வாழ்வதற்கு உகந்ததென்று வையகமே போற்றும்
வளமான நம் ஊராம் மெல்பேர்ண் வாழ் மக்காள்
பருவத்துக் ஒன்றென்றென்று பாவிகளாம் நம்மை
பதம்பார்க்க வருகின்ற சளிக்கதையைக் கேளும்
பரவுதப்பா ஊரெல்லாம் நோய்கள்-பார்த்துப்
பத்திரமாய் இருந்தம்பி நீரும்
மறக்காமல் தடுப்பூசி போடும்- அன்றேல்
உலைக்கின்ற வைரஸ் உமைச் சேரும்
அக்கறையாய்ப் பலர் உரைத்த பின்னும்
அறிவுரையை நான் கேட்கவில்லை
சளிக்கெல்லாம் தடுப்பூசி போட-நான்
வயக்கெட்டுப் போனேனா என்றேன்
காற்றோடு நாசிவழி நுழைந்து கொடுங் கிருமி
சுவாசப் பாதையெல்லாம் சளிகொண்டு மெழுக
மூக்கடைத்து, மூச்சடைத்துத் திணறும் எனக்கு
வாய்ச்சுவாசம் ஒன்றே வழியென்றதாச்சு
நாவினிலே சுவை மறந்து போச்சு
கண்ண்ணில் ஓயாமல் நீர் வடியலாச்சு
முதுகெல்லாம் குலுங்கும் படி இருமி
உடலோடு உளம் சோர்ந்து போச்சு
போர்வையிலே புதைந்திருந்த போதும்
பனிப் பாறையிலே படுத்ததனைப்போல
நாடி நரம்பெல்லாமே நடுங்கும்
நனி காய்ச்சல் கூடிவரலாச்சு
காலையிலே தடுமாறி எழுந்து
கடன்முடிப்போம் என நானும் நடக்க
கண்ணிரண்டும் இருட்டித் தலை சுற்றி
கணப்பொழுதில் தடுமாறி வீழ்ந்தேன்
பூமியது எனைத் தள்ளி மெல்ல
புதுஒழுக்கில் இயங்குவதைப் போல
நடுங்கியவன் ஒருவாறு விழிக்க
நாவறண்டு சொல்வறண்டு போச்சு
கால்களிலே வலுவிழந்து போச்சு
கண்களிலே கலக்கமென்று ஆச்சு
நாவினிலே மொழி மறைந்து போச்சு
அட நடப்பதென்ன கனவா என்றாச்சு
நற்கயிலை மலை தன்னைத்தேடி ஊர்ந்து
நாவரசர் போனதனைப் போல
கழிவறையின் வாசலிலே இருந்து கட்டிலுக்கு
நான் ஊர்ந்து போனேன்
ஒருவாறு இருகாலில் நிற்கப் புதுப்
பிரவாகம் எனத் திடீர் என்று
அடிவயிற்றில் உருவாகி ஐயோ
அருவியென வாயாலே சத்தி
உடனோடி வந்தாள் என் மனையாள்
ஒருவார்த்தை சொல்லாமல் துடைத்தாள்
சுகவாசி நான் என்று தினமும் நான்
சுமக்கின்ற இறுமாப்பை இடித்தாள்
ஒரு குவளை நீர் வாங்கிக் குடிக்க
என் உலகமது மீண்டு வரலாச்சு
உயிர் இன்னும் மீதமென்று உணர்ந்து
உறங்குகின்ற முயற்சிக்கு மீண்டேன்
ஒருவாரம் சளியோடு போச்சு
உடல் முழுதாக வலிசேர்ந்து போச்சு
கொடுப்பானேன் கொடுநோயை என்று
நான் குடும்பத்தைத் தள்ளித் தனித்திருந்தேன்
கற்பூர இலை கொஞ்சம் கடியும்,
கருமிளகு தேனில் கலந்தருந்தும்
இஞ்சியோடு இன்னபிற சேரும்
அட எல்லோரும் எனக்கு மருத்துவர்தான்
கம்பிதனைப் பிடிக்காமல் பேருந்தில்
வீம்பாய் நின்று தினம் விழுந்து எழும்பும்
வீணனென நான் குறுகி நின்றேன்
அட ஊசி போடா ஊழாலே நொந்தேன்