புதிய பரிமானம்
“This is really good, but are you sure you want this for an Indian Concert”? மார்ச் மாத, 11 மணி காலை வெயிலில் பொட்டானிக்கல் கஃபேயில் ஸ்டராங் லாட்டேயை குடித்தபடி, John Cain அரங்கததில அமைக்கப்போகிற மேடை வரைபடத்தை லேப்டாப்பில் பார்த்து Lawry சந்தேகமாக கேட்டார்.
அதற்கு ஒரு மாதத்திற்கு முன் பிப்ரவரி மாதம், சிட்னியில் இருந்த வந் நண்பன் மே மாதம், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் தமிழ்த் திரைப்பட இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறோம், மெல்போர்னுக்கு நீ உதவி செய்யணும் என்றபோது நான் சிறிது தயக்கத்தோடு தான் சரி என்றேன். சின்ன சின்ன கலை நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவம் இருந்தாலும், நான் யோசித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
சென்னையின் மார்கழி மாத குளிரை வருடத்தில் முக்கால்வாசி கொண்டிருக்கும் மெல்போர்னில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியினைப்போல் தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்கள் நிகழ்ச்சி, டிவி இசைப் போட்டியில் பிரபலம் அடைந்தவர்கள் நிகழ்ச்சி என்று வருடம் முழுவதும் ஏதாவது ஒன்று நடந்துகொண்டு இருப்பதால், பெரிய பேனர் இல்லையென்றால் கூட்டம் வருவது கஷ்டம்.
அதுவும், திரையுலகில், இசைஞானி,இன்னிசைத் தென்றல், இசைப் புயல், என்று பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்களது இசைக்கச்சேரி என்று வரும்பொழுது, இன்றும் அது அந்தக் காலத்து மெல்லிசைக் கச்சேரியாகத்தான் நடைபெறுகிறது. மேடை பக்கத்தில் இருக்கும் முதல் பத்து வரிசையில் இருப்பவர்கள் எல்லா பாடல்களுக்கும் கையை மட்டும் தட்டி ரசிப்பார்கள், அதே சமயம் இசையை உள்வாங்கி மெய்மறந்து ஆடிக்கொண்டு ரசிப்பவர்கள் பெரும்பாலும் பின் வரிசையில்தான் இருப்பார்கள்.
அதனாலேயே, இந்த கச்சேரிகளுக்கு இன்னும் 70’ஸ் மற்றும் 80’ஸ் காலத்து மக்கள் மட்டுமே வருகிறார்கள், இன்றைய இளம் வயதினர் அதிகமாக வருவதில்லை. அவர்களுக்கு மேற்கத்திய இசை மற்றும் பாலிவுட் இசை நிகழ்ச்சியில் இருக்கும் ஆட்டம் பாட்டம் இல்லாததே அதற்கு காரணம்.
ஆனால் இந்த முறை வருவது அனிருத் என்று நண்பன் சொன்னவுடன், எனக்குள் இருந்த “கூட்டம் வருமா”? என்ற சந்தேகம் போய், எப்படியாவது நல்ல இடத்தில இருந்து பார்க்க டிக்கெட் கிடைத்திடும் என்கின்ற நம்பிக்கையுடன் கண்டிப்பா செய்யலாம் என்றேன்.
நண்பனின் பார்ட்னர், இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் AR ரஹ்மான் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருந்ததால், சிங்கப்பூர் அமைப்பு , நண்பனது கம்பெனியுடன் பார்ட்னெர்ஷிப்பில் அனிருத்தின் “Hukkum – World Tour”, ஆஸ்திரேலியா நிகழ்ச்சியினை நடத்த ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.
