மெல்பேர்னில் எங்கள் வீட்டுக்குப் பின் புறமான பாதையில் கங்காருப் படத்துடனான வீதிப் பாதுகாப்பு அறிக்கை உள்ளது.
பாதையின் இரு புறமும் உள்ள பற்றைக்காடுகளில் வாழும் கங்காருகள் இங்கு பாதையைக் கடக்கக் கூடும். வேகத்தைக் குறைத்து அவதானமாகச் செல்லுங்கள் என்று வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிக்கை செய்பவை. ஆனால் இந்த அறிக்கையை படிக்க தெரியாத கங்காருக்கள் அடிக்கடி வாகனத்தில் மோதி இறந்து கிடப்பதைப் பார்த்து மனம் இரக்கம் கொள்ளும்.
நான் பாவம் என்று சொன்னபோது நண்பர் ஒருவர் வாகன ஓட்டுநர்தான் பாவம் என்று சொன்னார். அவரது காரில் கங்காரு அடிபட்டதால் காரையே விற்கவேண்டி வந்த சம்பவத்தைத் திகில் படக்கதை போல விவரித்தார். பாதையின் இருபுறமும் இருக்கும் வேலிகளைத்தாண்டி ஏன் இந்த மக்கு மிருகங்கள் வாகனம் ஓடும் பாதைக்கு வரவேண்டும் என்பது அவரின் கேள்வி.
அண்மையில் இந்த நாட்டில் கங்காருகள் கட்டுக்கடங்காமல் பெருகி விட்டதால் அவற்றை அரசாங்கமே ஆயிரக்கணக்கில் கொன்று தீர்த்த செய்தியும் மனதில் வந்து போனது. ஒரு புறம் பாதையைக் கடக்கும் கங்காருக்களைப் பேணுவது மறு புறம் அவற்றை கொன்று தீர்ப்பது இந்த இரு நிலைகள் கொஞ்சம் நகை முரணாக தோன்றியது.
கங்காருக்கள் இந்த நாட்டிற்கு மனிதர்கள் குடியேற முதலில் இருந்தே இங்கு வாழ்பவை. இந்த நாட்டின் தேசிய மிருகமாகவும் இங்கு வாழும் சில பூர்வ குடிகளின் குலச்சின்னமாகவும் அறியப்படுபவை. ஆனால் அவை அதிகமாகப் பெருகும்போது பீடை (pest) என்று பார்க்கப்படுகிறது. வேட்டையாடப்படுகிறது.
சங்கக் கவிதைகளில் அதிகமாகப் பேசப்படும் விலங்கு யானை. தமிழ் மக்கள் பார்த்தவற்றிலேயே மிகப் பெரியதும் வலியதுமான விலங்கு யானையாகத்தான் இருந்திருக்கும். யானை வலிமை, அதிகாரம், கருமை, காட்டின் அகம் என்று பல்வேறு விடயங்களுக்கான படிமமாகச் சங்கக் கவிதைகளில் பேசப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நாங்கள் காணும் பெரிய வலிய மிருகம் என்றால் அது கங்காருதான். ஒரு வேளை சங்கப்புலவர்கள் இங்கு வாழ்ந்திருந்தால் கங்காருவைப்பற்றித்தானே பாடியிருப்பார்கள்?
அதன் கால் மற்றும் வாலின் வலிமை, திரண்ட தோள்கள், வேகம், குட்டி வளரும்வரை வயிற்றுடன் சேர்த்து வைத்துப் பால் கொடுக்கும் விந்தை என்று எத்தனை படிமங்கள் உருவாகி இருக்கும்?
இந்த நாட்டின் பூர்விகக்குடிகள் கங்காருவை வலிமை மற்றும் அரவணைப்புக்கான ஒரு சின்னமாக அவர்களின் கதைகளின் மூலம் சித்தரிக்கிறார்கள். அவர்களது ஓவியங்களில் கங்காருவிற்கு பிரத்தியேகமான இடம் உண்டு. கிட்டத்தட்ட யானையைப் பற்றிய சங்க கால மன நிலை இது.
