Arts
10 நிமிட வாசிப்பு

முதுமையிலும் இளமையா?

February 25, 2024 | சியாமளா சோமசுந்தரம்

தனிமையில் இருக்கும்போது நான் பலமுறை சிந்தித்ததுண்டு, என்னைப் பற்றியல்ல, என் போன்ற மூத்தோரைப் பற்றியே!

மூத்தோரிலும் பலதரப்பட்டவர்களைப் பார்த்துப் பேசுகிறோம். இதற்கு மூத்தோர் ஒன்று கூடல்கள் எமக்குப் பேருதவி செய்கின்றன. ஆத்மார்த்தமான பல நண்பர்கள், நண்பிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றனர்.

எம் உடல்தான் முதுமையின் வயப்படுகிறது. உள்ளம் என்றும் இளமைதான். எம்மால் பாடவும் முடியும், ஆடவும் முடியும், நாடகம் போடவும் முடியும், மேடையில் பேசவும் முடியும், விவாதம் புரியவும் முடியும் என்பதைப் பல மூத்தோர் நிரூபித்தும் காட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மனம் மிகவும் மகிழ்வடைகிறது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்;

உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கமையப் பல பிள்ளைகள் தம் பெற்றோரை இயன்ற அளவு பராமரிப்பது உவகையை ஏற்படுத்துகிறது. வெள்ளிக்கிழமை பகல் வேளையில் என் மூத்த சகோதரியுடன் கோவிலுக்குச் செல்லும்போது, வயதில் மிகவும் மூத்தவர் சிலரைக் கண்டு அவர்களுடன் பேசியுள்ளேன். “கூட்டம் அதிகம் இல்லாத நேரம் தாங்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகவும், தமது பிள்ளைகள் அதற்கு ஏற்பாடு செய்து தந்துள்ளதாகவும்” கூறினார். மேலும் “தமது வேலைப்பழு, பிள்ளைகளின் கல்வி, வீட்டின் தேவைகள் இவ்வளவு சுமைகளின் மத்தியிலும் தம் பெற்றோரையும் கவனிக்கும் எம் பிள்ளைகள் நலமாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும்” என இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினர். இது மூத்தோரின் மனம் நிறைந்த வாழ்த்தாகும். இதற்கு ஈடாக எதையுமே கூறவோ, பெறவோ முடியாது. பெற்றோர் இளமைக் காலத்தில் தம் பிள்ளைகளை எப்படிக் கவனித்தார்களோ அதேபோல பிள்ளைகளும் தம் பெற்றோரைக் கவனிப்பதுதான் செய்நன்றி மறவாமை ஆகும்.

மூத்தோரில் சிலர் கணவனையும், சிலர் மனைவியையும் இழந்து ஜோடியைத் தொலைத்த புறாக்களாகத் தனிமையில், பேசுவதற்கும் யாருமற்ற நிலையில் தவிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்து அவர்களின் மனநிலையும் பாதிப்படைகிறது. இந்நிலை பிள்ளைகளுக்கு அதிகத் துன்பத்தைக் கொடுக்கும். இதைத் தவிர்க்க அவர்கள் வெளியே சென்றுவர வழி வகைகளைச் செய்யவேண்டும்.

நாணயத்திற்கு இரு பக்கம் உள்ளது போலச் சில பிள்ளைகள் நேர்மாறாக உள்ளனர். எம்மில் மூத்தோர் பலரும் ஈழப்போரில் தாய் நாட்டிலிருந்து புலம் பெயர்த்தோரே ஆவர். அவர்கள் தம் பிள்ளைக்கும் பல விதங்களிலும் உதவி செய்தே வருகின்றனர். ஆனால் பிள்ளைகள் தம் பெற்றோரின் தளர்ச்சியடைந்த உடலையும், அவர்களின் உடலைத் தாக்கியுள்ள நோய்களையும் மட்டுமே பார்க்கின்றனர். அவர்களின் மனதையும், அதன் இளமையையும் பார்ப்பதில்லை. ஏனெனில் அதை வெளிப்படையாகப் பார்க்க முடியாது. பெற்றோருடன் பேசிப் பார்ப்பதன் மூலமே இதை உணர முடியும். பிள்ளைகளுக்குத்தான் அதற்கு நேரம் கிடைப்பதில்லையே.

