Arts
10 நிமிட வாசிப்பு

ஆசிரியர் தலையங்கம் – கரம் கோர்ப்போம்

February 25, 2024 | இளவேனில் ஆசிரியர் குழாம்

மறுபடியும் ஒரு புத்தாண்டில் வாசகர்களோடு உரையாட சந்தர்ப்பம் கிடைப்பதில் அகம் மகிழ்கிறோம்.

அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் வாழ்வையும் சிந்தைப் போக்குகளையும் இம்முறையும் இளவேனில் தாங்கி வந்திருக்கிறது. அறுபதைக் கடந்த பெரியோர் முதல் பத்து வயது சிறுவர்வரை தம் எண்ணங்களை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் பிரதிபலிக்கின்ற சூழலை இளவேனில் ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதன்வழி நம் சமூகத்தின் விளை சிந்தனையாக அல்லது விளை சிந்தனைகளுள் முக்கியமானதாக இளவேனில் வெளிவந்துள்ளதாக நாம் நம்புகிறோம்.

தேசிய, உள்நாட்டு அரசுகள் கொள்கை முடிவுகளையும் மக்கள் செயற்திட்டங்களையும் முன்னெடுக்கும்போது மக்களது குரல்களைக் கேட்கவேண்டும் என்பது சனநாயகத்தின் முக்கிய புள்ளிகளுள் ஒன்று. அதற்காக அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கூடாக சமூக ஆய்வுகளை மேற்கொள்வர். சமூகக் கூட்டங்களை ஒழுங்கமைப்பர். மக்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பர். செவிமடுப்பதும் கருத்துகளை உள்வாங்கலும் இச்செயற்பாட்டின் தலையாய அம்சமாகும்.

இளவேனில் சஞ்சிகை அவ்வகையான ஒரு செயற்பாட்டையே தமிழ்ச் சூழல் சார்ந்து முன்னெடுக்க முயற்சி செய்கிறது. சிறுவர், பதின்மத்தவர், இளையோர், நடுத்தர வயதினர், பெற்றோர், முதியோர் என நம் சமூகத்தின் அங்கத்தினர் அனைவருடனும் பேசி அவர்களுடைய எண்ணங்களைப் பதிவு செய்ய முயற்சி செய்கிறோம். அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொணர வைக்கிறோம். கட்டுரையாக, கவிதையாக, ஆக்க இலக்கியப் படைப்புகளாக பல தளங்களில் அவை பரந்து விரிவதைக் கண்டு மகிழ்கிறோம். இவ்வகை ஆக்கங்களை வெறுமனே அப்படியே வெளியிடாமல், பல்கலைக்கழக முயற்சிகளைத் தழுவி, படைப்பாளிகளுடன் மறு வாசிப்புச் செய்து, கேள்விகளைக் கேட்டு, சக மதிப்பாய்வினை (peer review) மேற்கொண்டு, திருத்தங்களைக் கோருகிறோம். அவற்றினூடாக ஆக்கங்களின் ஆழமும் நேர்மையும் உண்மைத்தன்மையும் அதிகமாகிறது என்பதைக் கண்கூடாகவே காண்கிறோம்.

அதனால்தான் இளவேனில் சஞ்சிகையை வெறுமனே பிறிதொரு சஞ்சிகையாகக் கடந்துபோக வேண்டாமென நாம் வாசகப் பெருமக்களிடம் வேண்டி நிற்கிறோம். இது நம்மிடையே எழுந்த, நாம் கேட்கத் தவறிய, அல்லது கேட்க விரும்பாத குரல்களைக் கொண்ட இதழ். நம் இளையோர் நமக்கான செய்திகளை இங்கே கொடுத்திருக்கிறார்கள். முதியோர் இறைஞ்சியிருக்கிறார்கள். பெற்றோரின் அசூசையும் ஏக்கமும் இங்கு உண்டு. சிறுவரின் பொருமலும் உண்டு. அரசுகள் செவிமடுப்பதுபோல நம் மக்களும், குறிப்பாக தமிழ்ச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பெருந்தொண்டர்களும் இவ்விதழை வாசித்தால் நாம் பெருமகிழ்வு எய்துவோம்.

மார்கரட் மீட் (Margaret Mead) என்கின்ற மிகப் பிரபலமான அமெரிக்க மானுடவியலாளரின் கூற்று இது.

“Never doubt that a small group of thoughtful committed individuals can change the world. In fact, it’s the only thing that ever has”

“சந்தேகமே வேண்டாம். விடா முயற்சியும் சிந்தனைக்கூர்மையும் உள்ள சிறிய குழுவினரால் ஒரு சமூக மாற்றத்தையே ஏற்படுத்த முடியும். சொல்லப்போனால் சமூக மாற்றங்கள் அத்தனையும் அப்படியே நிகழ்ந்தன”

இக்கூற்று நம் தமிழ்ச் சமூகத்துக்கும் சாலப்பொருந்தும் அல்லவா. நம்மிலும் பெருமுயற்சி எடுத்து தமிழ்ச் செயற்பாட்டுக்காகத் தம் உழைப்பை செலவிடுபவர்கள் ஒரு சிறிய குழுவினர்தான். அவர்களுக்கு நாம் துணை நிற்போம். அவர்களோடு இணைந்து செயற்படுவோம். அவர்களின் குரலை நம் மக்களுக்கும் நம் மக்களின் சிந்தைகளை அவர்களுக்கும் கொண்டுசெல்லும் பாலமாக இளவேனில் செயல்படும் என்று நம்பிக்கை கொள்வோம்.

கரம் கோர்ப்போம்.

அன்புடன்,

இளவேனில்

ஆசிரியர் குழு

இளவேனில் ஆசிரியர் குழாம்


44 பார்வைகள்

About the Author

இளவேனில் ஆசிரியர் குழாம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்