அண்மையில் இந்த கவிதையை வாசித்தபோது இந்தக் கவிதையில் வரும் யானைகளையும் பாதையில் அடிபட்டும் அரசாங்கத்தாலேயே வேட்டையாடப்பட்டும் இறந்து போகும் கங்காருகளையும் ஒரே புள்ளியில் இணைக்க முடியும் என்று நினைத்தேன்.
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,
முன் நாள் இனியது ஆகி, பின் நாள்
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே
முழந்தாள் இரு பிடி – முழவின் வடிவில் கால்களைக் கொண்ட கரிய பெண் யானையின், கய தலை குழவி – மெல்லிய தலையையுடைய கன்று, நறவுமலி பாக்கத்து – கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள்ஈன்ற – குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி- சிறிய கையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடி, முன் நாள்இனியதாகி – முற்காலத்தில் இனிமையைத் தருவதாகி, பின்நாள் – பிற்காலத்தில், அவர் தினை மேய்தந்தாங்கு – அவர்களுடைய தினையை மேய்ந்தாற் போல, அவர் நகைவிளையாட்டு – தலைவர் நம்மோடு முன்பு நகைத்துவிளையாடியது, பகையாகின்று – இப்போதுபகைமையையுடையதாகின்றது.
முழவு என்ன வடிவம் கொண்டதோ அந்த வடிவில் கால்களைக் கொண்டது பெண் யானை. அதன் குட்டி, குறத்தியின் பிஞ்சுக் கைகளைக் கொண்ட பிள்ளைகளுடன் சுற்றி ஆடிவிளையாடுகிறது. யானைக் குட்டியின் குட்டி துதிக்கையும்அந்த பிஞ்சு கை போன்றதே. அவர்கள் கூடிவிளையாடுகிறார்கள்.
இது முன்னர். பின்னர் அந்த குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள். பழைய படியே அந்த யானை அவர்களுடன்விளையாட ஓடுகிறது. இப்போது அந்த யானை அவர்களின் வயலைப் பாழ் படுத்துவதாக நினைத்து அவர்களால்விரட்டியடிக்கப்படுகிறது.
உன்னுடைய காதலன் முன்பு உன்னோடு பழகியதைநினைத்து வருந்தாதே. அவன் இப்போது மாறிவிட்டான். உன்அன்பை அடையாளம் காணும் இடத்தில் இல்லை. உன்அன்பை அவன் தொல்லையாகவே நினைப்பான் என்று தோழி சொல்கிறாள்.
மனிதர் காலத்தால் மாறிவிடுவர். அந்த மாற்றத்தை புரிந்து கொள்ளாவிட்டால் துன்பம் வரும் என்பதுதான் பாடலின் கருத்து.
கால மாற்றத்தால் காடுகள் விளை நிலங்களாக மாறுகின்றன. காட்டின் குழந்தைகளான யானைகள் இந்த நிலங்களின் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றன. ஒரு புறம் யானைகள் இலக்கியத்தில் கொண்டாடப்படுகிறது. அதே யானை பயிர்களை அழிக்கும்போது விரட்டியடிக்கவும் படுகிறது.
கங்காருவோ யானையோ தமிழரோ ஆஸ்திரேலியாவோ, சங்க காலத்தில் இருந்து இன்றுவரை மனிதர்கள் இயற்கையையும் விலங்குகளையும் ஏன் சக மனிதர்களையும்கூட தங்கள் சுய தேவையின் அடிப்படையிலேயே நேசிக்கிறார்கள். அவை தங்கள் நோக்கத்திற்குத் தடை என்று தோன்றும்போது எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அழித்து விடுகிறார்கள்.
யானைக்கும் கங்காருவிற்கும் இதை எப்படிச் சொல்வது?