மூத்தோர் தம் வீட்டினுள்ளேயே பொழுதைப் போக்குவதைத் தவிர்த்து அவர்களும் தமது வயதை ஒத்தவர்களுடன் பொழுதைக் களிக்க உதவ வேண்டும். அவர்கள் விரும்பும் இடங்களுக்கும், ஆலயங்களுக்கும் செல்ல உதவ வேண்டும். பொழுதுபோக்கிற்கும் வழியமைத்துக் கொடுப்பது நல்லது.

என் மூத்த சகோதரிக்குக் குழந்தைகள் இல்லை. எங்களுடன் தான் இருக்கிறார். அவர் என் மகளை 3 வயதிலிருந்தே தன் மகள் போல் பாசத்தைப் பொழிந்து வளர்த்தவர். இன்று உடல் தளர்ந்து, பல நோய்களுக்கும் உள்ளாகி இருந்தாலும் மகிழ்வாக இருக்கிறார். அவரை வெளியே அழைத்துச் செல்லப் பல ஒழுங்குகளையும் என் மகள் செய்து தந்துள்ளார். பல சிரமங்களின் மத்தியிலும் என் மகள் என் சகோதரியின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறாள் என்பதைப் பெருமிதத்துடன் கூறுகிறேன்.

இன்று மூத்தோராகிய நாம் வாழ்வது அவுஸ்திரேலியாவில். இங்கே பல வசதிகளையும் அரசாங்கம் எமக்குச் செய்து தந்துள்ளது. ஓய்வூதியம் கிடைக்கின்றது. போக்குவரத்துக்குப் பிரயாணச் சலுகை (டக்ஸி கார்ட்) உள்ளது. ஆனால் இதையெல்லாம் பெறுபவர் சிலரே. மூத்தோர் பலரும் ஒன்று கூடலுக்குச் செல்லவோ, பிற இடங்களுக்குச் செல்லவோ அதிக சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு மனம் இருந்தாலும் மார்க்கமில்லை. மரணத்தை விடக் கொடுமையானது தனிமை.

அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்த பெற்றோரை, பிள்ளைகளே சுமையாக எண்ணுவது தவறு. அம்மா தன் பிள்ளைகளுக்கு விருப்பமான உணவைச் சமைத்துக் கொடுத்ததும், அப்பா வேலையால் வந்ததும் “பிள்ளைகள் சாப்பிட்டார்களா?” எனக் கேட்ட பின்பே தன் உணவில் கைவைத்ததும் பிள்ளைகளுக்கு ஞாபகத்தில் வருவதில்லையா?

பிள்ளைகளே, உங்கள் அன்றாடக் கருமங்களில் உங்கள் தாய், தந்தையருடன் 10 நிமிடமேனும் உரையாடுவதையும் ஒன்றாக இணைத்துக்கொள்ளுங்கள். இச்செயற்பாடு அவர்களின் மனதை இலேசாக்கி மனமகிழ்வை ஏற்படுத்தும். தமது மனக்குறைகளை வாய்விட்டுக் கூறுவார்கள். மன இறுக்கம் அகன்று மகிழ்வாக இருப்பார்கள். அவர்களுக்கு இனிப் பொன்னோ பொருளோ தேவையில்லை. மனமகிழ்ச்சி ஒன்றுதான் வேண்டும். இதுவே பிள்ளைகளின் வாழ்வையும் உயர்த்தும்.

என் மனதில் ஆழமாகப் பதிந்த வடு ஒன்று உள்ளது. இது காலத்தாலும் அழிக்க முடியாதது. சம்பவத்தை மட்டும் கூற விரும்புகிறேன்.

