Arts
10 நிமிட வாசிப்பு

தொழில் முனைவோர் கருத்தமர்வு

February 6, 2025 | Ilavenil

இளவேனில் இதழ் 26 இன் வாசகர் அனுபவப் பகிர்வும் கலந்துரையாடலும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சஞ்சிகை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முனைவாளர்கள் எனும் தொனிப்பொருளில் சிறப்புக் கருத்தமர்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் Capital Blinds நிறுவனத்தின் அகிலன், மதுரம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மி விஷ்வா, பல்கலைக்கழக மாணவன் ஆரூரன் மற்றும் Better Dental Care நிறுவனத்தின் தாமரை மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இருபத்தைந்து நிமிடநேரம் நடைபெற்ற கருத்தமர்வில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல்வேறு விடயங்களின் சாரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 

தொழில் முனைவு முயற்சிகளின் தோற்றுவாய்
சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது என்ற வினாவோடு கலந்துரையாடலைத் தொடங்கினோம். சிலகாலம் வேறொருவரின் திரைசீலைக் கடையொன்றில் பணியாற்றிய அகிலன், அந்த அனுபவம் தந்த நம்பிக்கையிலும் தொழில் மீதான ஈடுபாட்டாலும், Capital Blinds நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். சொந்தமாகத் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இன்று அவரது நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. லக்ஷ்மி திருமணம் முடித்து மெல்பேர்ண் நகரில் குடியேறிய சிலநாட்களிலேயே பெருந்தொற்றும் பொது முடக்கமும் எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கி விட்டன. வீட்டிலிருக்கும்போது விதவிதமாய் உணவுப்பொருட்களைச் செய்து மகிழ்ந்த லக்ஷ்மி நண்பர்கள் உறவினர்களின் இல்ல நிகழ்வுகளுக்கும் சிற்றுண்டிகளைச் செய்திருக்கிறார். அவற்றைச் சுவைத்தவர்கள் கொடுத்த உற்சாகம் அவரை மதுரம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். 

தாமரை மதியழகனும் அவர் கணவர் மதியழகனும் பல் வைத்திய நிபுணர்கள். சொந்தமாக சிகிச்சை நிலையம் ஒன்றைத் தொடங்கவேண்டும் என்று திரு மதியழகன் விரும்பியபோதும் தாமரை அதை விரும்பவில்லை. சொந்தத் தொழிலில் இருக்கக்கூடிய வருமான ஏற்றத்தாழ்வுகள், பணிச்சுமை, நிறுவனம் ஒன்றை நடாத்திய அனுபவமின்மை ஆகியவற்றை எண்ணி அவர் பிறிதொரு நிறுவனமொன்றில் பணியாற்றுவது சிறந்தது என்று நம்பியிருக்கிறார். இருந்தாலும் அவர் கணவர் தன்முடிவில் உறுதியாக இருந்ததால் சொந்த நிறுவனம் தொடங்க உடன்பட்டிருக்கிறார். 

எதிர்நோக்கும் சவால்களும் வியாபார நட்டங்களைச் சமாளிக்கும் வழிமுறைகளும்
பல்கலைக்கழக மாணவரான ஆரூரன் தனது பல்கலைக்கழக நண்பர்கள் பலர் புத்தூக்க முன்னெடுப்புகளை (entrepreneurship initiatives) மேற்கொள்வதாகத் தெரிவித்தார். “பல்கலைக் கழகமே அவர்களுக்கான களங்களை உருவாகித் தருகின்றது. இருந்தாலும் அவர்களில் பலர் தமது முயற்சிகளில் வெற்றிபெறாமல் இடைநடுவில் அவற்றைக் கைவிடுவதாகத் தெரிவித்தார்.  இளைஞர்களாகிய  அவர்களது தொழில் முன்னெடுப்புகளில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அவர்களுக்கு பெரும் குடும்பப் பொறுப்புகள் இல்லாததால், அதிலிருந்து மீண்டெழுவது அவ்வளவு சிரமமில்லை.  திருமணத்தின் பின், குழந்தைகள், வீட்டுக் கடன் என்று இன்ன பிற பொறுப்புகள் சேர்ந்தபிறகு புதிய முயற்சிகளில் இறங்கும்போது அதனால் வரும் நட்டம் மீண்டெழக் கடினமான பாதிப்புகளைக் கொடுக்கக்கூடும். வளமான ஒரு நிறுவனத்தில் பணியாற்றும்போது இந்தக் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நிம்மதியான வாழ்வை வாழலாம். எனவே நான் சுய தொழில் முன்னெடுப்பைவிட வேறொரு நிறுவனத்தில் பணியாற்றுவதையே விரும்புகிறேன்” என்றார் ஆரூரன். 

