“புலம்பெயர் நாடுகளில் தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுமா?” “செம்மொழியான தமிழ் மற்றய செம்மொழிகள் போலல்லாது இன்றும் அழியாது நிலைத்திருப்பது எப்படி ?” இவை சில வருடங்களுக்கு முன்பு என் பிள்ளைகள் தமிழை VCE பாடமாக படித்தபோது பரீட்சைக்கு எடுத்த ஆராய்ச்சித் தலைப்புகள் . இந்த ஆராய்ச்சிகள், தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு மட்டுமல்ல மூன்றாம் தலைமுறைக்கும் எடுத்துச்செல்லப்படும் என்பது உறுதி என்றும், செம்மொழியான தமிழ் எப்படி இவ்வளவு காலமும் அழியாமல் இருந்ததோ அதேபோல் தொடர்ந்து இரண்டாம் தலைமுறைக்கும் எடுத்துச்செல்லப்படும் என்றுமே முடிவு செய்தன. ஆனால் இந்த முடிவுகள் எல்லாம் ஆசிரியர்களாலும் பெற்றோராலும் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு பரிட்சைக்கு ஏற்றதுபோல எடுக்கப்பட்டவை. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்பது அந்த முதலாம் தலைமுறை பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதுமே ஒரு கேள்விக்குறிதான்.
“நாங்கள் தமிழைக் கொண்டு செல்வோம்; தமிழ் விழுமியங்களை பாதுகாப்போம்” என்று இரண்டாம் தலைமுறையினர் கூறினால் அது முதலாம் தலைமுறையினரால் எழுதப்பட்டு இவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட ஒரு பேச்சு மட்டும்தானே ஒழிய இவர்களின் ஆழ்மனதிலிருந்து வந்த உண்மையான நிலைப்பாடு அல்ல என்றுதான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எல்லோருடைய மனதிலும் , என்னதான் “தமிழ் தமிழ் ” என்று கத்திக்கொண்டிருந்தாலும் இரண்டாம் தலைமுறையோடு தமிழ் அழிந்துவிடும் – மெல்லத் தமிழ் இனி சாகும் என்பதே எல்லோருடைய ஆழ்மனதிலும் அழுத்தமாக பதிந்திருக்கும் எண்ணம்.
ஆனால் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு இந்த எண்ணத்தை முழுதாக மாற்றியமைப்பதுபோல் அமைந்திருந்தது.
“கேள்விக்கு பதில் 2024”. மண்டபம் சென்று இறங்கியதும் கண்ட காட்சியே நன்றாக இருந்தது. இளம் பெண்களும் ஆண்களும் ஓடி ஓடி ஒழுங்குகள் செய்துகொண்டிருந்தார்கள். எல்லோருமே கலாசார உடையில். தமிழ் நிகழ்வென்று அப்பட்டமாக தெரிந்தது .
ஆறு மணிக்கு ஆரம்பம் . எப்படியும் ஒரு அரைமணி நேரமாவது தாமதமாகும் என்ற எதிர்பார்ப்போடு சென்றால் அதிசயமாக சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிகள் தொடங்கின.
தொடங்கியதிலிருந்து முடிவுவரை அத்தனை நிகழ்ச்சியிலும் தமிழ் துள்ளி விளையாடியது. அறிவிப்பு, வரவேற்பு அத்தனையும் தமிழில்.
பாடல், ஆடல். வாத்திய இசை. கேள்வி பதில் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.
இளம் உள்ளூர்க் கலைஞர்களால் உருவான புதிய இசைக்குழு. பாடல்கள் மூன்று தலைமுறையையும் கவரக்கூடிய தமிழ்ப் பாடல்கள். இளையராஜாவும் AR ரஹ்மானும் மண்டபத்தை நிறைத்தார்கள். இளமை இதோ இதோ என்று தொடங்கி வாட்டர் பாக்கெட்டில் முடித்தார்கள்.
