Arts
10 நிமிட வாசிப்பு

உணவே மருத்துவம்

February 6, 2025 | Ilavenil

மருத்துவர் கு. சிவராமனுடனான நேர்காணல்.
இளவேனிலுக்காக நேர்காணலைச்  செயதவர்கள்  சாந்தி சிவகுமார், கலா பாலசண்முகன்

பரந்து விரிந்த தமிழ் சமுதாயத்திற்கு சித்த மருத்துவர் கு. சிவராமனைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. 

கு. சிவராமன், தமிழகத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவர். மாற்று மருத்துவம் மற்றும் மாற்று உணவுமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் எழுத்தாளர்.

அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி பின் புத்தகமாகவெளிவந்த ‘ஆறாம் திணை’ என்ற தொடர், உணவே நோயும் மருந்துமாகும் என்ற கருத்தை வலியுறுத்துவது. 

கு. சிவராமன் சித்த மருத்துவத்தை நவீன அறிவியல் பார்வையுடன் அணுகுபவர். மிகைப்படுத்தாமலும் அதீதமாக எளிமைப்படுத்தாமலும் சித்த மருத்துவத்தை ஆராய்ந்து அதன் பெறுமதியை விளக்கி வருகிறார். நவீன கால நோய்களில் பெரும்பாலானவை வாழ்க்கைமுறை சார்ந்தவை என்பதனால் உடலின் சக்தியை அதிகரித்து சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவம் பெரிதும் பயனளிப்பது என்று கருதுகிறார். மருத்துவர், மருத்துவ ஆய்வாளர், மருத்துவப் பயிற்றுநர் எனப் பல தளங்களில் பணியாற்றி வருகிறார்

சமீபத்தில், அவர் ஆஸ்திரேலியா வந்திருந்தபொழுதுஅவருடன் Great Ocean Roadக்கு ஒரு பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. 

அந்த நீண்ட பயணத்தில், அவருடன் விரிவாக உரையாடும்போது, இங்கு வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கான உணவு வகைகளையும், சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள், இருக்கும் இடத்திற்கு ஏற்ப எவ்வாறு உணவு உட்கொள்ளலாம், இயற்கை வேளாண்மை போன்ற எங்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

1. உங்களின் ஆஸ்திரேலிய பயணத்தில், இங்குள்ளமக்களின் உணவு பழக்கத்தைகவனித்திருப்பீர்கள். அதைப்பற்றி உங்களின் கருத்துஎன்ன?
பொதுவாக, அனைவரும் ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வுடன் உள்ளனர். 
ஆனால் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்கின்றனர். பிரெட், சீஸ் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவை அதிகம் உண்கின்றனர். அதைத்தவிர்த்து, உணவை முடிந்த அளவு எளிமையாக சமைத்து உண்ணுதல் நலம். 

2.நாங்கள் சில நேரம் frozen vegetable சமைப்பதற்கு பாவிக்கிறோம். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Frozen காய்கறிகளை மீண்டும் எடுத்து சமைக்கும்போது பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதைப் பற்றி நிறையக் கட்டுரைகள் வந்துள்ளன. 

காய்கறிகளை பறிப்பதற்கும் உணவாகச் சமைப்பதற்கும் உள்ள இடைவெளியில் நடக்கும் மாற்றங்கள் [முக்கியமாக oxidation] அவற்றை உறை நிலையில் வைக்கும்போது தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது. பின் குளிரூட்டியில் இருந்து எடுத்து சமைக்கும் போது மாற்றங்கள் விரைவாக நடக்கும். இதனால் சில நுண் சத்துக்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது. சுவையிலும் மாறுபாடு ஏற்படும். Fresh is always the best. 

உங்களுக்கு இயலுமான அளவு உடன் காய்கறிகளை சமைத்தல் நல்லது. நம்மாழ்வார் ஐயா எப்போதும் சொல்வது ‘உங்கள் அருகில் விளையும் உணவை உண்ணுங்கள்’. அதுதான் எல்லா விதத்திலும் உடல் நலத்திற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்றதாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் புலம்பெயர் மக்களுக்கு அங்கு விளையும் உணவுதான் உள்ளூர் உணவு. அதுதான் சரியானதாக இருக்கும். 

ஆனால் சில சமயங்களில் உணவை சரியான முறையில் பங்கீடு செய்வதற்காக தொழில் நுட்பத்தை உபயோகித்து உணவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வது தவிர்க்க முடியாததாகிறது. அப்படியானநேரத்தில் frozen உணவுகளை உபயோகப்படுத்துவதில் பெரிய தவறேதும் கிடையாது.

