காலையில் ஒன்பதரை மணிக்கெல்லாம் கோர்ட்டில் இருக்கவேண்டும். பரபரவென்று கிளம்பிக்கொண்டிருந்தோம். அவரும் கூட வருகிறார் என்பதால் ஒரு தெம்பு உள்ளது என்றாலும் காவல் நிலையம், கோர்ட் எனும்போது சிறு படபடப்பும் எப்படியோ சேர்ந்துவிடுகிறது.
நீதிபதி முன் நிற்கப்போவதால் என்ன உடை உடுப்பது? உடையை வைத்து நம்மை கணிப்பார்களோ என்ற கேள்வி எழுந்தது. ஸ்மார்ட் காசுவல்தான் (smart casual) நல்லது. முன்ன பின்ன செத்திருந்தாதான சுடுகாடு தெரியும். இந்தியாவிலும் சரி, ஆஸ்திரேலியாவிலும் சரி கோர்ட் பக்கமே போனதில்லை.
எல்லாத்தையும் செய்திட்டு புள்ளையாண்டான் கிளம்பி வேலைக்கு போயிட்டார். நாம அல்லல்பட வேண்டியிருக்கு. மகன் மேல் சிறு கோபம் வந்தது. வேண்டாம். கோபப்பட்டு ஆகப்போவதென்ன? இதுவும் ஒரு அனுபவமே. Be positive என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
“வாரநாள், டிராபிக் அதிகமாயிடும். கிளம்பிட்டியாமா?” என்றபடியே சிவா வந்தார்.
“டூ மினிட்ஸ்” என்றபடியே நினைவுகளில் இருந்து வெளியேறினேன்.
நல்லவேளை, குளிர்காலம் இல்லை. ஜாக்கெட், ஸ்கார்ப், கையுறை, சாக்ஸ் என்று இதுகளை மாட்டவே பத்து நிமிடம் வேண்டும். டிசம்பர் மாதம், இன்னும் ஒரு வாரத்தில் கிருஸ்துமஸ் விடுமுறை தொடங்கிவிடும். பையையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
சிவா சொந்தமாக கம்பெனி வைத்துள்ளார், தனியாளாக நடத்துகிறார். அதனால் என்னுடைய wfh பகுதி நேர வேலை, work from companyஆக மாறிவிட்டது. செவ்வாய் கிழமைகளில் கம்பெனியில்தான் இருப்பேன். மதிய உணவு முடித்து, போக்குவரத்து நெரிசலுக்கு முன் கிளம்பிவிடுவேன்.
அப்படியொரு பொழுதில் மகனிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
“…..”
“ஏன், என்னாச்சு?”
“………..”
“அதுக்கு ஏன் வண்டியை (car) எடுத்துக்கிட்டுப் போறாங்க?”
“…………….”
“நீங்க போனை போலீசிடம் கொடுங்க, நான் அம்மாவை பேச சொல்றேன்”.
ஆஸ்திரேலியா போலீஸ் அதிகாரி தன்மையாக பேசினார்.
“பயப்படாதே, உன் மகனுக்கு ஒன்றுமில்லை. அவருடைய நண்பர் உன் வண்டியை அதிவேகமாக ஓட்டியதால் நாங்கள் வண்டியை பறிமுதல் செய்கிறோம்”.
“பொதுவாக அபராதம்தானே போடுவீர்கள்?”
ஆமாம், ஆனால் இவர் 50ல் 100 கிமீ ஓட்டிச் சென்றதால் எங்கள் அதிகார வரம்பை மீறியது. அதனால் வண்டியை பறிமுதல் செய்து பெளண்டில் வைத்திருப்போம். ஒரு மாதம் பொறுத்து நீ உன் வண்டியைப் பணம் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம் ஓட்டியவர் கோர்ட்டிற்குச் செல்லவேண்டும். கோர்ட் அவருக்கு என்ன அபராதம் என்று முடிவுசெய்யும்..
பணம் செலுத்தியா?
ஆம், பெளண்டில் வைத்திருப்பதற்கான வாடகை.
இதில் என் மகனின் நிலை என்ன?
அவர் பயணியாக இருந்ததால் ஒன்றும் பிரச்சனை இல்லை. உன் வண்டிதான் ஒரு மாதம் பெளண்டில் இருக்கும்.