இவர்களுக்கு முன்னர் பல பேர் அனிருத்தை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துவர முயற்சித்தும் முடியாமல் போனதால், இங்குள்ள பல நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு ஆச்சரியமும் அதே சமயத்தில் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை மூன்று மாதத்திற்குள் வெற்றிகரமாக நடத்த முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
அடுத்த இரண்டு மாதத்தில், சிங்கப்பூரில் இருந்து டெக்னீசியன் குழு, சென்னையில் இருந்து அனிருத்தின் பர்சனல் மற்றும் ப்ரோக்ராம் மேனேஜர் குழு என்று ஒவ்வொரு வாரமும் வரிசையாக வந்தவர்களுடன் இரண்டு நகரத்தில் அரங்க அமைப்பு, குழுவிற்குரிய தங்கும் மற்றும் உணவு வசதிகள், அவர்கள் மற்றும் அவர்களது இசைக்கருவிகளின் போக்குவரத்து வசதிகள், மிக முக்கியமான நிகழ்ச்சிக்குரிய டிக்கெட் விற்பனை என்று பல ஏற்பாடுகள் மற்றும் விவாதத்தில் கலந்து கொண்டதின் முலம் , இது ஒரு புதுவிதமான, பிரம்மாண்ட தமிழ் இசை நிகழ்வாக இருக்கும் என்பது உறுதியானது.
இத்தனை ஏற்பாடுகளில், அதிக கவனமும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது கச்சேரிக்குரிய மேடை மற்றும் ஒளி, ஒலி அமைப்பு. இதற்கு சிங்கப்பூர் ஸ்டேஜ் டெக்னீசியன் Melbourne Docklands ரூமில் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து வரைந்த மேடை வரைபடத்தைப் பார்த்து, பொட்டானிக்கல் கஃபே-யில் ஆச்சரியப்பட்டு Lawry கேட்ட கேள்விதான் , ‘‘This is really good, but are you sure you want this for an Indian Concert”?.
Lawry, 73 வயது இளைஞர்Taylor Swift-இன் ஆஸ்திரேலியா நிகழ்ச்சிக்கு, மேடை, ஒலி மற்றும் ஒளி அமைத்துக் கொடுத்தவர். அவரது சந்தேகத்துக்குக் காரணம்,அனிருத்தின் முதல் மேடை வரவை பிரம்மாண்டப்படுத்த மேடையின் அடியில் இருந்து மெதுவாக மேலே எழும்புவதற்கு Hydraulic லிப்ட், ரசிகர்களின் அருகில் வரைக்கும் செல்வதற்கு நீண்ட catwalk நடைபாதை, மற்றும் கிட்டத்தட்ட 45 நிமிடம், அந்தரத்தில் பெரிய கீபோர்டுடன் நின்று கொண்டு பாட அரங்கத்தின் கூரையிலிருந்து தொங்கும் பெரிய ஊஞ்சல் என்று ஹாலிவுட், ராக் ஸ்டார் நிகழ்ச்சிகளுக்குரிய மேடை அமைப்பை வரைபடத்தில் பார்த்துதான்.
இத்தனை ஏற்பாடுகளையும் மெல்போர்ன் மட்டும் இல்லை, ஒரு நாள் இடைவேளையில் சிட்னியிலும் செய்யவேண்டும் என்று சொன்னபொழுது, இதனை இரண்டு மாதத்திற்குள் தயார் செய்து, இரண்டு அரங்கத்தில் ஒரு நாள் இடைவேளையில் அமைத்து தரவேண்டும் என்ற சவால் டுயறசல-க்கு கொஞ்சம் பெரியதாகத்தான் தோன்றியதுபோல் இருந்தது.
அடுத்து இரண்டு மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை இதை போன்ற நிகழ்ச்சிகளுக்கு பின் இருக்கும் திட்டமிடலின் பிரம்மாண்டத்தை காட்டியது.அந்த சவாலுக்குரிய தொகையை Lawry சொன்னவுடன் திட்டமிடலைவிட இந்த நிகழ்ச்சியின் பண முதலீட்டின் பிரம்மாண்டம் இன்னும் பெரியதாக தோன்றியது.