3.இப்பொழுது உள்ள இளம் தலைமுறையினர், உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். அது நல்லதே, ஆனால் மாவுச் சத்துள்ள உணவை அறவே ஒதுக்கி வெறும் புரதம் மட்டுமே உண்கின்றனர். அதுவும் protein drinks தினமும் எடுப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெரும்பாலும் அமர்ந்தே வேலை செய்யும் இன்றைய சூழலில் உடற்பயிற்சி மிக அவசியம். உணவிலும், மாவுச்சத்தை அறவே ஒதுக்காமல் குறைத்து, புரதம் அதிகமாக உண்பதில் தவறில்லை. ஆனால் பழம், காய்கறிகளையும் உண்பது மிகஅவசியம். அதோடல்லாமல், வீட்டில் சமைக்கும் உணவை ஒதுக்கி வெறும் protein drinks மட்டுமே எடுப்பதில் உள்ள இன்னொரு சிக்கல் நுண்ணூட்டப் பொருட்கள்(micro nutrients) கிடைக்காமல் போவது. உதாரணத்திற்கு, மஞ்சள், மிளகு, சீரகம் போன்றவற்றால் எற்படும் நன்மைகளைஇழப்பது.

4.உணவுப்பழக்கங்களை காலநிலைக்கு ஏற்ற முறையில் மாற்றிக் கொள்ள வேண்டுமா? 
நாம் உண்ணும் உணவு நிச்சயமாக நாம் வாழும் சூழல் மற்றும் கால நிலைக்கு ஏற்றதாகவே இருக்க வேண்டும். போக்குவரத்து இவ்வளவு தூரம் முன்னேறி இருக்காவிட்டால் நாம் அந்தந்த இடத்தில் விளையும் உணவுகளையே உட்கொண்டிருப்போம். உதாரணத்திற்கு, குளிர் பிரதேசங்களில் இருப்பவர் கோதுமையையும் வெப்பப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் அரிசி மற்றும் சிறுதானியங்களை தமது பிரதான உணவாக எடுத்துக்கொள்வது. 

ஆனால் இப்போது உலகம் சுருங்கி விட்டதால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்கள் பதப்படுத்திய நெல்லிக்காயை தேடி உண்கிறார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் ஓட்ஸ் உணவு வகைகளை உண்கிறார்கள். கிவி போன்ற பழங்களை அங்கு விற்பனை செய்கிறார்கள். 

உண்மையில் ஓட்ஸ் ஐரோப்பாவில் குதிரைகளுக்காக விளைவிக்கப்பட்டது. பிறகு மனிதர்களும் உண்ணத்தொடங்கினார்கள். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உபரியாக உற்பத்தியாகும் ஓட்ஸ் தானியத்தை இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதற்காக மிகுந்தசெலவில் அந்த உணவுகளுக்காக விளம்பரங்கள் செய்கிறார்கள். 

இந்தியாவில் ஓட்ஸ் இப்போது ஒரு இன்றியமையாத உணவாகி விட்டது. ஒரு காலத்தில் ஓட்ஸில் கஞ்சி மட்டும்தான் குடித்துக் கொண்டிருந்தோம். இப்போது கட்லற்வரை செய்கிறோம். 

அதே போல இங்கு விளையாத உணவுகளை இந்தியாவில் இருந்து இங்கு வியாபாரிகள் இறக்குமதி செய்கிறார்கள். உதாரணமாக பெரிய நெல்லிக்காய் (அம்லா) போன்ற வெப்ப நாடுகளில் மட்டுமே விளையும் உணவுகளை இங்கு பதப்படுத்தி விற்பனை செய்வதைப் பார்த்தேன். 

இது ஒரு அறமற்ற வணிக உத்தியாகத்தான் பார்க்கிறேன். இந்த உணவு வகைகளை பதப்படுத்தி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போதுசெய்யும் செலவை எண்ணிப்பாருங்கள்!

இதைத் முற்றாகத் தவிர்க்கவும் முடியாது. இப்படிவேணுமானால் செய்யலாம். நீங்கள் குளிர் காலத்தில் இந்தநாட்டிற்குரிய உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். கோதுமை, பாற்கட்டி (cheese), butter போன்றவற்றை அதிகம்சேர்த்துக் கொள்ளுங்கள். வெப்ப காலத்தில் இந்திய உணவுகளை உண்ணலாம்

5. ஆஸ்திரேலியாவில் பயிர் செய்யும் முறையைப் பற்றிஎன்னநினைக்கிறீர்கள்?
நான் பார்த்த அளவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இங்கு அதிகமாக பாவிக்கிறார்கள். அத்தோடு உணவைப் பயிர் செய்யும்போதே கிருமி கொல்லிகளையும் மண்ணுக்குள் செலுத்தி விடுவதையும் அவதானித்தேன். இந்தியா மாதிரி இல்லாமல் இங்கு கிருமி கொல்லிகள் அரசால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் அரசு அனுமதி பெறாதவற்றைப் பாவிக்காமல் தடை செய்யப்பட்டிருப்பதும் நல்லதுதான். 

