இன்றைய காலத்தில் குடும்ப வன்முறை நமது உலகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இச்சூழலில் நமது தமிழ் சமூகத்தில் நடக்கும் குடும்ப வன்முறையையும் நாம் உற்றுநோக்க வேண்டும். குடும்ப வன்முறை வெவ்வேறு கோணங்களிலும் வகைகளிலும் காணப்படுகின்றன. அவை அச்சுறுத்தும் நடத்தை, கட்டுப்படுத்துதல், வற்புறுத்துதல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்துதல். ஒவ்வொரு தமிழ் மகன் அல்லது மகள் குடும்ப வன்முறையால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இக்குடும்ப வன்முறை நமது தமிழ் சமூகத்தில் இயல்பான விஷயமாக திகழ்வதால் பல இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே குடும்ப வன்முறை நமது இல்லத்தில் நடக்கும்பொழுது நிறுத்தினால்தான் நமது சமூகத்தில் நடப்பதை தடுக்க முடியும். இதில் இன்னொரு சோகம் என்னவென்றால் குடும்ப வன்முறை புலம்பெயர்ந்து வாழும் நமது தமிழ் குடும்பங்களிலும் கூட காணப்படுகின்றது என்பதுதான்.
தமிழ் இளைஞர்களின் மத்தியில் குடும்ப வன்முறை மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பலவிதமான கட்டுப்பாடுகளோடு வளர்க்கிறார்கள். ஆனால் அவர்களை சுற்றியுள்ள கலாச்சார சிந்தனைகளால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணரவில்லை. தமது விருப்பங்களை பிள்ளைகளின் மேல் திணிக்கும் நடத்தையும், கண்டிக்கும் முறையும், வாய்மொழி துஷ்பிரயோகமுமாகத் திகழ்கிறது. இது ஒரு வகையான வன்முறை செயல் என்பதால் இளைஞர்களின் மனது ஆழமாகப் புண்படுகின்றது. இணையத்தளங்களில் பல இளைஞர்கள் தமது அழுத்தமான அனுபவங்களையும், ஆதங்கத்தையும் பகிர்ந்துள்ளனர். ”எனது பெற்றோர்களது, நான் மருத்துவப் படிப்பு மேற்கொள்ள வேண்டும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்ய வேண்டும் மற்றும் பையன்கள் அல்லது பிற இனத்தவர்களுடன் பழகக்கூடாது” போன்ற எதிர்பார்ப்புகளில் நான் சிக்கி வருத்தப்படுகின்றேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்திருக்கின்றேன்” என்று தமிழ் பெண் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டாள். இவ்வகையான குடும்ப வன்முறை இன்றளவிலும் நமது தமிழ் குடும்பங்களில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்ப் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் திருமணம். கட்டாயக் கல்யாணம் செய்துவைக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளின் விருப்பத்தைக் கேட்க மறுக்கின்றனர். இதனால் பல பிள்ளைகள் தனக்குப் பிடித்த வாழ்க்கையையும் மனிதரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. கட்டாயக் கல்யாணங்கள் இன்றளவும் பல தமிழ் குடும்பங்களில் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் திருமணத்துக்குப் பின் பல பெண்கள் தமது கணவர்களால் துன்புறுத்தலுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகிறார்கள்.
“கிறுக்கு, லூசு…” போன்று தன் மனைவியை கடின வார்த்தைகளால் திட்டுவதும், கோபம் வரும்பொழுது அடிப்பதும் நமது சமூகத்தில் இயல்பாக்கப்பட்ட செயல்களாகத் திகழ்கின்றன. இதை சாதாரணமான வன்முறை என்று எடுத்துக்கொண்டு பல கணவர்கள் தைரியமாக தமது மனைவியை அடக்கியாள்கிறார்கள். சுற்றி இருப்பவர் கூறும் முட்டாள்த்தனமான அறிவுரையைக் கேட்டுக்கொண்டு, அப்பெண்களும் தமது கணவரின் துன்புறுத்தல்களை பொறுத்துக் கொள்கின்றனர். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற உறுதியுடன் வாழும் பெண்கள் சமூகத்தின் பார்வைக்குப் பயந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தனது கணவன் கெட்டவனாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கிறார் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு தினமும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் பெண்கள் பயப்படாமல் தைரியமாக தங்களுக்கு நடக்கும் குடும்ப வன்முறையை வெளிப்படுத்தி பாதுகாப்பில்லாத வீட்டிலிருந்து விலக வேண்டும். அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் ஆயிரம் கூறுவார்கள், குறிப்பாக உறவினர்கள்.
இப்படி பல வகையான குடும்ப வன்முறைகள் திருமண வாழ்வில் தினசரி காணப்படுகிறது. ஆஸ்திரேலியா அரசின் இணையத்தளத்தில் குடும்ப வன்முறை தகவல் இதழ்கள் தமிழில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்பழக்கம் பல கவுன்சில்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் அமைதி காப்பதும் தங்களுக்கு நடக்கும் அநியாயத்தை வெளிப்படுத்தாத காரணத்தினாலும் ஆஸ்திரேலியா அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமலிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் மூன்று பெண்களில் ஒருவர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட புள்ளி விபரங்களில் தமிழ் சமுதாயத்தில் உள்ள குடும்ப வன்முறை இடம்பெறவில்லை. ஏனென்றால் இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. இயல்பு வாழ்க்கையில் நடக்கும் மறைக்கப்படும் குடும்ப வன்முறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே நமது தமிழ் சமுதாயத்தில் குடும்ப வன்முறையை தடுக்க முடியும். வாழ்வின் எல்லை வரை தன் ஒரே கணவருடன் வாழ வேண்டும் என்று கௌரவத்தைக் காக்க நினைத்து அறிவுரை கூறும் உறவினர்களுக்கு குடும்ப வன்முறை பற்றிய கவலை இல்லை. ஆகவே திருமண வாழ்வில் உள்ள குடும்ப வன்முறை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். உறவினர்களின் எண்ணங்கள் மற்றும் ஆண்களின் நடத்தை மாற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கணவரின் குடும்பத்தினர் பெண்களை சித்திரவதை செய்வது ஒருவிதமான குடும்ப வன்முறை தான். மனதளவில் தாக்கி அடிமைப்படுத்த விரும்பும் உறவினர்கள் மற்றும் வரதட்சனை என்ற பெயரில் கொடுமை செய்வது சமுதாயத்தின் மூளைச்சலவையால் இயல்பாக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து வகையான குடும்ப வன்முறைகளும் குழந்தைகள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு நீண்ட கால மன அழுத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகிறது. அதனால் இவையனைத்தும் சட்டத்துக்கு விரோதம் இல்லாததாக இருந்தாலும் அனைத்தும் கண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும்.