ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் பேசுபொருளாய் இந்நாட்களில் முதலிடத்தில் இருப்பது The Voice – குரல் – எனும் சர்வசன வாக்கெடுப்பாகும். ஆஸ்திரேலியப் பூர்வீகக் குடிகளின் உரிமைகளை அரசியலமைப்பில் ஒரு சரத்தாகப் பதிவு செய்வதற்கான முன்னெடுப்பு இது.
அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இவர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தப்போவதாய் உறுதியளித்தபோதிலும் இவர்கள் வாழ்க்கைத்தரம் பின்னோக்கிப்பாய்ந்த நதியாகவே இன்றுள்ளது…..இல்லை, என்றும் இருந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சாமானிய குடிமகனுடன் ஒப்பிடும்போது பூர்வீகக் குடிகளின் ஆயுள்காலம், கல்வி, சுகாதாரம், சமூக கட்டமைப்பு, வீட்டுவசதி போன்றவை கீழ்த் தட்டு வாசிகளே. இவர்களின் சமூக கட்டமைப்பையும் ‘குரல்’ பற்றிய புரிதலையும் நோக்கும் முன் ஆஸ்திரேலியா பிறந்த கதையைச் சிறிது பார்ப்போமா?
தை மாதக் கோடை வெயிலில் தன் கப்பலை விட்டு கேப்டன் ஆத்தர் பிலிப் அந்த ஆஸ்திரேலியக் கடற்கரை வெண்மணலில் தன் சகாக்களுடன் தடம் பதித்தான்.
அன்று ஜனவரி 26ம் திகதி 1788.
மெதுவாகத் திரும்பித் தான் 252 நாட்கள் பயணித்த தனது கப்பலைக் களைப்புற்ற கண்களால் நோக்கிப் பின் பார்வையைத் திருப்பி தன் கண்முன்னே விரிந்த நிலப்பரப்பை நோக்கினான்.
மொத்தம் பதினொரு பாரிய கப்பல்கள் பாய் விரித்து கம்பீரமாக சிட்னி பொட்ணீ குடாவில் நங்கூரமிட்டிருக்கும் காட்சி அவன் முன்னால் உள்ள பாரிய கடமையை அவனுக்கு நினைவூட்டிற்று.
தனது முன்னோடியான கேப்டன் ஜேம்ஸ் குக் 1770 இல் இந்நாட்டை இனங்கண்டு இந்த மண்ணில் ஒரு நாட்டை உருவாக்கும் சாத்தியம் பற்றிப் பேசினான். இப்போது அந்த பாரிய பொறுப்பு இவன் கையில்.
பிரித்தானியாவிலிருந்து வந்த இந்த First Fleet எனும் முதல் கடற்படை அமைக்க இருக்கும் ‘கைதிகள் குடியேற்றம்’ (penal colony) அவன் எண்ணங்களை நிரப்பிற்று.
அதே வேளை, அவனின் ஒவ்வொரு அசைவையும் அக்கடற்கரையை ஒத்த மரங்களின் பின்னால் இருந்து சில ஜோடிக் கண்கள் வியப்பும் பீதியும் கொண்டு நோக்கிற்று. திடகாத்திரமான கரிய மேனி, சுருள் முடி., கூரியக் கண்கள். அவர்கள் மனத்தில் எழுந்த கேள்விகள் எல்லாம் ஒன்றே: “யார் இந்த வெள்ளைத் தோல் போர்த்திய மனிதர்கள்? விசித்திரமான ஆடைகள். புரியாத பாஷைகள்…. எமது கடற்கரையில் இவர்களுக்கு என்ன வேலை?”.
பிறந்த கேள்விகளுக்கு விடை இல்லை. தங்கள் கைகளிலிருந்து கூரிய ஈட்டிகளைக் கெட்டியாகப் பிடித்தபடி அங்கிருந்து பின் வாங்கி அவர்கள் காட்டுடன் கலந்தனர்.