என் மகனும், அவரது உற்ற நண்பரும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இப்பொழுது ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள். ஒரே உடற்பயிற்சி கூடம். எல்லாவற்றிலும் கூட்டுக் களவாணிகள். அனைத்து இடங்களுக்கும் ஒரே வண்டியில் (car pooling) ஓன்றாகவே செல்வார்கள். அன்று நண்பன் மதிய உணவு கொண்டு வராததால், இவர் சாப்பிட்டபடியே வர, அவர் வண்டியை ஓட்டிச்செல்லும்பொழுதுதுதான் இந்த மகா சம்பவம் நடைபெற்றது.
எங்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஒட்டியவனை விட்டுவிட்டு வண்டியைப் பிடிப்பானேன்? சிறிது நேரத்தில் நான் இருவரையும் வேலையிடத்தில் இருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். நண்பனுக்கு என்னைப் பார்க்க முகமில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்டான். பாவமாக இருந்தது.
It’s okay, How do you feel? Are you Okay? என்றேன்.
I am fine, I am fine என்றான். பதட்டமாக இருந்தான். என் மகனார் வாயையே திறக்கவில்லை.
மாலை சிவா வந்ததும், வண்டியை ஒரு மாதம் பெளண்டில் விடக்கூடாது எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்ற முடிவோடு இருந்தார். பெளண்டில் இருந்தால் வண்டி நாசமாகிவிடும் என்பது அவர் எண்ணம். எங்கள் எதிர் வீட்டிலிருப்பவர் காவல்துறையில் வேலை செய்பவர் என்று தெரியும். அவருக்குத் தொலைபேசியில் செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தோம். எதிர் வீடுதானே, நேரிலேயே போய்ப் பேசிவிட்டு வரலாம் எனக் கிளம்புகையில், அவரே கதவைத் தட்டினார்.
“உங்கள் செய்தி கிடைத்தது. நேரில் பார்த்துப் பேசி மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என வந்தேன்” என்றார். நாங்கள் விளக்கிச் சொன்னவுடன் தன் உடன் வேலை செய்பவர் முன்பு Highways Patrolling வேலை பார்த்தவர். அவரிடம் விசாரித்துச் சொல்கிறேன் என்றவர், ஒரு மணி நேரத்திற்குள் வந்து அதிவேகமாக சென்றதால், மேஜிஸ்ரேட்தான் இதில் முடிவுசெய்யவேண்டும் என்றும், நீங்கள் விரும்பினால் ஒரு பாரம் பூர்த்திசெய்து கொடுத்து Dandenong நீதிமன்றத்தில் உங்கள் வண்டியைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.
அடுத்த நாள், நானும் சிவாவும் நீதிமன்றத்துக்குச் சென்று, நான் வேலைக்கு செல்வதாலும், வயதான மாமியாரை பார்த்துக் கொள்ளவும் என் வண்டியை உடனே திரும்ப தரவேண்டும் என எழுதிக்கொடுத்தோம். நீதிமன்றம் மூடுவதற்கு அரை மணி நேரமே இருந்ததாலும், இன்னும் ஒரு வாரத்தில் கிருத்துமஸ் விடுமுறையும் தொடங்கிவிடும் என்பதாலும் பாரம் கொடுக்க அதுவே கடைசி நாள் என்று அலுவலகப் பெண் தெரிவித்தார். யாரிடமும் ஆலோசனை கேட்கத் தோன்றாமல் பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தோம். விடுமுறைக்கு ஒரு நாள் முன்பு தேதி கொடுத்தார்கள். “ஒன்பதரை மணிக்கெல்லாம் இருக்கவேண்டும். நான்கு மணிக்குள் எப்பொழுதுவேண்டுமானாலும் கூப்பிடுவார்கள்” என்றார் அலுவலகப் பெண்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் ஒன்று நாங்கள் கோபித்துக்கொண்டோம் அல்லது மகன் கோபித்துக்கொண்டார். இரண்டு நாட்களாகியும், நண்பன் இதைப்பற்றி அவர் வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. ஏன் என்று மகனிடம் கேட்டால்,
“அது, அவன் பிரச்சினை அம்மா. நீங்கள் ஏன் அதைப்பற்றி யோசிக்கவேண்டும்” என கேட்டவுடன் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“எப்படிச் சொல்லாமல் இருக்கிறான், அவன் பெற்றோருக்குத் தெரியவேண்டாமா?”
