Arts
10 நிமிட வாசிப்பு

நினைவலைகள்

September 11, 2024 | இந்திரா

ஒரு மின்னஞ்சல், என் வாழ்வின் ஆழ்ந்த கடலில் நங்கூரமிட்டிருந்த நினைவலைகளை அசைத்தது. அதில் எங்கள் இயக்குநர்களில் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். நான் அவருடன் நெருக்கமாக வேலை செய்யும் ஒரு நபர்! நேற்றுக்கூட அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். முழு அலுவலகமும் அதிர்ச்சியில் உறைந்தது! என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

எல்லாராலும் எல்லாவற்றையும் வார்த்தைகளில் வடிப்பது கடினம். குறிப்பாக நம்மை ஆழமாகப் பாதிக்கும் கதைகள், மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளை வார்த்தைகளால் எளிதில் வெளிப்படுத்த முடியாது. நவஉ. வாழ்க்கையில் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றி எழுத பல முறை முயற்சித்தேன். ஆனால் அந்த நபரைப் பற்றியும் அவருடன் நான் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகளைப் பற்றியும் நான் எவ்வளவு மறுபரிசீலனை செய்தும், என்னால் அதனை உணர்வுபூர்வமாக எழுத்தாக்கம் செய்யமுடியவில்லை. மனிதர்கள் எதை ஆவணப்படுத்துகிறோமோ அதை மட்டுமே நம்மால் இந்த உலகுக்குச் சொல்ல முடிந்தது. ஆனால் அதையும் தாண்டி நம் வாழ்வின் பல உணர்வுகளை எப்போதும் நம் உள்ளத்தின் ஆழத்தில் பத்திரப்படுத்துவோம். தமிழ் போன்ற ஆழமான மொழியில் கூட சில சமயங்களில் அந்த உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள்கிடைப்பதில்லை. அல்லது, அந்த உணர்வுகளுக்கு ஒரு எழுத்துருவம் கொடுத்தால் அவை நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிடும் எனும் பயமாகவும் இருக்கலாம்! அதையும்தாண்டி, நாம் அதேபோன்ற ஒரு நிகழ்வை மீண்டும் எதிர்கொள்ளும்போது இவ்வுணர்ச்சி அலைகள் மீண்டும் கரை தட்டி நிற்கும்! இன்று அதுபோன்ற ஒரு நாள்! கண்ணம்மா பற்றிய நினைவலைகள் மீண்டும் மீண்டும் மனக்கடலில் எழுந்தது!

எனக்கு கண்ணம்மாவின் அறிமுகம் கிடைத்தபோது அவருக்கு 84 வயது இருக்கும். என் கண்ணுக்கு கண்ணம்மா ஒரு கொற்றவையின் உருவமாக தென்பட்டார். நெடுந்து உயர்ந்த கருமையான மேனி, கூரிய மூக்கும் அதில் ஜொலிக்கும் வைர மூக்குத்தியும், எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை, அந்தப் புன்னகை மூக்குத்தி வைரங்களில் பட்டுத்தெறித்து அவரின் முகத்திலிருந்து ஒரு தனி பொலிவு, பின்னி முடிந்த கூந்தல் என சேலையில் உலாவும் பெண்மணி! என்ன சூலாயுதத்திற்கு பதிலாக வாக்கிங் ஸ்டிக்குடன் வலம் வருவார்.

அவரை நான் ஒரு senior நிகழ்வில் முதன்முதலில் சந்தித்தேன். அங்கு வந்திருந்த மேற்கத்திய மனிதர்களுடன் வெகுசகஜமாக பழகினார், பல விஷயங்களைப் பற்றி பலதரப்பட்ட மக்களுடன் பேசினார். ஆனால் அவரிடம் பழகிய பின்புதான் தெரிந்தது அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பது. அதுமட்டுமல்ல, அவரின் உடன்பிறந்த ஆண் சகோதர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்பதற்காக இவரின் பள்ளி படிப்பு சிறுவயதிலே நிறுத்தபட்டிருந்தது. எப்போதும் தன் உடன்பிறந்த சகோதரரின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்வார்! கிண்டலாக “பாடறியேன் படிப்பறியேன், பள்ளிக்கூடம் நான் அறியேன்…” என்று பாடுவார். அவருக்குள் தன்னையும் படிக்கவைத்திருக்கலாம் என்ற எண்ணங்கள் இருந்தது போலவே எனக்குத் தோன்றியது! அதற்காக அவர் அப்பாவி என்று கணக்குப் போட வேண்டாம். இந்த 86 வயதிலும் அவர் பல விஷயங்களைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பார். குறிப்பாக கிசுகிசுக்கள்! அவரிடமிருந்து ஒரு கிசுகிசுவும் தப்ப முடியாது. பிறரிடம் இருந்து கிசு கிசுக்களை உருவும் கலையில் கில்லாடி, குறிப்பாக “நீங்கள் ஊரில் எந்த இடம்” என்ற கேள்வியில் சகலத்தையும் அறிந்திடுவார்!

