முழக்கம் பெரு முழக்கம்
பேரழிவுக்கான அறிகுறி
போர்க்களத்தில் ஆயுதங்கள், ராணுவவீரர்கள் என்று
கண்கள் எட்டும் தூரம்வரை படை திரட்டப்பட்டது.
யுத்தம் இரு கட்சிகளுக்கிடையே மூள
வீரர்கள் ஒன்றின் பின் ஒன்றாய் மடிய
குருதி ஆறாகப் பெருக்கெடுத்து
வானத்தையே கடுஞ் சிவப்பாக மாற்றியது.
அரசியல் மற்றும் சுயநலக் காரணங்களினால் தொடங்கி
அப்பாவி மக்களின் உயிரைப் பணயமாக்கி
நியாயத்திற்காகவே என்று காரணம் காட்டி
அகிலத்தில் நடக்கும் பேரழிவு இந்தப் போர்.
அனுபவமே சிறந்த ஆசான் என்பதை மறந்து
எம் வரலாற்றை மறைத்து
யுகங்கள் முன் நடந்த கலிங்கத்துப் போரிலிருந்து
உக்கிரேன் போர்வரை மாற்றம் என்பதைக் காணோம்.
கலிங்கத்துப் போரில் ஈட்டி, வாள், கதாயுதம், அம்பு.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால்
உக்கிரேனில் அணுகுண்டு, துப்பாக்கி.
இதுவா நாம் பெருமைப்படும் முன்னேற்றம்?
நேற்று, இன்று, நாளை. இவை எதற்காக?
நேற்றுச் செய்த பிழைகளை உணர்ந்து
இன்று செய்யும் செயலைத் திருத்தி
நாளை நடக்கவிருக்கும் தவறுகளைத் தவிர்ப்பதற்காக அல்லவா?
வாழ்வென்பது வாழும் நிமிடத்திற்கே சொந்தமாகும்.
எம் வாழ்வைப் படிப்பினையாகக்கொண்டு
இருள் பற்றிய வழியில் பற்றுதல் நீக்கி
சத்திய நெறியில் வாழவேண்டும்.
இருள் சூழ்ந்த அமைதியற்ற பாதையா?
அல்லது ஒளி பொருந்திய நிம்மதியான வாழ்வா?