“அவனுக்குப் பதினெட்டு வயதாகிறது. அதை அவன் முடிவு செய்வான்” என்றார்.
வாயடைத்துப்போனேன். கோபம் வந்தாலும் காட்டிக்கொள்ள முடியவில்லை. சிவாவிடம் புலம்பித் தள்ளினேன். இரண்டு நாள் விடு. பிறகு பேசலாம் என்றார்.
அன்றிரவே, நண்பனின் காரில் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று வந்தார். எங்களுக்குத் தாங்க முடியாத கவலையும் ஆயாசமும் ஏற்பட்டது. இதைப்பற்றிக் கண்டிப்பாக பேசவேண்டும் என முடிவு செய்து இரவு உட்கார வைத்துப் பொறுமையாக விளக்கினோம். கொஞ்ச நாட்களுக்கு நண்பருடன் வண்டியில் செல்லவேண்டாம் என்றதற்குக் கடுமையாக உணர்ச்சிவசப்பட்டார்.
He is not that stupid amma. He will not speed again. You are worrying too much என்றார்.
We are your parents. We worry about your safety. Why can’t you understand that? It just happened today and you want to act like nothing happened?
Okay, then how am I supposed to go to work and gym?
அம்மா உங்களை டிராப் செய்து பிக்கப்பும் செய்வார் என்று சிவா சொன்னவுடன்
You guys are unbelievable. This is very very unnecessary என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துகொண்டார்.
இன்னும் நான்கு நாட்கள்தான். விடுமுறை தொடங்கிவிடும். நான்கு நாட்களும் காரில் என்னிடம் பெரிதாக எதுவும் பேசவில்லை. நண்பன் தன் வண்டியில் சென்றுகொண்டிருந்தார். எனக்கு புரியவேயில்லை. அதிவேகமாக ஒட்டியவன் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். என்ன விதமான சட்டங்கள்? விதிகள்?
பாதுகாப்பு சோதனைகள் முடிந்து எந்த அறை என்று தெரிந்துகொண்டு வெளியில் காத்திருக்கத் தொடங்கினோம். நம் பெயரை ஒலிபெருக்கியில் அழைக்கும்பொழுது உள்ளே செல்லலாம். ஒரு மணி நேரம் கழித்து சிவா உன் பெயரைத்தான் கூப்பிட்டார்கள் என்றார். என் பெயருக்கும் அவங்க கூப்பிட்டதற்கும் சம்மந்தமேயில்லை,
“ஏன்பா டென்ஷன் பண்றீங்க” என்றேன். “இல்லை, எதுக்கும் போய் நீ கேள்” என்றார்.
எங்கள் வீட்டில், பாரம் பூர்த்தி செய்ய, தொலைபேசியில் பேச, விசாரிக்க போன்ற வேலைகளுக்கு என்னை நேர்ந்து விட்டுருக்கிறார்கள். சலிப்புடன் சென்று, அறைக்கு வெளியில் இருந்த அதிகாரியிடம் கேட்டேன். அவர் தனக்கு ஒன்றும் தெரியாதெனவும், வேண்டுமானால் நீ உள்ளே சென்று உட்காரலாம் என்றும் கூறினார். சரி, என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என உள்ளே சென்று உட்கார்ந்தோம்.
கதவைத் திறந்துகொண்டு அறையின் உள்ளே நுழைந்தோம். வெளிச்சம் மிதமாக இருந்தது. நாங்கள் நுழைந்தவுடன் அமர்வதற்கு இரு பக்கமும் மரத்தாலான இருக்கைகள் இருந்தன. இரண்டு பக்கமும் 40 – 50 பேர் வரை அமரலாம். ஒரு வயதான தம்பதியும் மற்றும் ஒரு தம்பதி தன் வக்கீலுடனும் அமர்ந்திருந்தனர். மற்றபடி, அறை காலியாகவே இருந்தது. நுழைவாயிலுக்கு நேர் எதிரே வெள்ளைக்கார நீதிபதி நடுநாயகமாக, உயரமானதொரு மேடையில் அமர்ந்திருந்தார். அறுபதுகளில் இருப்பார். கீழே அமர்ந்திருந்த தன் உதவியாளப் பெண்களிடம் சிரித்துப் பேசி சகஜமாகக் காணப்பட்டார். இரண்டு பக்கமும் குற்றவாளி/சாட்சி சொல்பவர் ஏறி நிற்கும் கூண்டு. காவல்துறையில் இருந்து ஒரு அதிகாரி எதிரில் அமர்ந்திருந்தார். எல்லா வழக்குகளைப் பற்றியும் நீதிபதி அவரிடம் கேட்டுவிட்டு பின்பே குற்றம் சாட்டப்பட்டவரிடம் உரையாடினார்.
