
அகிலன் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன். ஆனால், அவனுக்குப் பெரியவராய் வரத்தான் விருப்பம். சிறுவனாக இருப்பது பிடிக்கவில்லை. அவனுக்குத் தன் குடும்பம் முக்கியமாகப் படவில்லை. பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லை, அவனுக்குத் துடுப்பாட்டம் விளையாட மட்டுந்தான் விருப்பம்.
ஓர் இரவு, அவன் கட்டிலில் படுத்திருந்தான். தனியாக வேலைக்குப் போய், காசு உழைப்பது எப்படி இருக்கும் என்று சிரித்துச் சிரித்து யோசித்துக்கொண்டிருந்தான்.
மறு நாள், அகிலன் பள்ளிக்கூட உடுப்பில் நடை பாதையில் நடந்துக் கொண்டிருந்தான். ஒரு தண்ணீர்ப் போத்தலும் கையில் இருந்தது. அவன் நடக்கும்போது ஒரு சாதனம் கண்ணில் பட்டது. அகிலன் அதை எடுத்து ஒரு பொத்தானைத் தட்டினான். அகிலனது உடுப்பு அங்கியாக (suit) மாறியது! அவனின் தண்ணீர்ப் போத்தல் தேனீர்க் குவளையாக மாறியது! அகிலன் தன்னையே பார்த்தான், அவன் ஒரு பெரியவனாக மாறிவிட்டான்! அகிலனுக்கு மிக சந்தோசமாய் இருந்தது. அவனது கனவு உண்மையாய் நடந்தது!
அவன் வேலைக்குப் போய்ச் சரியான சந்தோசமாய் இருந்தான். அவன் ஒரு பெரிய துடுப்பாட்டச் சங்கத்தில் சேர்ந்தான். அகிலன் ஒரு புதுக் குடும்பத்தோடு இணைந்து பல நாடுகள் போய்ச் சந்தோசமாய் இருந்தான். அவனிடம் ஒரு வாகனமும் இருந்தது. ஒரு நாள் அகிலன் தன் பெற்றோர்களை பார்க்க போனபோது அவர்கள் அங்கு இருக்கவில்லை. அகிலன் தனது குடும்பம் எங்கே என்று பக்கத்து வீட்டுக்காரனைக் கேட்டான். அவர் அகிலனுக்கு சொன்னார்.
‘அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார்கள்.’
அகிலனுக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. பெரிய பிழை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவனை வருத்தியது. அவன் அப்போதுதான் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தான். மேலும், அவன் வளரும் காலத்தில் அவனுக்கு கிடைத்திருக்கக்கூடிய எத்தனையோ வாய்ப்புகளை அவன் இழந்துவிட்டான் என்பதையும் எண்ணி வருந்தினான். அவனின் நண்பர்களோடு பேசமுடியவில்லை. அவனுடைய குழந்தைப் பருவத்தைத் தவிர்க்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென்று உணர்ந்தான்.
இனிமேல் எப்படித் தன் குடும்பத்தைப் பார்க்கலாமென்று பல நாட்களுக்கு யோசித்துக்கொண்டிருந்தான். திடீரென்று அகிலனுக்கு ஒரு யோசனை வந்தது. அவன் அந்த சாதனம் இருந்த இடத்தை போய் பார்த்தால், திருப்பி சிறுவனாய் இருந்த காலத்திற்குப் போகலாமோ என்று யோசித்தான்!
அகிலன் தனது வாகனத்தில் சாதனம் இருந்த இடத்திற்குப் போனான். ஆனால், அங்கே அது இருக்கவில்லை. அதிர்ச்சியும் கவலையும் அடைந்த அகிலன் நடை பாதையில் அழுது கொண்டிருந்தான். அகிலன் அழுது கொண்டிருந்த போது, ஒரு குரல் கேட்டது. “என்னிடம் அந்த சாதனம் இருக்கிறது.”
“யார் பேசுவது? நீங்கள் யாராவதாக இருந்தாலும் தயவுசெய்து என்னை மீண்டும் என் குடும்பத்துடன் சேர்த்துவிடுங்கள்” என்று அகிலன் கெஞ்சினான்.
“அதற்கு நீ ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டும். நீ உன் குடும்பத்தோடு இருக்கவேண்டும். உன் குழுந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும். செய்வாயா?” என்றது குரல்.
“நிச்சயமாக” என்று மகிழ்ச்சியோடு சொன்னான் அகிலன்.