ஆனால் இங்கு நிலம் அதிகமாகவும் மக்கள் தொகை குறைவாகவும் இருப்பதால் மட்டுப்படுத்த நிலத்தில் அதிக உற்பத்தி செய்யவேண்டிய தேவை இல்லை. உண்மையில் ஆஸ்திரேலியா இயற்கை வேளாண்மைக்கு மிகவும் பொருத்தமானது. 

மரபணு மாற்றமும் செயற்கை உரம் மற்றும் கிருமிகொல்லிகளும் தொலை நோக்கில் மனிதர்களுடைய மற்றும் நிலத்தினுடைய நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கிறது. 

6. இயற்கை வேளாண்மையின்(organic farming) விளையும் பொருட்களின்விலை கூடுதலாக இருக்கிறதே? மக்கள் எப்படி அவற்றைவேண்டுவார்கள்? மக்களை எப்படி ஊக்குவிக்கலாம்?
இயற்கை வேளாண்மையில் விளையும் பொருட்களின் விலை பொது மக்களால் வேண்டமுடியாத அளவிற்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. நான் இந்தியாவில் நடப்பதைசொல்கிறேன்.

எந்தப் பொருளும் அதன் மாற்று அல்லது போட்டிப் பொருளைவிட பத்திலிருந்து இருபது சதவீதம் விலை அதிகமாக இருப்பதை நுகர்வோர் பெரிதாக எண்ணுவதில்லை. உதாரணமாக ஒரு கிலோ சாதாரண அரிசியின் விலை ரூ50 என்றால் இயற்கையாக விளைவிக்கப்பட்ட அரிசி கூட்டுப்பண்ணையில் ரூ70க்கு வாங்கலாம். ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி தேவையென்றாலும் ரூ200தான் அதிகமாகச் செலவளியும். உடல் நலத்திற்கும் மண்ணிற்கும் கிடைக்கும் நலன்களைக் கருத்தில் கொண்டால் இயற்கை விவசாயம் அதிக விலை கூடியது என்று சொல்லமுடியாது.

இன்னும் சொல்லப்போனால் இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கான  நுகர்வோர் அதிகரிக்கும் போது விலை குறையும் வாய்ப்பு உள்ளது.  இன்னொரு விடயம் இந்தியாவில் இயற்கை விவசாயத்திற்கான அரச மானியங்கள் அதிகம் இல்லை. இயற்கை விவசாயத்திற்கான இடுபொருட்கள் (இயற்கைஉரம், பூச்சி கொல்லிகள்) கிடைப்பதும் அரிதாக இருப்பதால் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இயற்கை விவசாயம் அதிகரிக்கும்போது இந்தபொருட்களின் விலையும் குறையத் தொடங்கும். கேள்வியும் நிரம்பலும்தானே (Demand and Supply) பொருளின் விலையை தீர்மானிப்பவை?

இந்தியாவில் கூட்டுப்பண்ணை முறையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதன் மூலம் சிலபிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறோம். 

மக்களுக்கு இயற்கை வேளாண்மையால் விளையும் நன்மைகளைப் பற்றிய தொடர் விழிப்புணர்வையும் உருவாகவேண்டும். 

எல்லா மாற்றங்களும் மெதுவாகத்தான் வரும். ஆனால் சரியானவற்றைச் செய்துகொண்டே இருக்கவேண்டும். 

கிருமி கொல்லிகளாலும் செயற்கை உரத்தினாலும் மண்ணின் வளத்தையும் மனிதர்களின் உடல்நலனையும் சிக்கலாக்கி, பின்பு அதை நிவர்த்தி செய்யும் தொலைநோக்கில் பார்க்கும் பொழுது, இயற்கை வேளாண்மையை பலவிதங்களில் முன்னெடுப்பது நன்மையையே தரும்.

7. இயற்கை வேளாண்மையால் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்கள் மற்றைய வேளாண்மையைவிட அதிகம் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் என்பதற்கான தரவுகள் இருக்கின்றனவா?
நான் மருத்துவர். ஆய்வாளர் இல்லை. அதனால் தரவுகள் என்று தருவது கடினம். ஆனால் செயற்கை உரம் கிருமிகொல்லிகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  முக்கியமாக புற்றுநோய்க்கு இவையும் ஒரு காரணியென ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மண்ணில்  பதினாறு வகையான சத்துக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தச் சத்துக்கள் அனைத்தும் அழியாமல் உணவுகளுக்குச் செல்ல வேண்டுமானால் அது இயற்கை விவசாயத்தால்தான் முடியும். செயற்கை உரங்கள் மற்றும் இரசாயன கிருமி கொல்லிகளை உபயோகிக்கும்போது மண்ணின் இயற்கையான வளங்கள் அழிக்கப்படுகின்றன.