எங்கள் கதையை மறந்து மற்றவர்களின் கதையையும் நீதிபதி எப்படிக் கையாள்கிறார் என்பதிலும் ஆர்வமானேன். நேரம் போகப் போக சிவா அலுத்துக்கொள்ளத் தொடங்கினார். உன் முறை எப்பொழுது வரும் என்று உதவியாளப் பெண்ணிடம் கேள் என்றார். எனக்கோ நெருங்கவே அச்சமாக இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் இந்த ஊரில் அதெல்லாம் நடக்காது, பேசாம இருங்க என்றேன்.
நீதிபதி, பதின் வயது உள்ளவர்களிடம் கருணையுடனும், அக்கறையுடனும் நடந்துகொண்டார். அறிவுரைகளும் நேர்மறை எண்ணமும் தோன்றப் பேசினார். ஒரு வழக்கில், 21 வயதுடைய ஆண் தன் தாய் தந்தையருடன் வந்திருந்தார். எலக்ட்ரிஷியனாக வேலை செய்பவர். காவல் அதிகாரியிடம் வழக்கைத் தெரிந்துகொண்டபின், நீதிபதி அவரை பார்த்துக் “கண்டேன் சீதையை” என்று அனுமன் சொன்னதுபோல் எடுத்தவுடன் ” I am not going to convict you today” என்கிறார். தாய் வெடித்து அழுதுவிட்டார். அவரின் மாமாவின் நல்லொழுக்கச் சான்றிதழும், தாய் தந்தையரின் பின்புலமும், இதுவே முதல் முறை என்பதாலும் விடுவிப்பதாக கூறினார். தாயின் அழுகையைப் பார்த்து எனக்கு வயிறு பிசைந்தது. பையனின் முகத்தில் அப்பாடா என்று பாரம் இறங்கி விடுதலையின் புன்சிரிப்பு. மூவரும் வெளியேறினர்.
அடுத்த வந்த குடும்ப வன்முறை வழக்கில், கருணையும், பண்புமாக பேசியவரின் மறு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. உன் மனைவியும், குழந்தையும் உன்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். வெட்கமாக இல்லையா உனக்கு என்று கடிந்துகொண்டார். கண்டிப்புடனும், கோபத்துடனும் அடுத்தமுறை இம்மாதிரி நடந்தால் சிறைதான் என எச்சரித்து அனுப்பினார்.
அதற்குள், உணவு இடைவேளை வந்துவிட்டது. ஏற்கனேவே பத்து நிமிடம் காபி இடைவேளையும் முடிந்திருந்தது. சிவா மறுபடியும் போய்க் கேள் என்றதால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு போய்க் கேட்டேன். உணவு இடைவேளை முடிந்தவுடன் கூப்பிடுவதாகக் கூறினார். வரிசைப்படிதான் வரும் என்றார்.
சாப்பிடும்பொழுது, நீதிபதி பார்ப்பதற்கு ரொம்பப் பிராக்டிகலான ஆளாகத் தெரிகிறார், எப்படி ஒவ்வொரு வழக்கையும் கையாண்டார் எனப் பேசிக்கொண்டோம். நமக்கு வண்டிகிடைத்தால் சரி. இதுவும் ஒரு அனுபவம்.
மூன்று மணியளவில் என் பெயரை அழைத்தார்கள். நான் முன்னே சென்று நின்றேன். காவலதிகாரி சுருக்கமாக என் வழக்கை கூறினார்.
So you didn’t drive the car, your son did.
No Sir, My son’s friend did.
But the car is yours.
Yes, your honour.
Sir ஆ Your honour சொல்லணுமா என்ற குழப்பம்.
