இன்று எனக்கு ஒரு நல்ல சந்தோசமான நாளாக இருக்கப் போகிறது என்று நம்புகிறேன். நான் இன்று ஒரு அழகான பூங்காவிற்கு போகப் போகிறேன். நான் எனது பூனை றுசியை என்னுடன் கொண்டு போகிறேன்.
“மாலாக் குட்டி…. மாலாக் குட்டி… எழும்புங்கோ. நாங்கள் இப்ப வெளிக்கிட வேணும்” என அம்மா என்னைக் கூப்பிட்டார்.
அப்போது நான் உடுப்பு மாற்றி, பல் துலக்கி, எல்லாம் செய்த பிறகு நாங்கள் காரில் ஏறிப் போனோம். நான் றுசியை எனது மடியில் வைத்துக் கொண்டு போனேன். றுசி காரில் ஏறிய உடனே துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தது. அது சந்தோசத்தில் திருப்பித் திருப்பி எனக்கு மேலே பாய்ந்தது.
நாங்கள் பூங்காவிற்கு வந்து சேர்ந்த பிறகு, றுசி தான் காரிலிருந்து முதலாவதாக இறங்கி பூங்காவை நோக்கி ஓடியது. அந்தப் பூங்காவில் பல அழகான மரங்களும் பூக்களும் இருந்தன. பச்சை மரங்கள், வளைவான பாதைகள், வண்ணப் பூக்கள் எல்லாம் நல்ல வடிவாக இருந்தன. நான் நடுவில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், அது ஒரு நீர்த் தடாகம். அது மிகவும் அழகாக இருந்தது. தடாகத்தில் பல அல்லிப் பூக்கள் இருந்தன. தடாகத்தின் நடுவில், மிக மிக அழகான செயற்கை நீர் வீழ்ச்சி ஒன்று இருந்தது. முழுப் பூங்காவில், எனக்கு அந்த செயற்கை நீர் வீழ்ச்சிதான் மிகவும் பிடித்திருந்தது. இந்த அழகான இடத்தில் எனது அம்மாவும், அப்பாவும் நூறு படங்கள் வகைவகையாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்!
மறுபுறம், நானும் றுசியும் சேர்ந்து பூங்காவில் பந்து விளையாடினோம். நாங்கள் மிகவும் சந்தோசமாக விளையாடினோம். நான் றுசியோடு பந்து விளையாடும்போது, பந்து புல்லில் பட்டு உருண்டு ஓடியது. அப்பொழுது நான் வேகமாக ஓடிப் போய்ப் பந்தை எடுத்தேன். நான் திரும்பி வந்து பார்த்த பொழுது, றுசியைக் காணவில்லை! நான் வாழ்க்கையிலே ஒரு நாளுமே இனி றுசியைக் காணமாட்டேனோ என்று பயந்தேன்.
“அம்மா. அப்பா. அம்மா…? அப்பா…? எங்கே இருக்கிறீர்கள்? உங்களைக் காணவே இல்லையே” என்று நான் சத்தமாகக் கத்தி அழுதேன்.
இப்பொழுது, றுசி இல்லை, அம்மா இல்லை, அப்பா இல்லை, எனது குடும்பம் முழுவதும் இல்லை. என்ன நடந்தது? என யோசிக்கும்பொழுது, எதிரே அம்மாவும் அப்பாவும் வந்தார்கள்.
“அம்மா. அப்பா. எங்க இருந்தனீங்கள்?” எனக் கேட்டு நிம்மதியடைந்தேன்.
“நாங்கள் இங்கேதான் இருந்தோம். அது சரி, நீ எங்கே இருந்தாய்? நாங்கள் உன்னைக் கஷ்டப்பட்டு தேடிக் கொண்டிருந்தோம். எங்கே றுசி, காணேல?” என்று கேட்டார்கள்.
“ஐயோ அம்மா…. றுசியைக் காணவில்லை. நான் மிகவும் கவலையுடன் இருக்கிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது. றுசிதான் என் வாழ்க்கை! அதை நான் விட்டுட்டு, ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டன்!” என்று நான் அழுதேன்.
“என்ன? றுசியைக் காணேலையோ? நீ என்னத்த பாத்துக் கொண்டு இருந்தனி? சரி செல்லம், நீ அழாதே, றுசியை நாங்கள் எப்படியாவது கண்டு பிடிப்போம்! நீ கவலைப் படாதே வா….!” என்று அம்மா என்னைச் சமாதானப்படுத்தினார்.
நாங்கள் பூங்காவில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் தேடினோம். பூக்கள் இருக்கும் இடத்தில் தேடினோம். ஆனால், எங்குமே றுசி இல்லை.
“அப்பா, றுசியை நாங்கள் இப்பொழுது எங்கு தேடலாம்? எனக்குக் காலெல்லாம் வலிக்கிறது” என்று நான் அப்பாவைக் கேட்டேன்.
“எனக்குத் தெரியல்ல, ஆனால், நாங்கள் இன்னும் குளத்தில் பார்க்கவில்லை.” என்று அப்பா கூறினார்.
“அம்மா. அப்பா. எனக்கு றுசி தெரிகிறது. நான் போய்க் கூட்டிக்கொண்டு வாறேன்!” என்று நான் சந்தோசத்தில் சொன்னேன்.
