பிள்ளைப் பருவத்தில் பெரியவராய் ஆனபின்னர்
வெல்லப் பல களங்கள் காத்திருக்கும் என்று சொல்லிப்
பள்ளியிலே பயின்ற பாடங்கள் ஏதினிலும் பக்குவமாய்க்
கற்றுத் தெளியாத களமொன்று காணீரோ
ஏட்டின் அறிவும் இணைந்த பல திறன்களும்
நயந்து நாம் வளர்த்த நாட்டமும்-நாளும்
முயன்று தெளிந்த முதல் ஞானத் தத்துவமும்
இணைந்தாலும் போதாது இவ்வரசை ஆண்டுவிட
எல்லோரும் ஆள்வதற்கு இருக்கின்ற ஓரரசு
கற்காலம் முதற்கொண்டு தொடர்கின்ற பேரரசு
குடிமக்கள் முடிமக்கள் யாவர்க்கும் பொது அரசு
அவரவரே ஆளுகிற அவரவரின் இல்லத்தரசு
சந்தைக்குப் போய் வந்து சமைத்து முடித்து
அடுப்படியைச் சமைத்த சுவடின்றித் துடைத்துத்
தானே வந்தணையும் தூசி உறிஞ்சி நிலம் துடைத்து
நிமிர வெட்டாத கொல்லைப் புல் கண்ணை உறுத்தும்
புல்லறுத்துக் கூட்டிப் பூமரங்கள் முகம் பார்த்து
நல்லபடி நீரூற்றி நாவறளுதென்று சொல்லி
ஒருமிடறு மெல்ல விழுங்கமுதல் நினைவுவரும்
கட்டணம் கட்டும் நாள் கடந்த கதை
மின்சாரம், எரிவாய்வு, காப்புறுதி, கடன்
சொல்லி முடியாத ஒருநூறு சேவைகளை
ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு மதிப்பிட்டு
உற்றதிது என்று கண்டு உடன்படலோ பெரும்பாடு
மக்களின்றி ஒரு நாட்டை மன்னவரும் ஆளுவரோ
பெற்றெடுத்துப் பேணிப் பக்குவமாய் வளர்க்கும்
மக்கள் தாம் நினைத்தபடி மன்னவரை ஆட்டுவதால்
மாநிலத்தில் இதுதான் மறுக்கவொண்ணா மக்களாட்சி
தலைவனும் தலைவியும் தளர்ந்தாலும் விழுந்தாலும்
இழுத்துச் சுமந்து ஆளுகிற இவ்வரசின்
பொறுப்பைப் பகிர மக்களிடம் கேட்டாலோ
பொறுப்பெல்லாம் உமக்கு அதிகாரம் எமக்கென்றார்
மக்கள் நலச் சேவைகளே மன்னவரின் கடனென்று
உற்றதெது உகந்ததெது என்று தினந்தேடிக் கண்டறிந்து
தாமும் வளர்ந்து தம் மக்கள் தமை வளர்த்துத் தமைச் சார்ந்தோர்
நலம் தீது யாவினிலும் கூடி நின்று நிற்காமல் ஓடும் அரசு இது
உற்றவர்க்காய் உருவாக்கி மற்றவர்க்காய் தினம் ஓடி
உற்றதெது உவந்ததெது உள் நெஞ்சின் தேவையெது
கண்டறியப் பொழுதின்றிக் காலப் பெருநதியின்
வெள்ளத்தில் தொலைக்கின்ற விளங்காத ஓரரசு