காவலதிகாரியிடம், வண்டியைத் தர ஆட்சேபம் உள்ளதா எனக் கேட்டார். அவர், நான் குறிப்பிட்ட இரண்டு காரணங்களையும் மறுத்தார்.
இந்த ஒரு மாதத்திற்கு உன் கணவர் அவர் தாயைக் கவனித்துக்கொள்ள முடியாதா? அவரிடம் வண்டி இருக்குதானே? என கேட்டார்.
இரண்டு வரிசைகளுக்கு பின் அமர்ந்திருந்த என் கணவரை பார்த்து அவர்தான் உன் கணவரா என்றார். சிவா எழுந்து நிற்கவும், please sit down gentleman என்றார்.
“I don’t feel sorry for you lady” என்னது …
I feel very very sorry for you….
ஆனால் இந்தக் காரணங்களுக்காக வண்டியைத் திருப்பித் தர இயலாது. நீ வேலைக்குச் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்துகொள். ஆகும் செலவை அந்தப் பையனிடம் வாங்கிக்கொள்.
No no Sir, that’s not the issue. I didn’t do anything wrong, it’s my car…
மனதில் வார்த்தைகள் ஓடியதே தவிர வாயில் காற்றுக்கூட வரவில்லை.
அப்படியே நின்றுகொண்டிருந்தேன். அதைப் பார்த்த நீதிபதி You are free to go என்றபடியே உதவியாளரைப் பார்த்து next என்றார்.
நான் திரும்பி கணவரைப் பார்க்க அவர் “வா போகலாம்’ என்றார்.
வண்டியில் ஏறி உட்கார்ந்தததும் ” என்னப்பா இது, நான் என்ன தப்பு பண்ணன்? அப்ப பிடிச்சாங்க சரி, இப்ப சூழல் தெரிஞ்சதும் வண்டியைத் திருப்பிக் கொடுக்கலைன்னா எப்படி?”
“இப்ப வந்து என்கிட்டே கேளு? அங்க கேட்க வேண்டியதுதானே?”
மகனுக்குச் செய்தி அனுப்பிவிட்டுப் பேசாமல் வீடு வந்து சேர்ந்தோம். வண்டி கிடைக்காததைவிட அவரிடம் எதுவும் பேசாமல் இப்படி அமைதியாக நான் வந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. என் பேச்சு, தைரியம் எல்லாம் எங்கே போச்சு? மாய்ந்துபோனேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பியிருப்பார்கள். அவ்வளவுதானே? என்னை நானே நொந்துகொண்டேன். இரண்டு நாட்களாகியும் என்னை நானே மன்னிக்கவில்லை.
சட்டம் படிக்கும் தோழியின் மகளிடம் கேட்டதற்கு அவர் “நீங்கள் கொடுத்த காரணங்களை வைத்து முடிவு எடுத்துள்ளனர். மூல வழக்கிற்கும், இதற்கும் சம்மந்தமில்லை. வழக்கறிஞர் வைத்து வாதிட்டால் வண்டியை எடுத்துவிடலாம் என்றார். ஆனால் விடுமுறை என்பதால் ஒரு மாதம் ஆகிவிடும். அதற்குள் வண்டி தாமாகவே கிடைத்துவிடும் என்பதால் பயனில்லை என்றார்.
ஒரு மாதம் பௌண்டில் வைத்திருந்ததற்கு வாடகை $1048. அதை மகனின் நண்பனே வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு மீண்டும் மன்னிப்புக் கேட்டார். தாய் தந்தையரிடம் சொல்லுவதுதான் நல்லது. ஏன் சொல்லத் தயங்குகிறாய் என்றதற்கு புன்சிரிப்புடன் “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
ஒரு மாதம் பொறுத்து, வண்டியை எடுக்கச் சென்றபொழுது ஏன் உன் நண்பன் வீட்டில் சொல்லத் தயங்குகிறான், நீயாவது எடுத்துச் சொல்லக்கூடாதா என்றதற்கு
I don’t know amma. I don’t understand why you are so obsessed with this?
obsessed ஆ நானா … பௌண்டில் பணம் கட்டிவிட்டு, வண்டி வருவதற்காக காத்திருந்தேன். கதவு திறந்து, வண்டி மெதுவாக எந்த வித மாற்றமும் இன்றி அலுங்காமல், குலுங்காமல் வெளியே வந்தது.