நான் ஓடிப் போய்ப் பார்த்தால், அது ஒரு மரக்குச்சி. நான் மறுபடியும் கவலையுடன் இருந்தேன். நான் ஏமாந்து போய்விட்டேன்.
பிறகு, நான் குளத்திற்கு போகும் வழியில், எனது நண்பி ஆயிஷாவைக் கண்டேன்.
“ஆயிஷா! எப்படி இருக்கிறாய்? எனது பூனை, றுசியை, காணவில்லை. அதைக் கண்டு பிடிக்க எனக்கு நீ உதவி செய்வாயா?” என்று நான் ஆயிஷாவை கேட்டேன்.
“மாலா, நான் நல்லா இருக்கிறேன். றுசியைக் காணவில்லையோ? ஏன்? எங்கே நீ தேடினாய், இனி எங்கே தேடப் போகிறாய்?” என்று அவள் கேட்டாள்.
“நான் எல்லா இடத்திலும் பார்த்தேன், ஆனால், இப்பொழுது, குளத்தில் பார்க்கப் போகிறேன். அம்மா. நான் ஆயிஷாவைக் கண்டேன். அவளும் எங்களை றுசியை தேட உதவி செய்யப் போகிறாள்.” என்று கூறினேன்.
“சரிடா மாலா- ஏய்! அங்கே குளத்தின் நடுவே ஒரு தீவு இருக்கிறது. றுசி அதில் இருக்குமோ தெரியாது” என அம்மா சொன்னார்.
நாங்கள் நீண்ட நேரமாக றுசியை தேடும்பொழுது, நான் திரும்பவும் அந்த செயற்கை நீர் வீழ்ச்சியை பார்த்தேன். அங்கு றுசி செயற்கை நீர் வீழ்ச்சியில் இருக்கும் கற்களுக்கு மேலே படுத்திருந்ததைக் கண்டேன்.
“அம்மா. அப்பா. நான் றுசியை கண்டேன்! அது செயற்கை வீழ்ச்சியின் கற்களின் மேலே படுத்திருக்கிறது.” நான் அவசரத்தில் கத்தினேன். எனது குரலைக் கேட்டு றுசியும் “மியாவ்” என்று கத்தியது.
“செல்லம், நீ இங்கே என்னோட இரு. அப்பா போய்க் கூட்டிக் கொண்டு வருவார். டேய். நீ அங்கே போகாதே! நில்லு.” என்று அம்மா என் பாதுகாப்புக்குச் சொன்னார்.
நான் காது கேட்காததுபோல மிக வேகமாக றுசியை நோக்கி, தடாகத்தை சுற்றி ஓடினேன். ஆனால், நடுவிலிருந்த தீவுப் பகுதிக்கு செல்ல முடியவில்லை.
“பிள்ளை. மாலா. ஓடிச் செல்லாதே. பாதுகாப்பாக இரு. நீ அடிபட்டால், என்ன நடக்கும்?” என்று கத்திக் கொண்டு அப்பாவும் அம்மாவும் ஓடி வந்தார்கள்.
நாங்கள் எல்லோருமாக எப்படி செயற்கை நீர் வீழ்ச்சி இருக்கும் இடத்துக்கு செல்வது என்று யோசித்தோம். “ஆ… அங்கே ஒரு துடுப்புப் படகு இருக்கிறது. நாங்கள் அதில் ஏறிப் போவோமா?” என்று அப்பா கேட்டார்.
நான் சந்தோசத்துடன் “ஓம்.. நல்ல யோசனை அப்பா, நானும் வரவா?” என்று கெஞ்சினேன். அப்பா அங்கு படகுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்த நபரிடம் காசைக் கொடுத்து விட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போனார்.
துடுப்புப் படகிலே ஏறும் போது நான் மனதுக்குள் “ஐயா.. றுசியைப் பிடிக்கிற சாட்டில் எனக்கு படகிலே ஓடுற வாய்ப்பும் கிடைச்சிட்டுது” என்று சந்தோசப் பட்டேன். அப்பாவுடன் சேர்ந்து துடுப்பை காலால் மிதித்தேன்.
ஒருவாறாக நாங்கள் நடுவிலிருந்த செயற்கை நீர்வீழ்சிக்கு அருகில் வந்தோம். எங்களைக் கண்டவுடன் றுசி பாய்ந்து வந்தது.
“றுசி. றுசி. நான் உன்னட்டை வந்திட்டன். நான் உன்னை எங்கெல்லாம் தேடிக் கொண்டு இருந்தேன்!” என்று புழுகமாகக் கத்தினேன்.
நான் றுசிக்கு கிட்ட வந்த பிறகு, அது என்னை மணந்து, என்னிடம் வந்து பாய்ந்து நக்கியது. நானும் றுசியை கொஞ்சினேன்.
றுசி எல்லோரையும் நக்கிக் கொண்டு இருந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நாங்கள் திரும்பக் கரைக்கு வந்த பிறகு, ஆயிஷா, “எனக்கும் நீ றுசியைக் கண்டது, நல்ல மகிழ்ச்சி” என்று சொன்னாள்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து விளையாடிய பின், மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு திரும்பினோம்.