ஆனால் தொடக்கத்தில் அவரின் சில செயல்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந் தன. சிறுவர்களை போலவே அவருக்கும் cake, ice coffee, இனிப்பு மற்றும் pizza சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதை விரும்புவார். அவர் யாரிடமும் உதவி கேட்கத் தயங்குவதில்லை. அது அவருடைய பிள்ளைகளுக்கு ஒருவிதமான சங்கடத்தை ஏற்படுத்தும். ஆனால் இங்குள்ள மூத்தவர்களுடன் பழகத் தொடங்கியதில் புரிந்தது, அவர்களுக்கும் குழந்தைகளைப் போலவே சமூக நுணுக்கங்களின் (social nuances) ஏற்ற இறக்கங்களை மதிப்பிட முடியவில்லை! நாம் அதை புரிந்துகொண்டால், குழந்தைகளைப் போன்றே அவர்களைக் கையாள்வதும் இலகுவாகும், குழந்தைகளுடன் நெருக்கமான உறவை உருவாக்குவதுபோல் அவர்களுடனும் நெருங்கிப் பழழகலாம்!

எனக்கு அவரின் பழைய கதைகளை கேட்பதும், அவருக்கு உதவுவதும், அவர் விரும்பிய பொருட்களை வாங்கித்தருவதும் பிடித்திருந்தது. அவருடைய கதைக்குள் ஒவ்வொரு நுணுக்கங்களுக்கும், பல அர்த்தங்கள் இருக்கும். அவர் வாழ்ந்த ஊருக்கு என்னைக் கதைகளின் வழி அழைத்துச் சென்றிருக்கிறார். நிச்சயமாக அவருக்கு கதை சொல்லும் கலை தெரியும்! ஆனால் அவரின் கதையைக் கேட்பதுக்குதான் யாருக்கும் நேரம் இல்லல! இன்னும் சொல்லப்போனால், முதுமையின் பிரச்சனையே, வயது ஏற ஏற நினைவாற்றல் குறைய ஆரம்பிக்கும். பலமுறை சொன்ன கதைகளையே திரும்பத் திரும்பச் சொல்லுவார். “எனக்கு ஒரு விஷயமும் நினைவில் நிற்குதில்லை” என்று பலதடவை சொல்லிக்கொண்டே இருந்தார், அதற்கு ஒரு பதிலும் என்னிடம் இல்லல! என்னளவில் அவருடய வயதிற்கு, பல விடயங்களை விரிவாக நினைவில் வைத்திருந்தார். இல்லாவிடில் எப்படி இந்தக் கதைகளை எல்லாம் சொல்ல முடியும்? ஆனால் அவர் நுினைவில் இருந்தது எல்லாம் பழைய கதைகள் மட்டுமே, நாளாந்த விடயங்கள் மழுங்கி கொண்டிருந்தது!

வயது காரணமாக (91 வயது), அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கவலைப்பட்டேன், அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க என் மனது இடமளிக்கவில்லை – முடிந்தவரை அதைத் தவிர்த்தேன். ஆனால் அவரோ வீடு திரும்பியதும், தன்னை மருத்துவ மனையில் வந்து சந்தித்தவர்களைப் பட்டியல் போட்டு, அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் நாட்களை அர்த்தமுள்ளதாகினார்! அதிலும் “உங்களுக்கு வேலை இருந்திருக்கும் என்டு எனக்குத் தெரியும். அதனால்தான் என்னை ஆஸ்பத்திரியில் வந்து பாக்க முடியாமல் இருந்திருக ;கும்…” என்று தனது எதிர்பார்ப்பை என்னிடம் தெரிவிக்க மறக்கவில்லை. நாள் போகப் போக இந்த மருத்துவமனை அனுமதிப்புகள் சாதாரணமாகிவிட்டன! அடுத்த கட்டமாக அவருக்கு சாப்பாட்டின் மேல் ஈடுபாடு இல்லாமல் போனது raisin bread அவரது ஒரே பிடித்த உணவானது. என்னிடம் raisin bread வாங்கித்தருமாறு கேட்பார். உடல் வலி எந்த வலி நிவாரணிகளுக்கும் அடங்குவது போல் தெரியவில்லை.

அன்று ஆம்புலன்ஸ் வந்தபோது நான் அவருடன்தான் இருந்தேன். அவர் பலவீனமாக இருந்தார், ஆனால் அசாதாரணமாக எதுவும் இல்லை. வழக் கம் போல் மருத்துவப் பணியாளர்கள் அவரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். நான் வாசல்படியில் காத்திருந்தேன், அவர் விரைவில் திரும்பி வருவார் என.; று. அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. இருப்பினும், எல்லாம் சரியாகிவிடும் என் பதில் நான் உறுதியாக இருந்தேன்.