கப்பல்களில் கேப்டன் ஆத்தர் பிலிப் கொண்டு வந்தது தங்கப் பாளங்களோ வைரங்களோ அல்ல. பிரித்தானியாவின் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்ட 775 கைதிகள்; 193 பெண் கைதிகள் உட்பட. இவர்கள் தங்கள் தண்டனைக் காலத்தை இங்கு தான் கழிக்கப் போகிறார்கள். இவர்கள் மட்டுமா?
மொத்தத்தில் 1480 ஆண், பெண், குழந்தைகள், சில மந்தை மிருகங்கள் குதிரைகள், விதை நெல், கோதுமை பழவகைகள் என ஒரு புதிய சமுதாயமே இந்த மண்ணில் கால் பதித்து ஒரு புதிய உலகை உருவாக்கும் வேட்கையில் அல்லவா வந்துள்ளனர்.
காலம் தாமதிக்காமல் மறு வாரமே கட்டுமான வேலைகள் தொடக்கப்பட்டன. சிறைச்சாலைகள், அதிகாரிகள் குடும்பங்கள் தங்குமிடம், சிறுவருக்கான பாடசாலை, ஆலயம், மருத்துவ நிலயம் என ஒரு புதிய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எல்லாக் கட்டிடங்களும் கடும் உழைப்பினால் கைகூடிற்று. விடுப்புப் பார்க்க வந்த பூர்வீகக் குடிமக்களும் விலங்கிட்டு கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் எல்லாம் அன்று விதைத்த அந்த நம்பிக்கை வித்து ஒரு விருட்சமாய் வளர்ந்து ஆஸ்திரேலியா எனும் ஒரு பெரும் தேசமாய் வார்ந்து இன்று வந்தாரை வாழ வைக்கும் நாடாக மிளிரும் என எண்ணினோமா?
இவர்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிய சரித்திரப் பின்னணிதான் என்ன?
1700களில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி பரவத் தொடங்கி எந்திரமயமாக்குதலின் எச்சங்களாக அனேகத் தொழிலாளிகள் வேலை இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய காலம் அது. திருட்டும் மற்ற சட்டவிரோதச் செயல்களும் மலிந்து பிரித்தானியாவின் சிறைகள் நிரம்பி வழிந்தன. அமெரிக்காவின் 1776 சுதந்திர பிரகடனத்தின் பின் பிரித்தானியச் சிறைக் கைதிகளை அங்குள்ள கைதிகள் குடியேற்றங்களுக்கும் அனுப்ப முடியாத நிலைமை.
இதற்குத் தீர்வுதான் என்ன? பிரித்தானிய அரசுக்கு உதித்தது ஓர் எண்ணம்: தமது சாம்ராஜ்ஜியத்தை மேலும் விரிவடையச் செய்யவும் கைதிகளின் செறிவைக் குறைக்கவும் இவர்களைக் கப்பலேற்றி ஒரு புதிய உலகை அமைக்கத் தொலைதூரத்திற்கு அனுப்பினால் என்ன? இத்திட்டத்தின் உதயம்தான் இந்த புதிய பூமி. ஆனால் இந்தப் பூமி இவர்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லவே இல்லை. இக் கண்டத்தின் பூர்வீகக் குடிமக்கள், கப்பலில் வந்து இறங்கிய இந்த வெள்ளை விசித்திர மனிதர்களை வியப்புடன் நோக்கினார்கள்.
இம்மண்ணின் மைந்தர்கள் ஆஸ்திரேலியாவை 40, 000 முதல் 60.000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தடைந்தார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. இவர்கள் ஒரு காட்டுவாசி வாழ்க்கையை வாழ்ந்து ஆன்மீக மற்றும் ஆடல், பாடல் கலை மரபுகள் பலவற்றை நிறுவினர். பல தேசத்து மூதாதையர்கள் சூரியனையும் தீயையும் தெய்வங்களாய் பூஜித்தது போல் இவர்கள் தாம் வாழும் நிலத்தையே தெய்வமாக்கி பூமித்தாயுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.
