருந்தன.

இதற்குமேல் இந்த இக்கணத்தை எங்கனம் நான் விபரிக்க?

ஜேகே


37 பார்வைகள்

About the Author

ஜேகே

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்