
நான் கடந்த தை மாதம், 7 வருடங்கள் கழித்து ஈழத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பிறக்காவிட்டாலும் எனக்கும் ஈழத்திற்கும் ஒரு திடமான தொடர்பும் பந்தமும் இருப்பதை உணர்கிறேன். இந்த முறை ஈழத்திற்கு சென்றதில் என்னைக் கவர்ந்த விடையங்களையும் மனதை கஷ்டப்படவைத்த விடையங்களையும் கவனித்தேன். அவற்றை மதிப்பீடு செய்துள்ளேன்.
எனது மனதை உருக்கிய எனது தாயகம்.
நான் வாழ்க்கையின் சிறு நுணுக்கங்களை இரசிப்பேன். இரயிலில் வவுனியா செல்லும் போது நான் ரயில் வாசலில் இருந்து இயற்கையை ரசித்துக்கொண்டு இருந்தேன். அம்மாவுக்கு நான் அங்கு இருப்பது பிடிக்காவிட்டாலும், அந்த வாசலில் இருந்து லேசான இளந்தென்றல் காற்று எனது முகத்தில் படுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குப் பின்னால், நேர் எதிராக இரு காதலர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அழகாக இருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து குறி கட்டுவான் செல்லும் பயணத்தின்போது, ஜன்னலைத் திறந்து லேசாக தலையை சாய்த்திருந்தேன். “எங்கே அந்த வெண்ணிலா” பாடல் பஸ் ஒலிவாங்கியில் ஒலித்தது. அப் பாடலில் “தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்” என்ற வரிகளை போல் தான் அந்த பயணம் இருந்தது. இளங்காற்று முகத்தில் பட, அளவில்லா சந்தோசத்தை உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்று உணர்ந்தேன். நெடுந்தீவு மேற்குப் பக்கத்தில் கடலோரத்திலிருந்து சூரியன் அழகாக மறைவதைக் கண்டு மயக்கம் கொண்டேன்.
ஈழ நாட்டை ஏன் சிவபூமி என்று கூறுகிறார்கள் என்று இப்போது விளங்குகிறது.
பாடகர் ஹரிஹரனின் concert
அன்று பொங்கு தமிழுக்காக திரண்டு வந்தார்கள் தமிழ் இளைஞர்கள், ஆனால் இன்று தமன்னாவின் ஆட்டத்தைப் பார்க்க, கட்டிய அணையை உடைத்த கடல் போல் இளைஞர்கள் வந்தார்கள். பாதுகாப்புக்காக கட்டியிருந்த தடுப்பணைகள் உடைந்து ஆகாயத்தில் பறந்தன. கடவுள்கூட நேரில் வந்தால் இக் கூட்டம் இப்படி போகுமா என்றால் சந்தேகம் தான். தமிழ் சினிமாவை இரசிப்பது, தீவிர இரசிகனாக இருப்பதில் பிழையில்லை, ஆனால் உயிரைப் பணையம் வைத்து சினிமா நடிகர்களை “தரிசிப்பதை” நமது இளைஞர்கள் நிறுத்தலாம். எமது நாட்டில் உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தும் போது, இளைஞர்கள் விசிலடித்து “தமன்னா” என்று கூச்சலிட்டார்கள். நல்லொழுக்கம், நாகரிகம், மரியாதை தெரிந்த நமது இளைஞர்கள். இதையெல்லாம் நேரிலிருந்து பார்த்தபோது தனிநாயகம் அடிகளார், சுவாமி விவேகானந்தர், நமது தலைவர்கள் ஏளனமாக சிரிக்கும் சத்தம் கேட்டது.
புலம்பெயர் நாடுகளில் தமிழின் நிலமை ஆலமர வேர்போல பலமாக இருக்கிறது, ஆனால் ஈழத்தில் தமிழ்?
பாஷையில் கலப்படம், கலாசார விழுமியங்களில் கலப்படம், ஆரோக்கியமான உணவுகளில் கலப்படம், ஏன், வரலாற்றில்கூட கலப்படம் என்று எல்லாவற்றிலும் கலப்படத்தை உணர்ந்தேன். அரசாங்கத்தின் சூழ்ச்சிகள் புரிந்தும், அவர்களின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். பரிதாபம்தான். போதைப் பொருட்கள் எமது இளைஞர்களைக் காவு வாங்குகிறது. நாளாந்தம் “போதைப் பொருள் பாவனையினால் இளைஞன் மரணம்” என்பதுதான் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக வருகின்றன. இருந்தும் அதை மேற்கொள்கிறார்கள். இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழ்ப்பிள்ளைகள் கொண்டாடுகிறார்கள். அது எமது கரிநாள் என்பதை பெற்றோர்களும் கூறுவதில்லை, பள்ளிக்கூடங்களிலும் சொல்லித்தருவதில்லை. தமிழ்ப் பிள்ளைகள் குதூகலமாக இலங்கைக் கொடியை விசுக்குவதைப் பார்க்கும்போது வயிற்றைப் பற்றி எரிகிறது.
கால் வைக்கும் இடமெங்கும் சிகப்பு நிறத்தில் எச்சி. வெற்றிலையோ பான் பராக்கோ. அதை மென்று கொண்டு, ஒரு கையில் போன் பேசிக்கொண்டு, மறு கையில் அப்பாவி மக்களுடைய உயிரைப் பணையம் வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுகிறார் பஸ் ஓட்டுனர். மறு பிறவி மீது அவ்வளவு நம்பிக்கைபோல.
சிவபூமியை காப்பாற்ற அந்த சிவனால் கூட முடியாதுபோல் இருக்கிறது.