Taylor Swift நிகழ்ச்சிக்கு மேடை அமைப்பை ஒரு பெரிய warehouse இல் முழுவதுமாக அமைத்து, ஒத்திகை பார்த்து, பின்னர் அதனை பகுதி பகுதியாக பிரித்து பன்னிரெண்டு பெரிய டிரக்கில் எடுத்துச் சென்று ஒவ்வொரு அரங்கத்திலும் அமைத்து கொடுத்ததை சொன்னபொழுது, அவர் கேட்ட தொகைக்கு காரணம் புரிந்தது.
Lawry கேட்ட ஒரே உதவி,மெல்போர்னில் நிகழ்ச்சி முடிந்தவுடன், அவர்களுக்கு மேடையை 12-மணிக்கு கொடுத்துவிடவேண்டும் என்பதுதான். ஏனென்றால் அவர்கள் அதற்க்குப் பிறகு மொத்த மேடை மற்றும் ஒளி, ஒலி அமைப்பை பிரித்து டிரக்கில் ஏற்றி மறுநாள் இரவுக்குள் சிட்னியில் மீண்டும் அமைத்து தர வேண்டும்.
அடுத்தபடியாக குழுவினருக்கு தேவையான தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க, மெல்போர்னில் உள்ள அனைத்து 5-ஸ்டார், மற்றும் 7-ஸ்டார் ஹோட்டல்களை விஜயம் செய்து, கடைசியில் உலகப் புகழ்பெற்ற Crown Casino என்று முடிவு செய்யப்பட்டது. தான் தங்கும் அதே இடத்தில்தான் அனைத்து குழுவினருக்கும் தங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று அனிருத் சொன்னது, அவரது குழுவின் மேல் அவருக்கு உள்ள நட்பினைக் காட்டியது. உணவு ஏற்பாடுதான் மிகவும் சுலபமான காரியமாக இருந்தது என்று சொல்லலாம். அதற்குக் காரணம் அனிருத் மற்றும் அவரது பெற்றோர்கள் சைவ உணவு போதும் என்றதுதான். மேலும், சரவண பவன் அருகிலே இருந்ததும் ஒரு காரணம்.
இந்த ஏற்பாடுகளை முடிவு செய்வகற்காகவே சென்னையிலிருந்து அனிருத் குழுவில் இருந்து இருவர் வந்தார்கள், அவர்களுக்கு பெயர் ” “Recce” team (reconnaissance team).
இப்படி, preproduction வேலைகள் ஒருபுறம், நிகழ்ச்சி நாளின் திட்டமிடல் ஒரு புறம் என்று எல்லோரும் மும்முரமாக இருக்க, சிங்கப்பூர் அமைப்பினருக்கு, டிக்கெட் விற்பனையின் மிதமான வேகம் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தியது .
நிகழ்ச்சி வியாழக்கிழமை என்றாலும் அனிருத்தின் முதல் ஆஸ்திரேலியா நிகழ்ச்சி என்பதால் டிக்கெட் விற்பனைக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று இங்கு உள்ள எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. முக்கியமாக, முதல் முறையாக, மேற்கத்திய இசை நிகழ்ச்சிபோல் மேடைக்கு மிக அருகே ஆடிக்கொண்டே பார்ப்பதற்கு என்று இரண்டு பெரிய நிற்கும் இடம் உள்ளது என்ற அறிவித்தவுடன், அந்த இரு வகை டிக்கெட்டின் மிக அதிக விலை பற்றி சிறிதும் கவலைப்படாமல், தெரிந்த மற்றும் தெரியாத நண்பர்கள் குழுவில் இருந்து ஒவ்வொருவரும் குறைந்தது முப்பது டிக்கெட் அந்த இடத்திற்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது, இளம் வயதினரிடம் இருந்த வரவேற்பை உறுதிப்படுத்தியது. அதில் ஆச்சரியப்படுத்திய விஷயம் ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்புக்காக வந்த மாணவர்கள் குழு மொத்தமாக இருநூற்று ஐம்பது டிக்கெட்டை மேடைக்கு அருகில் நின்று பார்ப்பதற்கு வாங்கியதுதான். அதேபோல், நிகழ்ச்சி நாள் நெருங்க நெருங்க, டிக்கெட் விற்பனை சூடு பிடித்ததை பார்த்து நம்பிக்கை கூடியது.