கடல் சூழ்ந்த கண்டத்திற்கு இவர்கள் எங்கிருந்து வந்திருக்கலாம் என அனேக ஆய்வுகள் ஊகிக்கின்றன. இவர்களின் முகவெட்டு மற்றும் உடல்வாகு போன்றவை தென் ஆசிய மக்களை ஒத்து இருப்பதால் இவர்கள் அப்பிரதேசங்களிலிருந்து குடி நகர்ந்து இருக்கலாம் என்பதும் ஒரு சாராரின் கருத்து. பல மில்லியன் வருடங்களுக்கு முன் கண்டங்கள் ஓரளவு இணைந்து அல்லது அருகருகே இருந்ததுடன் கண்டங்களைப் பிரிக்கும் சமுத்திரங்களும் மிகவும் ஆழமானதாக இல்லாது இருந்ததால் இது சாத்தியமாய் இருந்திருக்கலாம்.
கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஓவியக்கலையில் வல்லவர்கள். மூதாதையர்கள் தங்கள் “கனவுக்கதைகளை” கற்குகைகளில் ஓவியமாக வரைந்து வைத்தார்கள். மேலும் இவர்களுக்கே உரித்தான வண்ணப் புள்ளிக் கோலங்களில் வரையும் ஓவியங்களுக்கு உலக ஓவியச் சந்தைகளில் இன்றும் மவுசு அதிகம்.
1788 இல் ஐரோப்பியர் கால்பதித்த நாட்களில் இந்த மண்ணின் மைந்தர்களின் ஜனத்தொகை 850,000 ஆக இருந்திருக்கும். 500 வகையான பழங்குடியினர் இக் கண்டத்தில் தங்கள் சொந்த மொழி பேசி வாழ்ந்தனர் என்பது ஒரு சிறப்பு. ஆஸ்திரேலியாவின் பரந்த நிலப்பரப்பு, பல நூறு வகையாகப் பேச்சுவழக்கு மற்றும் எழுத்து வடிவமற்ற மொழிகள் போன்றவை இவர்களை ஒரே இனமாகக் கூடி வாழத் தடையாக இருந்தன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்களுக்காக ஒருமுகமாய் குரல் கொடுக்க இக்காரணிகள் ஒரு தடையாக இருந்திருக்கலாம் என்பதும் ஒருசாராரின் கருத்து.
பழங்குடியினருக்கும் விசித்திர மனிதருக்குமான உறவு நாளடைவில் முறுகலாக மாறி பல எதிர்ப்புகளுக்கு வித்திட்டது. அந்நாட்கள் இந்த அப்பாவி குடியினருக்கு இருண்ட நாட்களே. அடக்குமுறையும் அறிமுகப்படுத்தப்பட்ட சின்ன அம்மை போன்ற நோய்களும் இவர்கள் எண்ணிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திற்று. மேலும் வேட்டையாடி சிறைபிடிக்கப்பட்ட பல பூர்வீகக் குடிகள் கழுத்தில் சங்கிலி மாட்டப்பட்டு இங்கிலாந்திற்கு ஒரு காட்சிப் பொருளாய் கொண்டுபோகப்பட்டனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால் 1960களுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆஸ்திரேலியச் சரித்திர நூல்களின் ஆசிரியர்கள் பூர்வீகக் குடிகளுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளையும் அநீதிகளையும் மூடி மறைத்து இவர்களிடையே ஒரு சுமுகமான உறவு நிலவியதாகவே பதிவு செய்தனர். பின்னர் எழுதப்பட்ட நூல்கள்தான் குருதி தோய்ந்த சோகச் சரித்திரத்தை எழுத்தில் வடித்தன.
எந்த ஒரு தேசத்தின் உதயத்திலும் பிறக்கும் பிரசவ வேதனையின் ஓலத்தில் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளின் முனகல்கள் மௌனமாக மடிந்து போவது ஒரு நியதி அல்லவா? இன்றும் பல பழங்குடி அமைப்புகள் 26 ஜனவரி 1788 ஐ “படையெடுப்பு நாள்” ஆகக் கணித்து “ஆஸ்திரேலியா நாளை” புறக்கணித்து வருகின்றன.
