-இளவேனில் ஆசியர் குழு-
பேரன்புக்குரிய வாசகர்களுக்கு எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். தைமாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம். நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் மாதம். விடுமுறையில் களித்திருந்து, புதுவருடத்திற்கான உறுதிமொழிகளை எடுத்து, இந்தவருடம் இனிய வருடம் என்று நம்பிக்கையோடு தொடங்கும் புத்தூக்கக் காலத்தில் இளவேனிலினின் இருபத்தியேழாவது இதழில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமுகத்தின் குரலாக இளவேனில் இம்முறையும் எல்லா வயதினரதும் ஆக்கங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது. ஆக்கங்களை மக்களிடையே கொண்டுசேர்ப்பதுவும், அவர்களின் வாசிப்பு அனுபவங்களை அறிந்துகொள்வதும் ஒரு சஞ்சிகையை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கு மிக முக்கியமானவை. இதற்காக இளவேனில் அச்சிலும், இலகுவாகப் பகிரக்கூடிய வகையில் இணையச் சஞ்சிகையாயும் வெளிவருகிறது. பல வாசகர்கள் தமது வாசிப்பு அனுபவங்களை மின்னஞ்சல் வழியாகவும் இணையத்தளத்திலும் பகிர்ந்திருக்கிறார்கள். மிகச்சிறந்த அனுபவபகிர்விற்கு இம்முறை பரிசில்களும் உண்டு. நவம்பர் மாதம் ஒழுங்கமைக்கப்பட்ட வாசகர் அனுபவப் பகிர்வில் பல வாசகர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ்ச்சமூகத்தில் தொழில் முனைவு எனும் தொனிப்பொருளில் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. தொழில்முனைவோர் எதிர்நோக்கும் வியாபார, நிர்வாக மற்றும் குடும்ப சவால்கள், வாய்ப்புகள் பற்றிய ஒரு ஆக்கபூர்வமான, ஆத்மார்த்தமான கலந்துரையாடலாக அந்நிகழ்வு பரிணமித்திருந்தது.
இன்று எல்லா வயதினரது கைகளிலும் நவீன தொலைபேசிகள் இருக்கின்றன.விரல் நுனியில் வந்து குவியும் குறுங்காணொளிகள் பெருமளவு நேரத்தைத் தின்றுவிடுகின்றன. சிந்தனையை மழுங்கடித்து, உண்மைக்குப் புறம்பான, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களோடு பகிரப்படுகின்றன. இந்தத் திரை இளந்தலைமுறையை மட்டுமல்லாமல் எல்லா வயதினர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. கவனத்தை ஒரு சில நிமிடங்களுக்குமேல் குவிய விடாமல் தடுக்கும் இவற்றின் முற்றுகையைத் தாண்டி ஒரு வாசகரை அடைவதுதான் படைப்பாளிகள் எதிர் நோக்கும் சவால். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, உண்மைக்குப் புறம்பான காட்சிகளை, பார்ப்பவர்கள் நம்பும் வகையில் உருவாக்கி அவர்களின் கண்முன்னே கொண்டுவந்து சேர்ந்துவிடுகிறது. ஒன்றைப் பார்த்து, அதைப்பற்றி நிதானமாக யோசிக்கமுதலே அந்தத் தகவலை வலுவூட்டும் இன்னொரு காணொளி வந்துவிடுகிறது. இதனால் மனிதர்கள் தாம் பார்க்கும் காணொளிகள் காட்டும் ஒரு சிந்தனைச் சிறுகுமிழுக்குள் சிக்கிவிடுகிறார்கள். இது மெல்ல மெல்ல எதையும் சீர்தூக்கிப் பார்த்து ஆராயும் மனநிலையைச் சிதைத்து காண்பவற்றை உடனடியாக நம்பும் மனநிலையை உருவாக்கிவிடுகிறது. மக்களின் இந்த மனநிலைதான் பெருந்தொற்றைப்போல ஆதாரமற்ற செய்திகளைப் பரவச்செய்ய வைக்கிறது. அதிகம் சிந்திக்கத் தேவையில்லாத, அடுத்தவர்மீது குற்றம் சுமத்தக்கூடிய, வெறுப்பை உமிழக்கூடிய, இனவாத, மதவாத, பழைமைவாதக் கோட்பாடுகளைப் பரப்புவதை மிக இலகுவாக்கி விட்டிருக்கிறது. இந்த நுட்பமான நிகழ்ச்சி நிரல்களால் சடுதியான அரசியல் மாற்றங்கள், அதிகாரப்போட்டிகள், சந்தைப்படுத்தல்கள் உலகெங்கும் நிகழ்த்தப்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல், மற்றும் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் இரண்டிலும் சமூக வலைத்தளங்களும் குறுங்காணொளிகளும் மிகப்பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. இந்தத் தகவற்பேரலையில் ஒருதுளியாகத்தான் இளவேனிலும் உங்களை வந்தடைகிறது.
செயற்கை மதிநுட்பத்தினால் ஒருவரின் குரலையோ, தோற்றத்தையோ மிக இலகுவாக, நம்பத்தகுந்த வகையில் மாற்றிவிடமுடிகிறது. இலகுவாகக் கட்டுரைகளையோ காணொளிகளையோ உருவாக்கிவிட முடிகிறது. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது இன்று மிகவும் சிக்கலாயிருக்கிறது. அதனால் என்றுமில்லாத அளவிற்கு மெய்ப்பொருள் காணும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டிய தேவை மேலோங்கியிருக்கிறது. தகவல் மூலங்களை சரிபார்ப்பதும், முன்முடிபுகளைத் தவிர்த்து நிதானமாக சிந்திப்பதும், நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை மாத்திரம் பகிர்ந்துகொள்வதும் உண்மைக்குப் புறம்பான செய்திகளின் பரம்பலுக்குத் துணைபோகாமல் இருக்க உதவும். இதனால் தேர்ந்தெடுத்து வாசிப்பதும், வாசித்த அல்லது கண்ணுற்றவற்றை நிதானமாக இரைமீட்டு யோசித்து உள்வாங்குவதும் மிக அவசியமாகிறது.
கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் கதவுகளையும் சாளரங்களையும் மூடிக்கொள்ளத் தேவையில்லை. வருகின்றவற்றை வடிகட்டும் திறனை வளர்த்துவிட்டால் இளங்காற்றின் இனிமையை அனுபவிக்கலாம்.