Arts
10 நிமிட வாசிப்பு

ஒப்பிட்டு உழல் நெஞ்சம்

September 11, 2024 | கேதா

மானுடராய்க் கூர்ப்படைந்த உயிர்கட்கெல்லாம்

மனதுக்குள் மந்திக் குணம் மாறாதுண்டு

கடல் தாண்டித் தொலைதூரம் வந்தால் கூட

அதைக் கவனமாகக் காவுகிறார் காலந்தோறும்

போகின்ற இடம்தன்னை புரிந்திடாமல்

போகின்ற நோக்கமதும் புலப் படாமல்

பேய் என்ன செய்வதென்றும் முடிவில்லாமல்

புகுவார் பின் புகுவதையே தொழிலாய்ச் செய்வார்

நிலைகொள்ளா மனதோடு நிதமும் வாடி

நடைபோடும் வழி எழிலை நயந்திடாமல்

நாளைக்கு என்ன என்றே நடுக்கமுற்று

நற்கணங்கள் நாள்தோறும் தொலைக்கின்றாரே

தமக்கென்ன வேண்டுமென்ற முடிவை ஆங்கே

தம்மருகே வாழ்கின்ற மனிதர் கொள்ளும்

பொருளோடு போகத்தைக் கொண்டே அதுவே

பொருத்தமென்று தம்வாழ்வில் பொருத்திக்கொண்டார்

முகமறியா மனிதனவன் உயர்வைக் கண்டு

முகநூலில் பெருமையொடு பகிர்ந்தாற்கூட

அருகாமை உள்ளவனின் வளர்ச்சி கண்டால்

அடிவயிறு கனன்று மனம் உழல்வதேனோ

தக்காரைச் சேர்வதில்லை பெருமையெல்லாம்

உடனிருப்போர் தயவன்றி உழைப்பால் இல்லை

தமைத் தாண்டி தம் நண் பர் உயர்தல் கண்டு

ஒருநூறு காரணங்கள் உரைக்கும் நெஞ்சம்

அறிந்தவர்கள் புதுமனையில் குடி புகுந்தால்

அதுபிழையோ இது சிறிதோ என்று கூறி

அவர் மனதில் சஞ்சலத்தை விதைத்தே

மீளும் அரியவகை உயிரினத்தை அறிந்ததுண்டோ

சுற்றத்தைத் தன்னோடு ஒப்புக்கு நோக்கி

சுழலிட்ட இலைபோலச் சிதறி ஆங்கே

சித்தமது கலங்கித் தமைத் தொலைக்கின்றாரே

சீரோங்கும் வாழ்வதனைச் சிதைக்கின்றாரே

அவரவரின் ஆழ்மனதின் ஆசைகளை

அக்கறையாய் அவரவரே கேட்டு ஆங்கே

தமக்கான இலக்குகளைத் தாமே வைக்கும்

தனி வாழ்வை வாழ ஒரு தடையுமுண்டோ

அழுக்காறு அகன்ற ஒரு நெஞ்சு வேண்டும்

அன்பெனும் அமுது அதில் ஊற வேண்டும்

இடுக்கண்ணும் வாழ்வில் ஒரு பாகமென்று

உணர்ந்து அது இன்பத்தில் திளைக்கவேண்டும்

கேதா


48 பார்வைகள்

About the Author

கேதா

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்