இன்றைய ஆஸ்திரேலியச் சமுதாய அடுக்குகளின் கீழ்த் தட்டில் இன்னும் வாழும் “அபொரிஜீனல் குடிமக்கள்” என்று அழைக்கப்படும் பூர்வீகக் குடிகளின் வாழ்க்கைத் தரம் ஆண்டுதோறும் அங்குல வளர்ச்சியையே கண்டு வந்துள்ளது.
மேலும் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் வடுக்கள் இன்னும் ரணமாகவே உள்ளன. இவை இன்னும் ஆ. 1860- 1970க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பூர்வீகக் குடிகளின் குழந்தைகள் பலவந்தமாக அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு 480க்கும் அதிகமான நிறுவனங்களிலும், வெள்ளை இனத்தோர் வீடுகளிலும் வளர்க்கப்பட்டனர். இவர்களுக்கு அவர்களின் கலை கலாச்சார நடைமுறைகள், சம்பிரதாயம், மொழி, சடங்குகள் போன்றவை மறுக்கப்பட்டன. இந்த இளம் சந்ததியர் “திருடப்பட்ட தலைமுறைகள்” (Stolen Generation) எனும் நாமத்தைப் பின்னர் சூடிக்கொண்டனர். இவர்களில் அனேகர் ‘இடைச்சாதி’ (Half-caste) என வர்ணிக்கப்படும் பூர்வீகக்குடி தாய்க்கும் வெள்ளைக்கார தந்தைக்கும் பிறந்தவர்களே.
இந்த மண்ணின் மைந்தர்கள் தமது சொந்த மண்ணிலேயே ஒரு புறக்கணிக்கப்பட்ட சந்ததியாய் ஆக்கப்பட்டது சோகமே. வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியில் கடைசி வாங்கு, ஆரோக்கியமின்மை, வறுமை, அபரிமிதச் சிறை புகுதல் என இவர்கள் சோகக்கதை நீள்கிறது. 25.69 மில்லியன் ஆஸ்திரேலியச் சனத்தொகையில் 893, 300 பூர்வீகக் குடிகளும் அடங்குவார். இத்தனை சிறிய எண்ணிக்கையே உள்ள பூர்வீக மாந்தரின் அடிப்படை அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம் எனும் கேள்விக்கு விடை பகரப் பல வட்டமேசை மகாநாடுகளும் பேச்சுவார்த்தைகளும் ஆணையங்களும் வைத்தாயிற்று. இப்பயணத்தில் சில வெற்றி கிடைத்ததுண்டு.
அவற்றில் சில:
1967 – ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு ஒரு சர்வசன வாக்கெடுப்பின் கீழ் மாற்றப்பட்டு பூர்வீகக் குடியினரும் சனத்தொகை கணிப்பில் ஆஸ்திரேலியப் பிரஜைகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
1991 – பொலீஸ் காவலில் மரணித்த பூர்வீகக் குடிகளுக்கான ராயல் கமிஷன்
1992 – மாபோ எனும் பூர்வீகக் குடிமகன் உயர்நீதிமன்றத்தில் நில உரிமைக்கான அங்கீகார வழக்கில் வெற்றி.
1993 – ஆஸ்திரேலியப் பாராளுமன்றம் பூர்வீக உரிமைச் சட்டத்தை (Native Title Act) நிறைவேற்றியது.
1995 – ஆஸ்திரேலிய அரசு பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரேய்ட் தீவுகளின் கொடிகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
1997 – ஆஸ்திரேலியாவின் ‘திருடப்பட்ட தலைமுறைகள்’ பற்றிய உத்தியோகப் பூர்வ அறிக்கை நல்லிணக்க மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது
2008 – ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் ‘திருடப்பட்ட தலைமுறையினரிடம்’ நிகழ்ந்த தவறுகளுக்காகப் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
2017 – உளுரு அறிக்கையில் (The Uluru Statement from the Heart) ஆஸ்திரேலிய அரசிடம் தாம் நாட்டின் முதல் பிரஜைகள் எனும் பிரதிநிதித்துவத்தை (உரிமைகளை) அரசியலமைப்பில் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை உத்தியோகப்பூர்வமாக விடுக்கப்பட்டது.
