யன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளியே எட்டிப் பார்க்கின்றாள் கோமதி. மகன் மத்தியானம் சாப்பிட வாறன் என்று சொன்னான் இன்னும் காணவில்லை. மிகவும் குளிரான காலம் மதியம் ஒரு மணியாகிவிட்டது. பொறுமையற்றவளாக அடிக்கடி எட்டிப்பார்ப்பதும் கதிரையில் இருப்பதுமாக இருந்தாள். கோடைகாலமாக இருந்தால் வெளியே போய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு நேரமும் போகுதில்லை. தொலைபேசியை எடுத்து முகநூலை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள். அதுவும் அலுத்துப் போகவே பழைய நினைவலைகள் அவளைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவள் இளமைக்கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம். பாடசாலை முடிந்ததும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோரும் தாயோ அல்லது தந்தையோ வந்து கூட்டிக்கொண்டு போவார்கள். இவளுக்கு தாயில்லை. தந்தை இன்னொரு திருமணம் செய்து, சித்திதான் இவளைப் பராமரித்து வருகிறாள். இதனால் பாடசாலை முடிந்ததும் வீட்டிற்குத் தனியேதான் வருவாள். அப்போது அவர்களைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கும். மற்றவர்கள் மாதிரி எனக்கும் அம்மா இல்லையே என்று மிகவும் ஏக்கமாக இருக்கும். சித்தி தன் பிள்ளைகளை நல்ல பாடசாலையில் விட்டுப் படிப்பித்தாள். ஆனால் கோமதியை பக்கத்திலிருக்கும் ஒரு அரசினர் பாடசாலையில் விட்டுப்படிக்க வைத்தாள். மற்றவர்கள் குறை கூறக்கூடும் என்பதற்காக எங்க படித்தாலும் சரிதானே என்று சொல்வாள்.
கோமதி அந்தப்பாடசாலையில் படித்தாலும் மிகவும் கெட்டிக்காரியாகப் படித்தாள். பாடசாலை ஆசிரியர்கள் எல்லோருக்கும் அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது. பாடசாலை விட்டு வீட்டிற்கு வந்ததும் வீட்டுவேலைகளை எல்லாம் சித்தி செய்யச் சொல்வாள். அவளும் சலிக்காமல் எல்லாவற்றையும் முடித்து விட்டு வீட்டுப்பாடத்தையும் முடித்து விட்டுப் படுப்பாள். பின்பு காலையில் எழுந்ததும் வீடு வாசல் கூட்டி வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டுத்தான் பாடசாலை செல்வாள். கடவுள் அவளுக்குக் கொடுத்த வரம் மிகுந்த ஞாபகசக்தி. பாடசாலையில் ஆசிரியர் என்ன படிப்பிக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டாலே போதும். இதைப் பார்க்கும்போது சித்திக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும், எப்படித்தான் கோமதி பாஸ் மார்க் எடுக்கிறாளோ என்று. எவ்வளவு வீட்டு வேலை செய்தும் மனம் தளராமல் அவள்படிக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தாள்.
பத்தாம் வகுப்பு சோதனை வந்தது. அவள் எட்டுப் பாடத்திலும் மிகவும் திறமையான சித்தியடைந்தாள். பின்பு உயர்தரவகுப்பிற்குச் சென்றாள். அதே பாடசாலையில் படிப்பைத் தொடர்ந்தாள். இரண்டு வருடத்தில் பரீட்சை முடிந்ததும் சித்தி அவளை விவாசாயி ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டாள். அவளும் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். அது போலத்தான் இவ்வளவு நாளும் பட்டகஷ்டத்திலிருந்து விடுபடுவதற்கு அவளுடைய கணவன் மிகவும் நல்லவனாக இருந்தான்.
அவள் தனது விருப்பத்தை, தனது படிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கணவரிடம் சொன்னாள். கணவரும் மறுப்புத் தெரிவிக்காமல் அவளுடைய விருப்பத்திற்கு உடன்படுவதாக தெரிவித்தார். அவளது பரீட்சைப் பெறுபேறுகள் மிகத்தரமாக இருந்ததால் அவள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டாள். கணவரின் உதவியுடன் தனது படிப்பு முடித்து வைத் தியராக பணிபுரியத் தொடங்கினாள். அவளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இரண்டு வயதிருக்கும்போது அவளுடைய நெஞ்சில் இடி பாய்ந்தது போல் அவள் பணி புரிந்து கொண்டிருக்கும்போது செய்தி வந்தது. அவளுடைய கணவன் மாரடைப் புக்காரணமாக இறந்து விட்டான். அவள் செய்வதறியாது திகைத்து நின்றாள். பிறகு மனதை தேற்றிக்கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
கோமதிக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்பு ஒன்று வந்தது. அவள் அதைப் பயன்படுத்தி வெளிநாட்டிற்குச் சென்றாள். பிள்ளைகளுக்காக தன் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து அவர்களைப் படிப்பித்து நல்ல நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள். அவள் தனியாக இருக்கின்றாள். பிள் ளைகள் எவ்வளவோ வற்புறுத்தியும் தனக்கு தனியாக இருக்கத்தான் விருப்பம் என்று கூறிவிட்டாள். பிள்ளைகள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவை வந்து பார்ப்பார்கள்.
அப்படித்தான் வாறன் என்று சொன்ன மகனை எதிர்பார்த்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.