Arts
10 நிமிட வாசிப்பு

இளையோர் சந்திப்பு

April 6, 2024 | அபிதாரணி சந்திரன்

Bridge The Gap

கார்த்திகை 25ம் திகதி கேசி தமிழ் மன்றம் “Bridge the Gap” என்ற ஒரு இளையோர் சந்திப்பைத் தயார்ப்படுத்தியிருந்தது. அன்று சமுதாயத்தில் பேச விருப்பப்படாத தலைப்புகளைப் பற்றிய எமது அபிப்பிராயங்களும், 40-45 வயதைக்கொண்ட சில மூத்தவர்களின் அபிப்பிராயங்களையும் கலந்துரையாடினோம். அத்துடன் எமக்குப் பிடித்த விடையங்களைப் பற்றியும் கதைத்திருந்தோம். இதனால் தலைமுறை வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. அவற்றில் சில சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றிய எனது அபிப்பிராயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பூப்புனித நீராட்டுவிழா

தற்காலத்தில் பூப்புனித நீராட்டு விழாக்களின் நோக்கம் மாறிவிட்டது. மக்கள் தங்களிடம் இருக்கும் வசதியைப் பிறருக்குக் காட்டிக்கொள்வதற்கான வாய்ப்பாக இப்பூப்புனித நீராட்டு விழாக்கள் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். பெற்றோர் தம்மிடம் இருக்கும் பணத்தையும் வசதியையும் தங்கள் மகள்கள் மண்டபத்திற்க்கு ஹெலிகொப்டர் அல்லது லிமோவில் வருவதன்மூலம் தெரியப்படுத்துகிறார்கள். சாமத்திய வீடுகளின் நோக்கமே இங்கு பலருக்குத் தெரியாமலே அதை ஒரு பெரும் கொண்டாட்டமாகச் செய்கிறார்கள். தனது மகள் உடல் ரீதியாக திருமணத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை எதற்கு விளம்பரப்படுத்தவேண்டும்? ஏனென்றால் பெண் ஒரு பொருளாகப் பார்க்கப்படுகிறாள். ஒரு பெண்ணின் முதல் மாதவிடாயைக் கொண்டாடும் மக்கள், மாதம் மாதம் வந்தால் தீட்டாகப் பார்ப்பார்கள். சில சடங்குகள் ஏற்றுக்கொள்ளப்படலாம் ஆனால் அத்தோடு வருகின்ற மூடநம்பிக்கைகளைத் தவிர்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு கிழமைக்கு மேலாக ஒரு அறையில் பூட்டிவைப்பது, அப்பா, அண்ணா, தம்பியைப் பார்க்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் பிற்போக்குத்தனமாக இருக்கிறது அல்லவா? நாம் எமது பிள்ளைகளுக்குப் பூப்புனித நீராட்டு விழா வைப்போமா என்ற கேள்வி எழும்பியபோது அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இல்லை என்று சொன்னோம். முற்போக்குத்தனமாக அடுத்த தலைமுறையினர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை வந்தது.

தனியார் பாடசாலையா அரசாங்கப் பாடசாலையா சிறந்தது.

தனியார் பாடசாலைக்கும் அரசாங்கப் பாடசாலைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இரு பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்கள் படிக்கின்றார்கள், பின் பல்கலைக்கழகம் செல்கிறார்கள், அதன்பின் வேலைக்கும் செல்கிறார்கள். ஆனாலும் தனியார் பாடசாலைக்குச் செல்லும் சில மாணவர்களது பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் தனியார் பாடசாலைக்குச் செல்கிறார்கள் என்ற தலைக்கனம் இருக்கிறது. அதனால் தனியார் பாடசாலைதான் சிறந்தது என்று சமுதாயம் நம்புகிறது. அதிகக் கட்டணம் செலுத்துவதாலும், சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெறுவதாலும், சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்பதனாலும் வாழ்க்கை செழித்திடாது.

“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.”

கடந்த மூன்று ஆண்டுகளில் தனியார் பாடசாலை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய விடையங்கள் வெளிவந்ததை அனைவரும் செய்திகளில் பார்த்தோம். ஆனால் அதே நேரம் அரசாங்கப் பாடசாலைகளிலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் படிக்கின்ற பிள்ளை எங்கேயும் படிக்கும் என்பது உண்மை.

நாம் வளர்ந்து எமது பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்போமா?

இக்கேள்விக்கு அனைவரும் இல்லை என்று கூறியிருந்தோம். சொந்த நாட்டில் வாழமுடியாமல் புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்து, தெரியாத மொழியை கற்க முயற்சி செய்து, வேலை எடுத்து எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் எங்களை வளர்த்தார்கள். அவர்களை முதியோர் இல்லங்களில் விடுவதற்கு எமக்கு ஆசை இல்லை. ஒரு செவிலி மாணவியாக இருக்கும் நான் சில காலம் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்தேன். முதியோர்களைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களுக்குச் சிகிச்சை செய்யும்போது, என்னுடைய பெற்றோர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது என்றுதான் எண்ணினேன். இதே போன்ற கருத்துகளை மற்றைய இளைஞர்களும் கூறியிருந்தார்கள். முதியோர்களை முதியோர் இல்லங்களில் நன்றாகப் பார்த்துக்கொண்டாலும் ஒரு சிறையில் இருப்பதுபோலிருக்கும். ஆனால் காலத்தின் கட்டாயத்தினால் பலர் விருப்பமின்றி தமது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்கின்றார்கள். கவலையான விடையமாக இருந்தாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி எம்மை மாற்றிக்கொள்ளலாம்.

எனவே இந்த இளையோர் சந்திப்பினால் இளைய சமுதாயத்தினர்களிடையே இருக்கும் ஒற்றுமையையும் வித்தியாசங்களையும் பார்த்தோம். எமது எண்ணங்களை மையமாக வைத்து ஒரு முற்போக்கான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறோம் என்று அறிந்து கொண்டோம். “Bridge The Gap” என்ற இளையோர் சந்திப்பு மறுபடியும் இன்னும் பிரம்மாண்டமாக நடக்கவேண்டும் என்று நாம், இளைஞர்கள் ஆசைப்பட்டோம்.

அபிதாரணி சந்திரன்


34 பார்வைகள்

About the Author

அபிதாரணி சந்திரன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்