2020 – பூர்வீகக் குடிகளின் சிறைக்காவல் மரணங்கள் மற்றும் சுய காயப்படுத்தலுக்கு எதிராக Black Lives Matter எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள் பங்குபற்றிய நாடளாவிய ஊர்வலங்கள் நடந்தேறின.
இப்பட்டியலில் உள்ள நிகழ்வுகள் பூர்வீகக் குடிமக்களின் மடியில் தானாய் வந்து விழவில்லை. பலத்த இழுபறியின் பின்பும் பல வருடப் பேச்சுவார்த்தைகளின் பின்புமே இவை சாத்தியமாயிற்று.
2022 பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆஸ்திரேலியாவின் தொழில் கட்சி, பூர்வீகக் குடிகளின் அபிலாஷைகள் அரசியலமைப்பில் பதிவேற்றப்படும் என உறுதியளித்து தாம் தேர்தலில் வெற்றியீட்டினால் அதைச் சட்டப்பூர்வமாக நிறைவேற்ற ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்தும் எனவும் உறுதிமொழி அளித்தது.
அத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தொழில் கட்சி தற்போது இதற்கான முன்னெடுப்புகளில் மும்முரமாய் இறங்கியுள்ளது. “குரல்” (The Voice) எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி சர்வசன வாக்கெடுப்புடன் உச்சக்கட்டத்தை அடைந்து சாதகமான முடிவை வாக்காளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டால் பாராளுமன்றத்தில் சட்டமாகி அரசியலமைப்பில் ஒரு ஷரத்தாக வந்து குந்திக்கொள்ளும்.
எதிர்க்கட்சியான லிபரல் கட்சி இந்த முன்னெடுப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாய் இவ்வாரம் அறிவித்தது. சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள பல பாரிய கம்பெனிகள் பூர்வீகக் குடிகளுடன் ஒரு முறுகலான உறவையே வைத்திருக்கின்றன. பூர்வீகக் குடிகளுக்குச் சொந்தமான நிலங்களில் சுரங்கம் அமைக்க இக் கம்பெனிகளுக்கு இவர்கள் அனுமதி தேவை. இதற்கான பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவதுண்டு. எனவே அரசியலமைப்பில் பூர்வீகக் குடிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் அது அவர்கள் கைகளை மேலும் பலப்படுத்தும் என்பது இக் கம்பெனிகளின் கவலை. லிபரல் கட்சி ஆதரவாளர்களான இக் கம்பெனிகளை பகைத்துக்கொள்ளத் தயங்கிய அக்கட்சி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது பல அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
இந்த ‘குரல்’ முன்னெடுப்பைப் பற்றி சிறிது பார்ப்போமே.
2017ல் வெளியிடப்பட்ட “உளுரு அறிக்கையின்” படி பூர்வீகக் குடிகளின் பிரதிநிதித்துவத்தை அரசு அங்கீகரிக்கவேண்டும் எனும் வேண்டுகோளை அரசியலமைப்பில் பதிவேற்றும் நடவடிக்கையின் முதல் கட்டமே இந்த சர்வசன வாக்கெடுப்பு ஆகும். இந்த அங்கீகாரம் இவர்களுக்கான உரிமைக்குரலாக எதிர்காலத்தில் ஒலிக்க வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பில் வாக்காளர்களிடம் கேட்கப்பட இருக்கும் கேள்வி இதுதான்:
To alter the Constitution to recognise the first people of Australia by establishing an Aboriginal and Torres strait Islander voice.
Do you approve this proposed alteration?
