அவள் தன்னை ஒரு மரமென்று நினைத்திருந்தாள்
சொந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து
புதிய நிலத்தில் மீண்டும் வேரூன்றி
அந்த நிலத்து விருட்சங்களின் விதானங்களை
அண்ணாந்து பார்த்தபடி
அவற்றின் விசால நிழல்களைத் தாண்டி
சுயமாய் வளரத் துடிக்கும்
ஒரு மரமென்று தன்னை நினைத்திருந்தாள்
“நான் மரமல்ல”
அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள்
“நான் ஒரு முறிந்த கிளை.”
சொந்த நிலத்தைவிட்டு நெடுந்தொலைவில்
வந்தடையாத அந்தக்
கரையொன்றைத் தேடிக்கொண்டு
சமுத்திர அலைகளின் மேல்
மிதக்கின்ற மரக்கிளை
அவள் அலைகளின் போக்கில்
பயணித்துக்கொண்டிருக்கிறாள்
கரைகளுக்கிடையில் தேசங்களுக்கிடையில்
கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமிடையில்
அலையோடலையாய் பயணித்துக்கொண்டிருக்கிறாள்
இப்போது அவளுக்குத் தெரியும்
வீடு என்பது ஒரு நினைவு
அது ஒரு நம்பிக்கை
நினைவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும்
இடையில் எங்கேயோ
தொலைந்து போன அவள் வீடு
மீண்டும் கிடைக்காது
அவள் சமுத்திர அலைகளின் மேல்
தொலைவாயும் அருகாயும்
அலைந்துகொண்டிருக்கிறாள்
இடைநடுவில் அவள் வீடு
(Originally written in English and then translated to Tamil)