நிகழ்ச்சியின் முதல் நாள் இரவு, அனிருத் மேடையில் ஒத்திகை பார்த்ததை கண்டவுடன் எல்லோருக்கும் உறுதியாகி விட்டது, இது கண்டிப்பாக மெல்லிசை கச்சேரியாக இருக்க போவதில்லை, முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்க போகிறது என்று.
மாலை 7.30 மணி நிகழ்ச்சிக்கு காலை 11.30 மணிக்கே வெளியில் சேர்ந்துவிட்ட கூட்டத்தை பார்த்து, கேட் எண் 8ல் இருந்த செக்யூரிட்டி கேட்டது, “Is the performer big shot in India”?. ஏனென்றால் இதுவரைக்கும் இந்திய இசை நிகழ்ச்சிக்கு இவ்வளவு சீக்கிரம் கூட்டம் வந்ததில்லை என்றார்.
அப்படி வந்த கூட்டம் எல்லாம் standing டிக்கெட் வாங்கிய இளம் வயதினர். மாலை 4 மணிக்கு கிட்டத்தட்ட ஒரு சிறு கச்சேரியே வெளியே நடந்து கொண்டிருந்தது. அரபிக்குத்து, காவாலா, ஆலுமா டோலுமா என்ற புதிய சொற்களின் அலங்காரத்தில் தமிழ் இசை அகராதியில் இடம்பெற்றுள்ள புதிய பாடல்களுக்கு ஆடியே களைத்துப்போய் பல பேர் கீழே உட்கார்ந்துவிட்டார்கள்.
வாசல் திறந்தவுடன் உள்ளே வந்த ஒவ்வொரின் முகத்திலும் பூரிப்பு கலந்த மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு. பல பேர், முதல் முறை தமிழ் கச்சேரிக்கு என்று வந்தவர்கள். 5 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் வந்ததில் ஆச்சிரியம் இல்லை, ஆனால் 75 வயது தம்பதியினர் வந்து அனிருத்தின் பட போஸ்டருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை பார்க்க இசைக்கு மொழி மட்டும் இல்லை வயதும் இல்லை என்று தோன்றியது அழகாக இருந்தது.
7.30 மணிக்கு ஆரம்பித்து MC, Minister Speech என்று முடித்து, DJ கவுண்டவுன் ஆரம்பிக்க, மொத்த அரங்கமும் உடனிணைந்தது. மேடை முழுவதும் சிகப்பு கலரில் ஒளிர, பிரம்மாண்ட டிஜிட்டல் திரையில் outline வரைபடத்தில் அனிருத்தின் முகம் மெதுவாக தோன்ற, பின்னால் ‘‘இங்கு நான் தான் King” என்ற Jailer படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வசனத்துடன், Hydraulic lift ல் அனிருத் மேலே வர, இந்த முறை அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.
அடுத்து மூன்று மணிநேரம், இடை வெளியில்லாமல், why this kolaiveri இல் இருந்து, Jailer இல் புகழ்பெற்ற காவாலா வரை அனைத்து புகழ்பெற்ற பாடல்களையும் பாடி, எல்லோரையும் பாடலுடன் ஆடல் என்று மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டார்கள்.
மேலே தளத்தில் முதல் வரிசையில் 50 டிக்கெட் ஒன்றாக வாங்கிய நண்பர்கள் குழுவில் இருந்த எல்லா குழந்தைகளும் ஒரு நிமிடம் கூட இருக்கையில் உட்காராமல் மூன்று மணிநேரமும் ஆடிக்கொண்டே இருந்தார்கள்.