இக்கேள்விக்கு “ஆம்” அல்லது “இல்லை” என வாக்காளர்கள் பதிலளிக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு இதுவரை 44 முறைகள் சர்வசன வாக்கெடுப்பிற்கு விடப்பட்டாலும் எட்டு முறைதான் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
‘குரல்’ வாக்கெடுப்பு வெற்றிபெற்று அரசியலமைப்பில் பதிவேற்றப்பட்டால் பூர்வீகக் குடிமக்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு நிரந்தரக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு பூர்வீகக் குடிகளைப் பாதிக்கும் அரசு கொள்கைகளை ஆராய்ந்து அரசுக்கு அறிவுரை வழங்கும். ஆனால் பாராளுமன்றம் தமக்கு இணங்காத கொள்கைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் இக்குழுவிற்குக் கிடையாது. ‘என்ன, வெற்றுத் துப்பாக்கிக்கு இத்தனை பில்டப்பா?’ என நீங்கள் நினைப்பது நியாயமானதே.
இக்குழுவில் யார் யார் அங்கத்தவராய் இருப்பார்கள், மொத்தம் எத்தனை பேர், இவர்களின் கடமை என்ன என்ற கேள்விகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து மௌனமே பதில். இந்த மௌனத்தை எதிர்க்கட்சியான லிபரல் கட்சி தனக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்டு ‘இல்லை’ வாக்குகளைச் சேகரிக்க முனைவது அரசியல் காய்நகர்த்தல் என்றே கணிக்கப்படுகிறது.
எனினும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அரசியலமைப்பு மாற்றத்திற்குச் சார்பாகப் ஆதரவு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது வரவேற்கத்தக்கச் செய்தியே. இளம் சமுதாயத்தினர் இந்த மாற்றத்தை ஆதரிப்பார்கள் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் “ஆம்” வாக்காளர்களுக்கும் “இல்லை” வாக்காளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி கருத்துக்கணிப்புகளில் குறைந்து வருவது கவலை தரும் செய்தியே.
வாக்களிப்பில் மொத்தத் தேசிய ரீதியாக 50% க்கும் அதிகமான ‘ஆம்’ வாக்குகளையும் ஒவ்வொரு தனிப்பட்ட மாநிலத்திலும் 50%க்கும் அதிகமான ‘ஆம்’ வாக்குகளையும் (குறைந்தது நான்கு மாநிலங்களில்) பெற்றால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் கை வைக்க முடியும். வாக்குரிமையுள்ள 17 மில்லியன் ஆஸ்திரேலிய வாக்காளர்களில் 8.5 மில்லியன் வாக்காளர்கள் ‘ஆம்’ என்று தலையாட்டினாலேயே இக் கனவு நனவாகும்.
அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்த அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்கள் பூர்வகுடிகளின் வாழ்வில் குறிப்பிடத்தக்கப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், மழலை பராமரிப்பு / கல்வி போன்றவற்றில் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் தற்கொலை, வளர்ந்தோர் சிறை செல்தல், பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அரசினால் பிரிக்கப்படுதல், உடல் நலம், வீட்டு வசதி போன்றவை பின்னடைவையே கண்டுள்ளன.
பல தேசங்களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் பல இன மக்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் இந்த வாக்கெடுப்பு எவ்வாறு வெவ்வேறு சமூகங்களால் நோக்கப்படும் என்பது கேள்விக்குறியே.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பிறந்த மண்ணில் அனுபவித்த இன்னல்கள், அடக்குமுறைகள், இனரீதியான பாகுபாடு, கருத்துச்சுதந்திர மறுப்பு போன்றவற்றை ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வருகின்றனர். இவர்களின் வலியை நம்மைவிடப் புரிந்துகொண்டோர் யார்? இவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க நமக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் உசிதமாய் சிந்தித்துச் செயலாற்றுவோம்.
பூர்வீகக் குடிகளின் குரல் பாராளுமன்றத்தில் உரக்க ஒலித்து தங்கள் எதிர்காலத்தைத் தாமே அமைத்துக்கொள்ளும் சுயநிர்ணய உரிமையை இந்த அரசியலமைப்பு இவர்களுக்குச் சமைத்துவைக்குமானால் அதுவே இக் ”குரலின்’ வெற்றி எனலாம்.
அந்தக் குரலும் ஒலிக்கும் ஒரு நாள் வரத்தான் போகிறது.