Arts
10 நிமிட வாசிப்பு

ChatGPT சொன்ன கதை – Bridging Shores

February 25, 2024 | இளவேனில் ஆசிரியர் குழாம்

முன்னைய பக்கத்தில் வெளியாகியிருக்கும் கதையை எழுதிய ஆயிஷா ரகுமான் யார் என்ற குழப்பம் இளவேனில் வாசகர்களுக்கு எழக்கூடும். மேற் சொன்ன “Bridging Shores” என்ற கதையையும் அதை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஆயிஷா ரகுமான்’ என்ற எழுத்தாளரின் பெயரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செயலியின் புனைவு என்று சொன்னால் நம்பமுடியாது அல்லவா?

இக்கதையை எழுதியது ChatGPT என்ற, இன்றைக்கு உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிதான். கண்டிக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணத்தைத் தயாரித்துக்கொடுப்பது, வேலைக்கு விடுமுறைக் கடிதம் எழுதுவது, காதல் செய்திகளை வடிவமைப்பது, கணக்கியல் பற்றிய சந்தேகங்களைத் தீர்ப்பது முதல் மிகச் சிக்கலான மென்பொருள் தீர்வுகளைக் கொடுப்பதுவரை இந்த ChatGPTயால் ஆகாதது என்று ஒன்றில்லை.

ஒரு இலக்கியச் சமூக சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதி அனுப்புமாறு ‘ChatGPT’ கேட்டுப்பார்க்கலாம் என்று நகைச்சுவையாக இதனைச் செய்துபார்த்தோம்.  

என்ன இது. செயற்கை நுண்ணறிவு இலக்கியத்தையும் கையில் எடுத்துவிட்டால் எழுத்தாளர்கள் என்ன ஆவார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அந்த அச்சம் தேவையில்லை. இந்தக் கதையையே நன்றாகக் கவனித்துப்பாருங்கள். நமக்குத் தெரியாத ஒன்றை இது எழுதவில்லை. இணையத்தில் கிடைக்கும் ஏராளமான புலம்பெயர் கதைகளை உள்வாங்கி, அவற்றிலிருந்து சில விசயங்களை எடுத்துக் கோர்த்து இந்தக் கதையை அது எழுதியிருக்கிறது.

ஆனால் ஒரு இலக்கியம் அப்படி உருவாவதில்லை. எழுத்தாளர் என்பவர் சமூகம் பற்றி, வாழ்வு பற்றி, மனிதர்கள் பற்றி, தத்துவங்கள் பற்றி ஒரு புதிய உலகத்தைத் திறந்துகாட்டுபவர். நமக்குத் தெரிந்த மனிதர்களாக இருந்தாலும் நாம் பயணித்த இடங்களாக இருந்தாலும் நமக்கு நேர்ந்த அனுபவங்களாகவே அவை இருந்தாலும் ஒரு தேர்ந்த எழுத்தாளர் அவற்றினூடாக ஒரு புதிய அனுபவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த வல்லவர். இணையத்தில் கிடப்பவற்றில் பொறுக்கியெடுத்துத் தொகுப்பவர் அல்ல எழுத்தாளர். ஒரு விசயம் தன்னை அலைக்கழிக்கும்போது அது பொறுக்கமுடியாமல் எழுதித்தீர்ப்பவர் அவர்.

ChatGPTக்கு சிறந்த மொழி வசப்படலாம். நமக்குத் தெரியாத பிறமொழிக் கதைகளைக்கூட அது சற்றுத் திருத்திப் பிரதி செய்து கொடுக்கவும் செய்யும். ஆனால் அதனால் புதிதாக ஒன்றைப் படைப்பது என்பது முடியாத காரியம்.

அதனால் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம்பற்றி அச்சம் தேவையில்லை. நாம் நம் படைப்பூக்கத்தில் கவனமெடுத்தால், நாம் நம் தனித்துவங்கள்மீது அக்கறைகொண்டால், யாரையும் எதையும் பிரதி பண்ணாது, நமக்குப் பிடித்ததை, நம் தேடலைத் தீவிரமாக்கினால், தொழில்நுட்பத்தையும் நமக்குத் துணையாக மாற்ற இயலும்.

இளவேனில் ஆசிரியர் குழாம்


71 பார்வைகள்

About the Author

இளவேனில் ஆசிரியர் குழாம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்