ஆடவைக்கும் பாடல்களின் நடுவே, அந்தரத்தில் ஊஞ்சலில் நின்றபடி அரைமணி நேரத்துக்கும் மேல், அனிருத் பாடிய, பெரும்பாலும் காதல் பாடல்களை வரி விடாமல் கூடவே இங்கு பிறந்து வளர்ந்து வரும் இளவயதினர் தெளிவான உச்சரிப்புடன் பாடுவதை அருகில் இருந்து கேட்ட பொழுது ஆனந்தமாக இருந்தது. “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” என்ற தத்துவத்தை “கெத்து காட்டிட்டு அழுவுறனே அழுதுமுடிச்சிட்டு சிரிக்கிறனே” என்று கநநட பண்ணி இன்றைய தமிழில் அவர்கள் பாடியதை கேட்க சொற்கள் மாறினாலும் பொருள் மாறாமல் தமிழ் இவ்வழியில் வளர்வதை பார்க்க ஆனந்தமே!.
ஊஞ்சல் மெல்லிசை முடித்து, அனிருத் உள்ளே சென்றவுடன் ஆஹா அவ்ளவுதானா என்று கூட்டம் சிறிது சோர்வடைந்தது. ஆனால் திடீரென்று இருக்கையில் இருந்த மக்களின் நடுவே தோன்றி, படிவழியாக இறங்கி அனைவருக்கும் நன்றியை கூறிக்கொன்டே வந்து மேடையில் ஏறி, “என்ன மெல்போர்ன்? இறங்கி குத்தலாமா?” என்று கேட்டவுடன், மூன்று மணி நேரத்துக்கு முன் இருந்த துள்ளலுடன் அரங்கம் முழுவதும் எழுச்சியடைந்தது . அடுத்த அரைமணிநேரத்துக்கு, சென்னையின் சிறப்பு குத்தாட்டம்
மெல்போர்னின் hallmark ஆட்டமாக மாறியதை பார்த்து, சிங்கப்பூர் மற்றும் சிட்னி அமைப்பாளர்களும் அவர்களது முயற்சி வெற்றி அடைந்துவிட்டது என்று இறங்கி குத்தாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
மெல்போர்னின் வெற்றி அடுத்த இரண்டு நாளில் சிட்னியின் டிக்கெட் விற்பனையிலும், அங்கு வந்த கூட்டத்தின் சந்தோஷத்திலும் ஆடலிலும் தெரிந்தது.
சிட்னியில் நிகழ்ச்சி முடிந்தவுடன், அனிருத் மீண்டும் இங்கு கண்டிப்பாக வருவேன் என்று கூறியதை கேட்டு அமைப்பாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. முக்கியமாக , அரங்கம், மற்றும் மேடை அமைப்பு தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று அனிருத் கூறியது Lawryகு கூடுதல் சந்தோஷம்.
“Never had such fun with Indian music”, “It was like DJ party”, “50-cents, Taylor Swift and now Anirudh” – என்று இளம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூறியது, தமிழ்த் திரை இசைக் கச்சேரி எடுத்துள்ள புதிய பரிமாணத்தின் வெற்றியைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது.
விடைபெறும் பொழுது, Lawryயிடம், “what do you think now” என்று கேட்டபொழுது, “You guys proved me wrong, this shows that you guys need more such format and setup”.
அவர் கூறியதைப் போல் இந்த புதிய பரிமாண இசையின் வழியாகவும் தமிழ் இன்றைய தலைமுறையினரிடம் வளரும் என்றே தோன்றுகிறது.
“பாலே இங்கு தேறல? பாயசம் கேக்குதா?” என்று கேட்பது தெரிந்தாலும், கண்டிப்பாக இவ்வழியிலும் தமிழ்பால் பொங்கி வ(ள)ரும் என்று நம்புகின்றேன்.