Arts
10 நிமிட வாசிப்பு

தமிழரின் பாரம்பரியத் தைத்திங்கள் கொண்டாட்டம்

April 6, 2024 | பாடும்மீன், சு. ஸ்ரீகந்தராசா

தைப் பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை. அது ஒரு சமயம் சார்ந்த பண்டிகை அல்ல. அது தமிழ் இனம் சார்ந்த பண்டிகை. அவ்வாறே தைப் புத்தாண்டும் எந்த மதத்திற்கும் உரியதல்ல. அது தமிழ் இனத்திற்குரியது.

வைதீக சமயங்களைச் சேர்ந்தவர்களாயினும், அவைதீக சமயங்களைப் பின்பற்றுபவர்களாயினும், இஸ்லாம், கிறீத்தவம் முதலிய மதத்தவர்களாயினும், இன்னும் எந்தச்சமயக் கொள்கைகளை உடையவர்களாயினும், மற்றும் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களாயினும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாயிருந்தால் அல்லது தமிழ் மொழியைப் பேசுபவர்களாயிருந்தால் அல்லது தமிழ்மொழியை பேசிய பரம்பரையைச் சேர்ந்தவர்களாயிருந்தால் அவர்கள் எல்லோருக்கும் உரித்தானது தைப் பொங்கல் பண்டிகை என்பதுதான் காலங்காலமாகக் கைக்கொள்ளப்பட்டுவரும் வழக்கமாகும்.

அத்தகைய தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணியானவன் என்கின்றார் வள்ளுவர். எனவே, கதிரவனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் உலகத்திற்கே பொதுவானது. அதை உணர்ந்துதான் பண்டைத் தமிழர்கள் ஆண்டுத் தொடக்கத்திலேயே அதனை ஒரு பண்டிகையாகக் கொண்டாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, சொல்லாலும் பொருளாலும் சுவை மிகுந்த இலக்கியங்களைக் கொண்டிருந்த செந்தமிழ் மொழியைப் பேசிய மக்கள் ஈடு இணையற்ற பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்களாயிருந்தார்கள். அவர்கள், அறிவியல் முதிர்ச்சியால் அகிலத்திற்கே வழிகாட்டியவர்கள், விண்ணையும், மண்ணையும் ஆராய்ந்து வியப்பு மிக்க நூல்களை ஆக்கியவர்கள், வானிலைக் கணக்கீட்டு வல்லமையால் கோள்களின் அசைவுகளைக் குறியீடு செய்தவர்கள். நட்சத்திரங்களையும் அவற்றின் நடமாட்டங்களையும் அவற்றின் பலாபலன்களையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்து கணித்தவர்கள். உலகுக்குப் பயன்தரும் முடிவுகளை அளித்தவர்கள். அவர்கள்தான், கதிரவனின் ஒளியினால்தான் பயிர்கள் வளர்கின்றன என்றும், காய்க்கின்றன என்றும் கண்டுபிடித்தார்கள்.

பண்டைய தமிழகத்திலே,கழனி விளைந்து, தானியக் கதிர்களைப் பறிப்பது, தைமாதத்திலேயே நடந்திருக்கிறது. உதாரணமாக நெற்பயிர் விளைந்து அறுவடை செய்வதற்குக் குறைந்தது ஆறு மாதங்கள் எடுக்கும். இற்றைக்கு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு வரை அதுதான் நிலைமையாக இருந்தது. இப்போதையைப் போலக் குறுகியகால நெற்பயிர்கள் உருவாக்கப்படாத காலம் அது.

எனவே, அறுவடை செய்த நெல்லை, அரிசியாக்கி, அந்த அரிசியிலே பொங்கலிட்டு, கழனி விளைவதற்குக் காரணமாகவிருந்த, அந்தக் கதிரவனுக்குப் படைத்து வணங்கி, நன்றி செலுத்தினார்கள். அந்தப் பொங்கலை உற்றார் உறவினர்களோடு பகிர்ந்து உண்டு மகிழ்ந்தார்கள். அந்த நிகழ்ச்சியை ஒரு விழாவாகவே நடத்தினார்கள். இந்த விடயங்களெல்லாம் சங்க இலக்கியங்களிலே ஆங்காங்கே சொல்லப்பட்டிருப்பதை நாம் காணலாம்.

  • சங்க இலக்கியங்களில் அடங்கும் எட்டுத்தொகை நூல்களில்ஒன்றான புறநானூறில் பொங்கல் பற்றிய குறிப்பொன்று காணப்படுகின்றது.