மறுநாள் காலை, பொறுக்கமுடியாமல் விபரம் அறிய அவர் மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர் palliative care unitக்கு மாற்றப்பட்டதாகவும், morphine எனும் வலி நிவாரணி செலுத்தப்படுவதாகவும் அறிந்தேன். அதன் காரணங்களை நான் புரிந்துகொண்டேன், ஆனாலும் நவஉ. மனம் நம்பிக்கையான எண்ணங்களில் ஒட்டிக்கொண்டது, இது அவருடைய வலியைக் குறைக் கும் முயற்சி என்று நம்பச் சொன்னது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவளுடைய பிள்ளைகளும் உறவினர்களும் வந்தாலும், அவரை ஆஸ்பத்திரியில் பார்க்க என்னால் இன்னும் முடியவில்லை. அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

மறுநாள், அவர் எங்களுடன் இருக்கும் நேரம் குறைந்துகொண்டு போவதால் அவரை கடைசியாக வந்து பார்த்துவிட்டு போகுமாறு அவரின் மகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாலை 4 மணியளவில் பரபரப்பான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். கிட்டத்தட்ட 1 மணி நேரம் எடுத்து. முதன்முறையாக போக்குவரத்து நெரிசலில் தணிந்த மனநிலையில் வண்டியை ஓடினேன். நான் அவருடன் இருந்த ஒவ்வொரு நினைவுகளையும் மீட்டெடுத்தேன், இனிமையான தருணங்களை ரசித்தேன். மருத்துவமனையை அடைந்ததும் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணிவின்றி எரிச்சலடைந்தேன்! என் கோபத்தை parking meter இடம் காண்பித்தேன்.

கடைசியாக அவருடைய மருத்துவமனை அறைக்குள் நுழைந்தபோது, அவர் பலவீனமாக ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்திருப்பதை என் கண்களால் கண்டேன். இவ்வறான தருணங்களே மனிதனின் மூளைக்கும் மனசுக்கும் இருக்கும் எட்டாத தூரத்தை விவரிக்கும். எவ்வளவுதான் மூளையால் தருக்க ரீதியாக எல்லாருக்கும் ஒருநாள் இறப்பு உண்டு என்று அறிந்திருந்தாலும், எம் ஐம்புலன்களால் அதை உணரும்போதுதான் மரணம் எமக்கு எவ்வளவு அருகில் இருக்கிறது என்று புரிகிறது. குடும்பமும், உற்றார் உறவினரும், நலம் விரும்பிகளும் சூழ்ந்திருந்தார்கள். அவர் என்னை நோக்கி கையை நீட்டினார் நான் அந்த கைளை பற்றிக்கொண்டேன். என்றும் உணராத வகையில் மிகமென்மையான தோல், குழந்தையின் சருமம் போன்றது, இல்லை அதைவிடவும் மென்மை. அவருடனான நினைவுகளின் இறுதி தருணங்கள் இவை என உணர்ந்து, சுருக்கம் நிறைந்த கையை மெதுவாக வருடினேன். அவரால் பேச முடியாவில்லை. அவர் சொன்ன கதைகள் நவஉ. மனதில் எதிரொலித்தன. ஒரு தாதி தலையிடும் வரை நான் அவர் கையை வருடியபடியே நின்றேன். தயக்கத்துடன் கையை விலக்கிக் கொண்டேன். வீடு திரும்பினேன், showerன் அடியில் சத்தமாக அழுதேன் கண்ணீர் தண்ணீரோடு வழிந்து போனது. அதோடு அவரின் நினைவுகளும் கரைந்து போகும் என எண்ணினேன்!

மறுநாள், மாலை 4 மணியளவில், அவர் தனது இறுதி மூச்சை எடுத்தார். மீண்டும் தொலைபேசி அழைப்பு, மீண்டும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் ஆஸ்பத்திரி நோக்கிய பயணம். ஆனால் இன்று வழமைபோல் போக்குவரத்து நெரிசல் எரிச்சல் மூட்டியது, ஆஸ்பத்திரியை அடைந்ததும் ஆசுவாசப்பட்டேன். நேற்று பார்த்த அறையில் இன்றும் அவரைப் பார்த்தேன், ஆனால் அவர் அங்கு இல்லை. குடும்பமும், உற்றார் உறவினரும், நலம் விரும்பிகளும் சூழ்ந்திருந்தார்கள், ஆனால் அவர் அங்கு இல்லை. அவருடைய தோற்றம் மாறாமல் இருந்தது, ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் எங்கு போனார்? பதிலற்ற கேள்வியிது!

மீதமுள்ள சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஊருக்கானது. இறுதிச் சடங்கில், அவரின் கையில் வளையல் போட்டுவிடுமாறு ஒரு நபர் என் னிடம் கேட்டார்! எனக்கு ஒரு விதமான பயம் உருவானது. உருவான நொடியிலே இது என்ன மூட எண்ணம் என்று நினைத்து அவரை இன்னுமொரு முறை இறுதியாக தொட்டேன்; கை சில்லென்று குளிர்ந்தது, சில தினங்களுக்கு முன் குழந்தையின் சருமத்திலும் மென்மையான கைகள், விறைத்து பாறாங்கல் போல் கனத்தது. அவரின் ஸ்பரிசத்தின் மென்மை அவரோடு சேர்ந்து மறைந்தது போல் அவரின் நினைவலைகளை என் வாழ்வின் ஆழ்ந்த கடலில் நங்கூரமிட்டது.

இந்திரா


32 பார்வைகள்

About the Author

இந்திரா

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்