Arts
10 நிமிட வாசிப்பு

நகர்வு

April 6, 2024 | பகீ

என் வாழ்வில், மூன்று பாரிய இடம்பெயர்வுகளும் மறக்க முடியாதவை.

இம் மூன்றும் ஒன்றுக்கொன்று, அவைக்கான தூண்டுதல் காரணிகளால் வேறுபட்டிருப்பினும் நோக்கம் ஒன்றாய்த்தான் இருந்தன- விடிவிற்காய்! 

இலங்கையில் நடந்த இரு இடம்பெயர்வுகளிலும் கூடவே அம்மா,அப்பா, தங்கை, அத்தான், மச்சாள் என பலரும் இருந்திருந்தனர். நடைபயணங்களில் பிஞ்சுக் கால்கள் வலித்த பொழுதுகளில் நடை வேகம் குறைந்தது. கூட்டத்தைப் பிரிந்து நடந்த பொழுதுகளில் அருகே ஒரு நாய்க்குட்டி பயணத் துணையானது.

இம் மூன்றாவது இடம்பெயர்வுக்கு நிழலே துணையானது. அவுஸ்த்திரேலியாவுக்கு வந்து நான்கு வருடங்களில் மெல்பேர்ண் வாழ்க்கைக்கு செம்மையாக இசைவாக்கமடைந்ததுடன் பல ஆரோக்கியமான நட்புகளையும் உருவாக்கி சுமூகமான சூழலில் வாழத் தொடங்கியிருந்தோம். புலம் பெயர் வாழ்வின் கனவுகளுக்கு வர்ணங்கள் அழகாய்ப் பொருந்தி வந்த வண்ணம் இருக்கையிலேதான், புள்ளிகளின் அடிப்படையிலான நிதந்தர வதிவுரிமை வழங்கும் சட்டத்தில் மாற்றங்கள் அமுலுக்கு வந்தன.அதன் பிரகாரம் எமக்கிருந்த தெரிவு ஒன்று மட்டும் தான் –  தஸ்மேனியாவிற்கான பெயர்வு.

தஸ்மேனியத் தீவுக்கான கப்பல் பயணம் இரவுநேரச் சேவை. காரும், நானும், குழப்பங்களும், சிறு பதட்டமும் எல்லாம் இருளிலே.

ஏறத்தாழ ஒன்பது மணிநேரக் கப்பல் பயணம். இப்பயணம் என்னை ஓர் விஞ்ஞானியிடம் கொண்டுசேர்க்கும் என நான் அறிந்திருக்கவில்லை. தஸ்மேனியாவில் கால் பதித்து ஏறக்குறைய ஓராண்டுகளாக ஊரோடியாய் வாழ்ந்த பின்னரே மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடனான ஓர் வாழ்விடத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் பின்னரான தொடர் நிகழ்வுகள் தஸ்மேனியாவுடனான வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு பிணைப்பினை ஏற்படுத்தியிருந்தன.

தற்போது எனது வாழ்க்கைத் துணையும் என்னோடு இணைந்து கொண்டுவிட்டாள். தொழிலும் நாம் வாழ்ந்த வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்திலேயே அமைந்துவிட்டது. வார விடுமுறைகளை அவ்வூர் மக்களின் இயல்பு வாழ்க்கையை அறியவும், இயற்கைச் செழுமை நிறைந்த இத்தீவின் தனித்துங்களை அறியவும் என ஒதுக்கிக் கொண்டோம்.

அதே சமயம் உள்ளூர் நூலகத்தில் தொண்டராக இணைந்து கொண்டு கனிஷ்ட கற்கைநெறிகளுக்கான கணித பாடத்தினை கற்பித்து வந்த தருணத்தில் என்னோடு கூடவே தொண்டராக பணிபுரிந்த ஒரு பெண்மணி எம்மை விருந்திற்கு அழைத்திருந்தார். அந்த இரவு விருந்துதான் தஸ்மேனிய வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை.

அவ்விருந்தின் பொழுது அப்பெண்மணியின் சகோதரர் ஒருவரின் குடும்பத்தினரும் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரும் வந்திருந்தார்கள். அப்பெண்மணியின் வதிவிடம் ஓர் பண்ணையின் நடுவிலே அமைந்திருந்த புராதன வீடமைப்புச் சாயலில் நிர்மாணிக்கப்பட்ட அழகிய வீடு.