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை

முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்

மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்

மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி

வாங்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றிச்

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளங் கவினிய குளவி முன்றில்,

செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்

நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி…

 (புறநானூறு 168 – கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்)

அதாவது பன்றி உழுத புழுதியில் விதைத்த தினை விளைந்து கதிர் முற்றியது. நல்ல நாளில் புதிர் உண்பதற்கு எண்ணியவர்கள் மரையான் எனப்படும் காட்டுப் பசுவிலிருந்து புதிதாகக் கறந்து நுரையெழும்பும் தீம் பாலை உலைநீராக்கி புத்தரிசியையிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாகக் கொண்டு அடுப்பெரித்து மான் இறைச்சி சமைத்த பானையில் ஆக்கிய பொங்கலை கூதளம்பூ பூத்துக்கிடக்கும் வீட்டு முற்றத்திலே, அகன்ற வாழை இலையிலே விருந்தினர்களுக்கெல்லாம் கொடுத்து, பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வளமுடையவர்கள் என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தை மாதத் தொடக்கத்திலே பொங்கலைக் கதிரவனுக்குப் படைத்து நன்றி சொல்லி வணங்கும் நாளில், விருந்தினர்களையெல்லாம் வீட்டுக்கு அழைத்து அவர்களோடு பகிர்ந்து உண்ணுகின்ற நிகழ்ச்சியை ஒரு விழாவாகவே நடத்தியுள்ளார்கள். அதுவே பொங்கல் விழாவாக, தைப்பொங்கல் பண்டிகையாக, தமிழர் விழாவாகச் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது.

(2)   இதனை உறுதிப்படுத்துவதைப் போல புறநானூறின் 22 ஆவது பாடல் அழகாகச் சொல்கிறது.

“…………………………………………………

அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக்கூரை

சாறுகொண்ட களம்போல

வேறுவேறு பொலிவு தோன்றக்

குற்றானா உலக்கையால்

கலிச் சும்மை வியல் ஆங்கண்

பொலம் தோட்டுப் பைந்தும்மை

மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரீய்ச்

சினமாந்தர் வெறிக்குரவை ஓத நீரில் பெயர்பு பொங்க…”

வீட்டுக்கூரைகள், நெல் தார்கள் எனப்படும் வைக்கோல்களால் வேயப்படுவது வழக்கம். ஆனால், தைமாதத்தில் நெற்கதிர்களைக் கரும்புகளோடு சேர்த்துக் கட்டிச் சில வீட்டுக் கூரைகளை வேய்ந்திருப்பார்களாம். கருப்பச் சருகினால் சில வீடுகளை வேய்ந்திருப்பார்களாம். அவ்வாறு வேயப்பட்ட வீடுகள் தனித்தனியாக விழாக்கள் நடைபெறும் களங்களைப் போலக் காட்சி தருவதாகவும், அங்கே அரிசி குற்றுகின்ற உலக்கை ஒலி முழங்கும் என்றும், வீரர்களின் வெறியாட்டம் நடக்கும் என்றும், அவர்களின் குரவை ஒலி கடல் ஒலிப்பதுபோலக் கேட்கும் என்றும், குறுங்கோழியூர் கிழார் என்ற புலவர் புறநானூற்றில் பதிவு செய்திருக்கிறார்.

இதிலிருந்து வயலிலே அறுவடை நடந்த பின்னர், புத்தரிசியில் பொங்கல் செய்யும் நாள் ஒரு பண்டிகையாக, ஒரு திருவிழாவாக நடந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

(3)  புறநானூறில் இன்னும் ஓர் இடத்திலும் இதையொத்த குறிப்பு உள்ளது. (பாடல், 70 கோவூர் கிழார்)

“தைஇத் திங்கள் தண்கயம் போலக்

கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியநகர்” 

தைத்திங்களில் குளிர்ந்திருக்கும் குளத்தில் நிறைந்துள்ள தெளிந்த நீரைப்போல, கொள்ளக் கொள்ளக் குறையாத சோறு உடைய நகர், சோழன் கிள்ளிவளவனின் நகர் என்று சொல்லப்படுகிறது. தை மாதத்தில் தைப் பொங்கல் விழா நடக்கும். அப்போது குளத்தில் நீராடுவார்கள். அதனால் தைமாதத்தில் அந்தக் குளத்தின் தண்ணீர் எப்படியிருக்கும் என்பது வெளிப்படையானது என்பதால் புலவர் இவ்வாறு பாடியிருக்கிறார் என்று கருதலாம்.

 (4)          தைநீராடல் ஒரு சிறப்பான பண்டிகைபோலக் கொண்டாடப்படுவதைப் பரிபாடலில் உள்ள 11 ஆவது பாடலில் காணலாம்.

அம்பா ஆடலின் ஆய்தொடிக்கன்னியர்

முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட

பனிப்புலர் பாடிப் பருமணல் அருவியின்……

……………………………………….