பேச்சு எதிர்பாராத நட்டங்கள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் பற்றித் திரும்பியது. “படிப்படியாக முதலீடுகளைச் செய்யாமல், எடுத்த எடுப்பில் பெரிய களஞ்சியங்கள், அதிகளவான ஊழியர்கள், இயந்திரங்கள், விளம்பரம் இன்னும் பலவற்றில் முதலிடும் போது வியாபாரம் வளர்ந்துவிட்டதைப்போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுகிறது. சடுதியான இந்த ஏற்றம் சிலகாலம்தான் நீடிக்கும். பின்னர் மீண்டெழமுடியாத சடுதியான சறுக்கலைத்தான் தரும். எனது இருப்பது வருட அனுபவத்தில் இப்படி வளர்ந்து வீழ்ந்த நிறுவனங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சிறந்தமுறையில் மதிப்பிட்டு கட்டம் கட்டமாகச் செய்யப்படும் முதலீடுகள்தான் நிலையான வளர்ச்சியைத் தரவல்லன. ” என்றார் அகிலன். 

அரச வரைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் 
“இந்தநாட்டில் வியாபாரம் ஒன்றை நடத்துவதற்கான வரைமுறைகள் மற்றும் அரச சட்டங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக உணவு தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது தொடர்பில் உள்ளூராட்சி சபைகள் மிக இறுக்கமான விதிமுறைகளை அமுல்படுத்தியிருப்பதால் பலர் இரகசியமாக, சிறியளவில் நண்பர்கள் உறவினர்களுக்கு மட்டும் உணவுப் பண்டங்களை வழங்கிவருகிறார்கள். தவிர உரிய அனுமதியைப் பெற்றுக் கொள்வது மிகவும் கடினம் என்றும் அறிந்திருக்கிறோம். இதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன” என்று லஷ்மியை வினவினோம்.  “வரைமுறைகள் கடினமானவைதான். ஆனால் அவை நம் எல்லோரது பாதுகாப்பிற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதலால் அவற்றுக்கு இசைவாக நம் தொழிலை நடாத்துவது அவசியம். தவிர அந்தவிதிமுறைகள் தொடர்பாகவும் இன்னும் பல உதவிகளைச் செய்யவும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரத்தியேக அமைப்புகளை உருவாகியிருக்கின்றன. நான் அவற்றின் அறிவுரையையும் வழிகாட்டலையும் பின்பற்றி வருகிறேன். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ” என்றார் லஷ்மி. 