நடனம், வாத்திய இசை என்று விதவிதமான நிகழ்ச்சிகள். பொதுவாக இசை நடன நிகழ்ச்சிகளில் தெலுங்கு அல்லது சமஸ்க்ருத பாடல்களே தேர்ந்தெடுக்கப்படும். இங்கேயோ ஒவ்வொன்றிலும் தூய தமிழ்ப் பாடல்கள். வயலினில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியேயும் M S சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதமும் தவழ்ந்தது.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் விதவிதமான கேள்விகள். MGR இன் மலைக்கள்ளன் சிவாஜியின் திருவிளையாடல் படங்களில் இருந்தெல்லாம் கேள்விகள். விஜய், சிவகார்த்திகேயன் படங்களையும் விடவில்லை.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், விஸ்வநாதன் ஆனந்த் முதல் அஞ்ஜலோ மாத்யூஸ் வரை கேள்விகள் சுழன்றன.
நிகழ்ச்சிகள் ஒருபுறம் சிறப்பு என்றால் சுவையான கொத்துரொட்டி மறுபுறம். வடை, தேநீர், கோப்பி என்று தமிழ் நாக்கிற்கான உணவுகள்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது என்னடா இது ஒவ்வொரு வார விடுமுறைக்கும் மூலைக்கு மூலை தமிழ் அமைப்புகளினால் நடத்தப்படும் ஒரு நிகழ்வைப் பற்றி தமிழ் பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ வழக்கமாக எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை போன்று உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா?
அதேதான். ஒரு சின்ன வித்தியாசத்தோடு. இதை நடத்தியவர்கள்தான் இந்த ஆச்சரியத்திற்கு காரணம்.
இத்தனை சிறப்பாக நடந்த இந்த “கேள்விக்கு பதில்” நிகழ்வோ ஒரு இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது.
அதன் நோக்கம், அதை எப்படி செய்வது, அதற்கு என்ன விடயங்கள் தேவை என்றெல்லாம் யோசித்து, அதாவது இது முழுக் குடும்பத்திற்குமான நிகழ்வாக இருக்கவேண்டும் என்று நினைத்து, தெரிந்தவர்களை அனுபவம் உள்ளவர்களை அணுகி, அதற்கான அறிவுரைகளையும் வழிகாட்டலையும் பெற்று, திட்டமிடுவதில் இருந்து நடத்தி முடிப்பது வரை அனைத்து விடயங்களையும் முழுமையாக இரண்டாம் தலைமுறையே செய்துமுடித்திருக்கிறது. அனுபவப் பகிர்வு தவிர முதலாம் தலைமுறையின் தலையீடு எந்தவிதத்திலும் இல்லை.
அதுமட்டுமல்ல , முதலாம் தலைமுறையால் செய்யமுடியாமல் இருக்கிற, நான் இதுவரைக்கும் கேள்விப்படாத இன்னொரு விடயம், இரண்டு அமைப்புகள் சேர்ந்து வேலை செய்வது. இங்கே, இரண்டு இளைஞர் அமைப்புகள் இணைந்து பிரச்சனைகளோ சண்டை சச்சரவுகளோ இல்லாமல் இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். தலைவர் செயலாளர் என்ற பதவி பாகுபாடு தெரியவில்லை. அமைப்புகளின் பெயரோ எந்த அமைப்பு என்ன செய்தது என்ற பெருமைகள், சுயபாராட்டுகள் ,தம்பட்டங்கள் இல்லை. பொன்னாடை புகழாரம் எதுவுமில்லை. சிலர் ஓயாது வேலைசெய்து நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க ஒருவர் அன்றைக்கு மட்டும் வந்து மேடையில் மைக் பிடித்த கதையும் இல்லை. பொதுவாக எந்த நிகழ்விலும் கடைசிநேர சொதப்பல்கள் நிறைய இருக்கும் . இங்கே அப்படி சொதப்பல்கள் இல்லை அல்லது வெளியே தெரியவில்லை.
ஆங்கிலம் இல்லாமல், மாதுபானம் இல்லாமல், ஆட்டம் பாட்டம் கும்மாளம் இல்லாமல் ஒரு இரண்டாம் தலைமுறை நிகழ்வா? ஏதாவது ஒன்றில்லையென்றால் பரவாயில்லை. இவை எதுவுமே இல்லையென்றால்?
அந்த நிகழ்வு முடிந்து வெளியே வந்ததும் என் மனதில் தோன்றிய கவிதை
“மெல்லத் தமிழினிச் சாகும் – – – – – –
என்றந்தப் பேதை யுரைத்தான் “ பாரதியார்
அந்தப் பேதையர் நாங்கள் தானோ?