மையாடல் ஆடல் மழபுலவர் மாறெழுந்து

பொய்யாடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்

தீயெறிப்பாலும் செறிதவ முன்பற்றியோ

தாயருகா நின்று தவத் தைந் நீராடுதல்

நீ உரைத்தி வயை நதி.

அழகிய வளையல்களை அணிந்த கன்னிப் பெண்கள் மார்கழி நோன்பிருந்தார்கள்.  திருமணச் சடங்குகளை நன்கு அறிந்த முதிய பெண்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்கள். கன்னிப் பெண்கள் தங்களுக்குள் பொய்யாகக் கணவன் மனைவி என்பதுபோலத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு ஆடுகிறார்கள். வைகை நதியிலே இந்தத் தை நீராடல் ஒரு நாடகம்போல நடக்கிறது.  “இன்று அவர்கள் இங்கே இருப்பதும், களிப்பதும், ஆடுதலும் அவர்கள் முன்செய்த தவப் பயனால் கிடைத்ததா? அவர்கள் தங்கள் தாய்மாரோடு இங்கே தைநீராடுதல் எதற்காக? வைகை நதியே நீதான் சொல்” என்பதாக இந்தப் பாடல் உள்ளது. தைநீராடல் ஒரு திருவிழாவாக நடைபெற்றமையை இது காட்டுகிறது.

 (5) நற்றிணையிலே உள்ள 80 ஆவது பாடலில் உள்ள, (பூதன் தேவனார்) “இத்தை இத்திங்கள் தண்கயம் படியும், பெருந்தோட் குறுமகள்” என்பது தைத் திங்கள் முதல் நாளிலே குளிர்ந்த பொய்கையில் நீராடும், பெரிய தோள்களையுடைய, இளம் மகள் என்ற கருத்து, மகளிர் தைநீராடும் சிறப்பான நிகழ்ச்சியைச் சொல்கிறது.

 (6) “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர், தை இத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற வரிகள் குறுந்தொகையில் ஒரு பாடலில் (196) இடம் பெற்றுள்ளன.

“பாரி வேந்தனின் பறம்பு மலையில் இருக்கும் சுனையில் உள்ள நீரைத் தைத்திங்களில் தந்தாலும், அது சுடுகிறது என்று சொல்வீர்களோ?” என்று தலைவனிடம் தலைவியின் தோழி கேட்பதாக உள்ள பாடலின் கருத்து, அந்தச் சுனைநீர் எப்போதும் குளிர்மை உடையதாக இருக்கிறது என்பதைச் சொல்வதோடு, அதற்கும் அப்பால், தை மாதம் என்று வெறுமனே சொல்லாமல், “தைத்திங்கள்” என்று குறிப்பிடப்படுவது ஆண்டு தோறும் தை மாதத்தில் அப்படியொரு பண்டிகை கொண்டாடப் படுவதையும், அந்தக்காலம் வெப்பம் குறைந்ததாக அல்லது குளிரானதாக இருக்கும் என்பதையும் எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.

(7) தை நின்ற தண்பெயல் கடைநாள்

வண்டற் பாவைஉணர்துறைத் தரீஇத்

திருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகநானுறில், பா.எ., 269)

பாவை செய்வதும், பொற்காசுகளைத் தொடுத்து அணிவதும், பாவை நோன்பு என்னும் விரதத்தைக் கடைப்பிடிப்பதுமாகத் தைத்திருநாளைக் கொண்டாடும் விடயத்தை இந்தப்பாடல் சொல்கிறது.

 (8) ” ஐங்குறுநூறில் (84) “நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் திங்கள் தண்கயம் போலப்பலர் படிந்து…” என்று வருகின்ற வரி, “நறுமணம் வீசும் பூக்களை அணிந்த பெண்கள் பலர் சேர்ந்து, தைத்திங்களிலே நீராடுகின்ற குளத்தைப்போல, பலர்சேர்ந்து…..” என்று சொல்கிறது. இதிலிருந்து தைத் திங்களில் மங்கையர் நீராடுதல் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டிருப்பது தெரியவருகிறது.

(9) ” வைஎயிற்றவர் நாப்பண் வகையணி பொலிந்து, நீ தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையில், (குறிஞ்சிக்கலி 23)  என்று வருகின்ற வரிகள், “இளம்பெண்கள் புடைசூழ விதம்விதமான அணிகலங்களை அணிந்து, அழகு செய்துகொண்டு நீ தைத்திங்கள் நீராடிச் செய்யும் தவமெல்லாம் உனக்கு என்ன பயங்களைத் தருமோ?”  என்ற கருத்தைத் தருகின்றன. இதன்படி, இளம்பெண்கள் பலர் கூடியாடும் தைநீராடல் அவர்களைப் பொறுத்தவரை ஒரு விரதமாக, உற்றார் உறவினர்களுக்கு ஒரு பண்டிகையாக, ஊர்மக்களுக்கு ஒரு திருவிழாவாக இடம்பெற்றிருப்பதை அறியலாம்.