2000ஆம் ஆண்டு தென்மராட்சி இடப்பெயர்ச்சியில் மக்கள் அனைவரும் தம் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து கைதடி தரவையினூடாக யாழ் நோக்கி நடந்து சென்றனர். நாமும் சென்றோம், பாம்புகள் போல் பற்றையினுள் ஊர்ந்தும், பதுங்கியும் சென்றோம். சீறிப் பாய்ந்து வரும் குண்டுகள். வழி நெடுகிலும் சடலங்கள். நீர்வேலியில் எனக்குத் தெரிந்த பலரும் இயன்றளவு பொருளுடன் வந்திருந்தனர். அதில் ஒரு பெண் குழந்தை என்னிடம் ஓடிவந்தாள். “டீச்சர் சுகமா?” என்றாள். என்னிடம் படித்தவள். நான் அவளை அணைத்தவாறே “எல்லோரும் வந்து விட்டீர்களா?”  எனக் கேட்டேன். அவளும் “அம்மா, அப்பா, நான், தம்பி எல்லோரும் கஷ்டப்பட்டு வந்தோம். தம்பியையும், என்னையும் அப்பா சைக்கிளில் ஏற்றி உருட்டி வந்தார்.” என்றாள். “அப்போ அப்பம்மா வரவில்லையா?” எனக் கேட்டதற்கு அவள் அளித்த பதில் இடிபோல் என் செவிகளில் விழுந்தது. “அவர் நடக்கக் கஷ்டப்பட்டார் என அப்பா அவரை அழைத்து வரவில்லை. 10 நாட்களுக்குப் பிறகு சைக்கிளில் போய் அழைத்து வருவார்.” இதுவே அவள் கூறிய பதில். வந்தவர்கள் உடனே திரும்ப முடியாது என்பது பாவம் குழந்தை அவளுக்குத் தெரியவில்லை. திரும்பவும் நாம் தென்மராட்சி சென்றது, 1 1/2 வருடங்களின் பின். நடந்து வந்த களை, வீட்டை விட்டு வந்த கவலை, எல்லாவற்றையும் விஞ்சி விட்டது இப்பேரிடித் தகவல் இதிலிருந்து மீள ஒரு வாரம் சென்றது.

இன்று வரை மூத்தோரிடம் அன்பு செலுத்த இதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். மூத்தோரை அரவணைத்து அவர் தம் தனிமையைப் போக்கி நாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்விப்போம்.  

மூத்தோரே, உங்களுக்கும் ஓர் பணிவான வேண்டுகோள். நீங்கள் வயதில் மூத்தோர் எனக் கூறிக்கொண்டு பிள்ளைகளுக்குப் புத்திமதி கூறுகிறேன் என்று புறப்பட்டு விடாதீர்கள். நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. உங்களை விடவும் உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள். உலக அறிவு அவர்களுக்கு அதிகம். ஆனால் அவசரயுகம். நேரமோ குறைவு, வேலையோ அதிகம். பெரியவர்களான நீங்கள் நிலைமையைப் புரிந்து செயலாற்ற வேண்டும். அப்போது தான் வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும்.

1967இல் “இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல் கொடுக்கின்ற கோவிலது” என்ற பாடல் மூலம் தாயைச் சிறப்பித்துப் பாடிய கவிஞர் கண்ணதாசன், இருக்கும் பிடி சோற்றையும் தான் உண்ணாமல் குழந்தைகளுக்குக் கொடுத்து, நீரால் வயிற்றை நிரப்பி, ஈற்றில் நோய் வாய்ப்பட்டுப் பிள்ளைகளுக்குச் சுமையாகி மரணத்தைத் தழுவிய தாயைப்பற்றிய சோகப் பாடல் பாட இன்று நம்மிடையே இல்லை. இத்தாயின் செயலானது தன்னையும் வருத்திப் பிறரையும் வருத்தமடையச் செய்வதே என்பது எனது கருத்தாகும். இதையே இன்றைய மூத்தோர் செய்கின்றனர். மனதில் உள்ள பாரங்களைப் பிள்ளைகளிடம் கொட்டி விடுங்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இதையே இன்று 2023இல் வாழும் ஒரு தாயின் செயலைப் பார்ப்போம். அவள் அதி புத்திசாலி. “நீ பாதி நான் பாதி கண்ணே” என உணவைப் பாதியாக்கிப் பிள்ளைக்கும் கொடுத்து, தானும் உண்டு இருவரின் பசியையும் போக்குகிறாள். இது தான் வாழ்க்கையைப் புரிந்து வாழும் வழி. இதை மூத்தோரும், இளையோரும் புரிந்து கொண்டால் எக்குறையுமே இல்லை. நாம் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தோரே. தாய், தந்தையர் எமது சொத்து. எமது கலாச்சாரம், பண்பாடு தன்நிகரற்றது. வள்ளுவரையும், பாரதியாரையும், ஒளவையையும் போற்றும் நாம் எம் பெற்றோரையும் போற்றுவோம்.

சியாமளா சோமசுந்தரம்


69 பார்வைகள்

About the Author

சியாமளா சோமசுந்தரம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்