பேசிச் சிரித்தபடி இருக்கையிலேயே எனக்கருகிலிருந்த அந்தச் சகோதரரின் நண்பர் தன்னை எனக்கு அறிமுகம் செய்தார். பின்னர் தொடர்ந்த சம்பாசனையில், தான் அவுஸ்த்திரேலியாவில் முதன்முதலில் நிறுவப்பட்ட அணு ஆராய்ச்சி நிலையத்தின் மின் இலத்திரனியல் பிரிவு விஞ்ஞானியாக பல வருடங்கள் கடமையாற்றியதாகவும் ஒரு மாறுதலுக்காக பின்னர் அந்தாட்டிக்கா கண்டத்தின் நிலக்கீழ் ஆய்வுக்கான இங்கிலாந்துடனான ஒருங்கிணைந்த தொலைத்தொடர்புத் திட்டத்தில் முதன்மைவிஞ்ஞானியாக கடமையாற்றியதாகவும் அந்தாட்டிக்கா கண்டத்தில் தங்கியிருந்த காலத்தில் நடந்த சுவாரசியமான பல அனுபவங்களைப் பற்றியும் எனக்கும் ஏனையோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது தவிர தற்போது ஓய்வு நேரப் பொழுது போக்கிற்காக ஒரு சிறிய விண்வெளித் தொலைநோக்கு கூடமொன்றை அமைந்துள்ளதாகவும் தனது வீட்டிற்கு வந்து அவற்றைப் பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எனக்கே ஆர்வம் பற்றிக்கொண்டுவிட்டது. சற்று அளவு மிகுதியாகவே.

அடுத்தநாள் காலையிலேயே வருகிறேன் என்றுவிட்டேன். தாராளமாக வாருங்கள், உங்கள் மனைவியையும் அழைத்து வாருங்கள் என்றவர், நானே அவரை நேரில் அழைக்கிறேன் என்றவர், தானே எழுந்து எனது மனைவியருகில் சென்று அழைப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பல மணிநேர சுவாரசியமான சம்பாசனை, அனுபவப் பகிர்வுகள், விஞ்ஞான விந்தைகள், இடையிடையே குறைவில்லாமல் குடித்துக்கொண்ட கோப்பிகள், சிரிப்புக்குக் குறைவில்லாத நகைச்சுவையான பல கதைகள் என காலையிலிருந்து மாலைவரை அந்த விஞ்ஞானி வீட்டிலேயே நேரம் நகர்ந்தது.

அவரின் சந்திப்பின் பின்னர்தான் எனக்குள் மீண்டும் பொறியியல் சார்ந்த வேலைகளில் முனைப்புடன் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் உத்வேகம்கொண்டது.

ஒரு கணிதப் புத்தகத்தை எழுதிவிட வேண்டும் என்கின்ற ஆசை மொட்டவிழ்ந்தது.

சொல்லப்போனால் தஸ்மேனிய வாழ்க்கை பிடித்துப்போனது.

வார விடுமுறைகளின் பெரும்பாலானவை அவரின் வேலைப்பட்டறையிலேயே கழிந்தன. அவருக்கும் என்னையும் என் மனைவியையும் மிகவும் பிடித்தும் போய்விட்டது.

அவருக்கும் எமக்குமான அன்னியோன்யம் அதிகமாகி ஐக்கியமாகிவிட்டோம்.

வெளியிடங்களிலிருந்து தஸ்மேனியாவிற்கு சுற்றுலா வந்த நண்பர்களையெல்லாம் அவரின் வேலைப்பட்டறைக்கு அழைத்துப் போனோம்.

அவரும் தொலைநோக்கியில் பகலில் சூரியனையும் இரவில் பால்வெளியையும் மின்னும் தாரகைகளையும் காட்டி மகிழ்ந்தார்.

அவருடைய நேசமான மனித இயல்பு தஸ்மேனியா சுற்றுலா வந்த என் நண்பர்கள் அனைவரையுமே கவர்ந்திருந்தது, ஈர்த்திருந்தது.

பலர் இப்போதும் அவருடன் தொடர்பிலிருக்கிறார்கள், பரஸ்பரம் வாழ்த்து அனுப்பிக் கொள்கிறார்கள் – தபால் அட்டைகள் தான் அவருக்கு பிடித்தமானவை.

எவ்வாறான சிக்கல்கள் நிறைந்த விடயங்களாயினும் அவற்றை நடைமுறைக்கு சாத்தியமான விதத்தில் மாற்றியமைப்பதில் அவர் அபாரமான திறமைசாலி. நான் அவருடைய வேலைப்பட்டறையில் கற்றுக்கொண்டவை வெறுமனே பொறியியலும் மின்னியலும் விஞ்ஞானமும் அல்ல அவற்றையெல்லாம் தாண்டிய வாழ்க்கைக்திறன்!

தஸ்மேனிய வாழ்பனுவத்தின் மிகப் பெரும் பெறுமதியும் பேறும் அந்த விந்தை மனிதனுடனான சந்திப்புத்தான்.

சில புத்தகங்கள் சில திருப்பங்கள்

அவர் சந்திப்பு முதற் பக்கம்.

பகீ


68 பார்வைகள்

About the Author

பகீ

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்