(10)         சிலப்பதிகாரத்தில், இந்திர விழவு ஊர் எடுத்த காதையில், “…. புழுக்கலும் நோலையும், விழுக்கு உடை மடையும்

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து……” என்று ஒரு செய்தி உள்ளது. அதாவது. இந்திர விழாவின் ஆரம்பத்தில்,

காவல் பூதங்களை வழிபடும்போது, அங்கே, கோயிலின் வாயிலில் உள்ள பலிபீடிகையிலே, புழுக்கல், எள்ளுருண்டை, நிணச் சோறு, பூக்கள், பொங்கல் என்பவற்றைப் படைத்து குரவைக்கூத்து ஆடி, ஆரவாரம் செய்து வழிபட்டதாகச் சொல்லப்படும் இந்தத் தகவலில் இருந்தும் சங்ககாலத்தில் பொங்கல் என்பது முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது என்பதையும், வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்று வந்திருக்கிறது என்பதையும், அறிய முடிகிறது.

(11) பிற்காலத்தில் தோன்றிய இலக்கியமான, சீவக சிந்தாமணியில், மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” – என்று பொங்கல் விழாவைப் பற்றிய குறிப்பு சீவகசிந்தாமணியில் உள்ளது.  கி.பி. 9 ஆம் ஆண்டில் தோன்றியதாகச் சொல்லப்படும் சீவகசிந்தாமணியில் அவ்வாறு இருப்பதால், ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடி இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

எனவே, சங்ககாலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்ட தைப்பொங்கல் பண்டிகை, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் தொடர்ந்தே வந்திருக்கிறது என்பதையும், அந்தத் தொடர்ச்சியே இன்றுவரை நீண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இதிலிருந்துநாம் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

வேறெந்த மாதத்திற்கும் இல்லாத தனித்துவம் மிக்க முக்கியத்துவம் தைமாதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்திருப்பதற்கும், மார்கழி நோன்பிருந்த பெண்களும் தைநீராடலுக்கு முன்னாரான செயற்பாடாகவே அதனை முன்னெடுத்து வந்திருக்கின்றமைக்கும், அந்த மார்கழி நோன்பின் இறுதிக்கட்டம் தைநீராடலை நோக்கியும், தைத்திருநாளைக் கொண்டாடும் நோக்கிலும்தான் நடந்திருக்கிறது என்பதற்கும் ஏராளமான இலக்கியச் சான்றுகள் உள்ளன.

சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள், ஒரு தைமாதம் கழிந்துவிட்டால் அடுத்த வருடம் தைமாதம் வரும்வரையில் அந்தத் தை நீராடலையும், தைப்பொங்கல் பண்டிகையையும் ஒவ்வோராண்டும் எதிர்பார்த்துக் காத்திருந்து, மாதம் முழுவதும் மகிழ்ந்து கொண்டாடியிருக்கிறார்கள். 

எனவே, கடந்தகாலத்தில் நல்லவை நடைபெற்றமைக்கு நன்றி சொல்வதற்காகவும், எதிர்காலத்தில் நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டுவதற்காகவும், தைத்திங்களில் புத்தரிசியில் பொங்குதலும், மக்களின் ஒன்றுகூடலும், நீராடலும், களியாடலும், விருந்து கொடுத்தலும், பலரோடு பகிர்ந்து உண்ணலும், கலைகளை அரங்கேற்றுதலும், திருவிழாக்கள் நடத்துதலுமாக தைத்திருநாள் கொண்டாட்டங்கள் மாதம் முழுவதும் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்தப் பாரம்பரியமே இன்றுவரை தொடர்கிறது.

வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வருகின்ற,

தைப் பொங்கல் பண்டிகையை,

ஊரோடும், உறவோடும் சேர்ந்து, மாதம் முழுவதும் மகிழ்ந்து கொண்டாடுவோம்.

பாரெங்கும் வாழ்கின்ற பல்லின மக்களும் அறியும்வண்ணம்

தோழமையோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.

தமிழர்களின் பாரம்பரிய மாதத்தின் சிறப்பைத் தரணியெங்கும்

பறை சாற்றுவோம்.

இனிக்கும் பொங்கலிட்டு எல்லோர்க்கும் பகிர்ந்துண்போம்.

அதுவே பண்டைத் தமிழர் பண்பாடு. அதைக் கடைப்பிடிப்பது நம் கடப்பாடு.

தைத்திருநாள் தமிழரின் திருநாள்!

தைப்பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை!

வாழ்க தமிழ் வணக்கம்.

பாடும்மீன், சு. ஸ்ரீகந்தராசா


41 பார்வைகள்

About the Author

பாடும்மீன், சு. ஸ்ரீகந்தராசா

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்