குடும்ப வாழ்வும் தொழிலும்
மீண்டும் ஒலிவாங்கி ஆரூரனிடம் சென்றது. “எனது பெற்றோர்கள் தொழில் தொடங்கிய காலத்தில் மிகக் கடினமாக உழைத்தார்கள். விடுமுறை நாட்களில், வெளியூர் செல்லும்போதும் அவர்களால் பணியிலிருந்து முழுமையாக விலகி இருக்க முடியவில்லை. எல்லோரும் ஒன்றாக இருந்து உணவருந்தும் வேலையில்வரும் தொலைபேசி அழைப்புகளைக்கூட அவர்களால் தள்ளிப்போட முடியவில்லை. அவர்கள் வேறொரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தால் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எம்மோடு இன்னும் அதிகமாகாக தரமான பொழுதுகளைச் செலவிட்டிருக்கலாம். ” என்றார்.  தொழில் ஆரம்பித்த காலத்தில் நானும் என் கணவரும் கடுமையாக உழைத்தோம். நாளாக நாளாக குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடவேண்டும் வேலையையும் கவனிக்கவேண்டும் என்பது பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நான் பிள்ளைகளது பணிகளைக் கவனிக்க கணவர் வேலையைக் கவனித்தார். சொந்தத் தொழில் என்பதால் நான் வாரத்திற்கு ஒருதரம் மாத்திரம் வேலைக்குச் சென்றுகொண்டு வீட்டையும் கவனிக்க முடிந்தது. இந்த தொழில் நெகிழ்ச்சி எனக்கு இன்னொருவரின் கீழ் பணியாற்றினால் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ” என்று தனது அனுபவத்தைச் சொன்னார் தாமரை. குடும்பத்தின் ஒத்துழைப்புத்தான் தொழில் முயற்சியின் ஆதாரம் என்பது அகிலன் மற்றும் லக்ஷ்மியினூடாகவும் புலப்பட்டது.

பணியாளர்கள் நலனும் வாடிக்கையாளர் நலனும
“நல்ல பணியாளர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? அவர்களைத் தக்கவைப்பதிலுள்ள சவால்கள் என்ன?” என்று வினவினோம். “சிறந்த பற்சிகிச்சையைப் பயின்ற நாங்கள், வியாபார நிர்வாகத்திற்கு வேண்டிய திறன்களை அனுபவரீதியாகத்தான் கற்றுக்கொண்டோம். கற்றுக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் நல்ல பணியாளர்கள் அமைவதற்கு ஓரளவு அதிஷ்டமும் வேண்டும். சிலசமயங்களில் எவ்வளவு சிரத்தையாகத் தேர்ந்தெடுத்தாலும் பொருத்தமற்றவர்கள் வந்துவிடுவதுண்டு.” என்றார் தாமரை. “பணியாளர்கள் மீதான நம்பிக்கைதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். அவர்களுக்கான இடத்தை வழங்கி, அவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து, அவர்களின் நலன்களை நல்லமுறையில் கவனித்தால் அவர்கள் எமக்கு மிக உண்மையாக உழைப்பார்கள். இது எனது அனுபவம். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை” என்றார் அகிலன். 

இறுதியாக வாடிக்கையாளர்கள் பற்றியும் சந்தைப்படுத்தல் பற்றியும் கலந்துரையாடினோம். 

விளம்பரங்களுக்கு அதிகம் செலவழிப்பதில் தனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை இல்லை என்றும், மற்ற வாடிக்கையாளர்கள் கூறும் நன்மொழிதான் புதிய வாடிக்கையார்களைக் கொண்டுவந்து சேர்ப்பதில் முக்கியமாக விளங்குவதாக சொன்னார் அகிலன். வியாபாரத்தின் அச்சாணியாக இருக்கும் வாடிக்கையாளர்களின் நலனை அவர்களின் எதிர்பார்ப்பை விஞ்சும் வகையில் செய்வது தங்கள் வியாபார விழுமியங்களில் ஒன்று என்று தொடர்ந்தார். மற்றவர்களும் அவர் கருத்தோடு முழுமனதாய் உடன்பட்டார்கள். 

மனதிற்கு நெருக்கமான இனியதொரு அனுபவமாக இருந்த இந்தக் கருத்தமர்வு தொழில் முனைவோர் தொடர்பான ஒரு ஆழமான புரிந்துணர்வை வழங்கியிருந்தது.

Ilavenil


25 பார்வைகள்

About the Author

Ilavenil

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்