8. சமீப காலமாக உலகம் முழுவதும் சைவ [vegetarian] மற்றும் நனிசைவ [vegan] உணவுப் பழக்கம் பிரபலமாகி வருவதைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
உலகம் முழுவதும் இந்த நனிசைவ[vegan] உணவு ஒரு இயக்கமாகவே மாறி வருகிறது.

உலகத்தில் அதிகம் அசைவ உணவு உண்ணும் மக்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நாடுகளில் கிட்டத்தட்ட அறுபது சதவீத மக்கள் முழுமையாக அசைவ உணவு உண்பவர்கள்.

சமீபத்தில் Vaclav Smil என்பவர் எழுதிய How to Feed the World என்ற ஒரு பிரபலமான புத்தகம் வெளிவந்திருக்கிறது. பில்கேட்ஸ் உட்பட நிறையப் பிரபலமானவர்கள் இந்தப் புத்தகத்தை பற்றி பேசி இருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் Smil வருத்தத்துடன் சுட்டிக்காட்டி இருப்பது என்னவென்றால் இப்படிப் பெரும்பான்மையானவர்கள் சைவ/நனிசைவ உணவுகளுக்கு மாறும்போது இவர்களுக்குத் தேவையான உணவை(தானியங்கள் மற்றும் காய்கறிகள்) உற்பத்தி செய்யக்கூடிய திறன் சீனா மாதிரியான நாடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது.

நிறைய நாடுகள் விவசாயத்தை விட்டு விலகி வந்துகொண்டிருக்கின்றன.  இந்தச் சமயத்தில் சைவ/நனி சைவ உணவுகளுக்கான தேவை அதிகரிப்பது உணவுப் பற்றாக்குறையை உருவாக்கும் அபாயம் இருக்கிறது என்ற ஒரு கருத்தை அவர் முன்வைத்து இருக்கிறார்.

ஒவ்வொரு காலத்திலும் ஒரு கோட்பாடு  எழுச்சி பெறும். சைவம், நனிசைவம், பேலியோ [paleo], இடைவிடாத உண்ணாவிரதம் [intermittent fasting] போன்ற உணவுக் கோட்பாடுகள் இப்போது பெரிதும் பேசப்படுகின்றன. இது ஒரு வகை கும்பல் மன நிலை [mob movement] என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்குப் பின்னால் வணிக உத்திகள் எதாவது இருக்கிறதா என்றும் சந்தேகமாக இருக்கிறது. 

ஒரு பொது மனிதனாக பார்க்கும்பொழுது எல்லா உணவையும் சேர்த்து உண்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறன். உங்களுக்கு அருகில் கிடைக்கும் நல்ல இறைச்சி, நல்ல காய்கறிகள் என்று ஒரு சம நிலையில் உண்பது நன்று. இது தவறு அது சரி என்று சொல்லமுடியாது. ஒற்றைக்  கோட்பாடுகள் எல்லாமே தவறானவை என்பதுதான் என் அபிப்பிராயம். நாம் உண்ணும் உணவு நாங்கள் வாழும் சூழலுக்கும் உடல் நலத்தேவைக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக இரத்தத்தில் அதிக கொழுப்பு இருப்பவர்கள் இறைச்சியைத் தவிர்க்கலாம். ஆனால் B12 குறைபாடு இருப்பவர்கள் இறைச்சியில்தான் அதை பெற்றுக்கொள்ளமுடியும். உடலுக்கும் சமூகத்திற்கும் நல்ல பலனைகொடுக்கக் கூடிய உணவை சமவிகிதத்தில் உண்பதுதான் சரியானது.  

9. இப்போது உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று உணவுசரியாக பகிரப்படாமை. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
உண்மையாகவே உலகின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று இந்த உணவுப்பகிர்தல். தேவைக்கு அதிகமான உணவு(உபரி உற்பத்தி) ஒரு இடத்தில் வீசப்படுகிறது.நான் இங்கு ஆஸ்திரேலியாவின் பண்ணைகளிலும் மிதமாக உற்பத்தி செய்யப்பட்ட காரட் வீசப்படுவதை பார்த்தேன். 

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் பசியால் வாடுவதாக UN மதிப்பிட்டிருக்கிறது. உலகின் மூன்றின் ஒருபகுதி மக்கள் அடுத்த வேளை உணவு கிடைக்குமா என்ற பாதுகாப்பு இல்லாதவர்கள். 

UN இதற்காக SDG (Sustainable Development Goals) என்ற பெயரில் ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது. 

உணவை சரியான முறையில் பகிர்ந்து கொண்டால் எந்தமனிதரும் பட்டினி கிடக்க தேவையில்லை. அப்படி ஒருகாலம் வரும் என நம்புவோம். 

Ilavenil


23 பார்வைகள்

About the Author

Ilavenil

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்