Arts
10 நிமிட வாசிப்பு

உன்னால் முடியும்

April 5, 2024 | ஹரிணி திவாகர்

அன்று சனிக்கிழமை மாலை நேரம். சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. வானம் கண்ணைக் கவரும் வண்ணங்களால் சூழ்ந்து அழகாகக் காட்சியளித்தது. பறவைகள் தங்கள் இனிமையான குரலில் பாட்டுப் பாடின.
ஆறு வயதுச் சிறுவனான வருண் அவனுக்கு மிகவும் பிடித்த ஆலமரத்தடியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தான். வருணுடன் எப்பொழுதும் கூடவே இருக்கும் வெள்ளைக் காகிதமும் பென்சிலும் அவன் அருகே இருந்தது. வருண் சிறுவயதிலிருந்தே தான் ஒரு சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். தனது ஓவியப்படைப்புக்களை உலகமே பார்த்து வியக்க வேண்டும் என்று கனவு கண்டான். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் வருணால் நேர்த்தியாக வரைய முடியவில்லை. வருணுக்கு வண்ண வண்ண அழகான ஓவியங்களை வரைய வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் தோன்றும். ஆனால் அந்த அழகான எண்ணத்தில் தோன்றிய ஓவியத்தை அவனால் நேர்த்தியாக வரைய முடியவில்லை என்று வருத்தப்பட்டான்.
மறுநாள் வருண் தனது பெற்றோரிடம் சென்று ஓவியத்தின் மேல் தனக்குள்ள ஆர்வத்தையும் அவனது லட்சியத்தையும் பற்றிக் கூறினான். ஆனால் தன்னால் அந்த லட்சியத்தை அடைய முடியாமல் போய்விடுமோ என்று வருத்தப்பட்டான். அப்படியானால் தான் தனது சிறந்த ஓவியராக வேண்டும் என்ற கனவை மறந்துவிட வேண்டுமோ என்று மிகுந்த வருத்தத்துடன் அவனது பெற்றோரிடம் கேட்டான். “ஓ, தயவு செய்து உனது இலட்சியக் கனவுகளை விட்டுவிடாதே, வருண். அர்ப்பணிப்பு இல்லாமல் எந்த இலக்கையும் உன்னால் அடைய முடியாது. உனது விருப்பம் போலவே நீ சிறந்த ஓவியராக வேண்டும் என்று நினைக்கிறேன், வருண். ஆனால் நீ தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்,” என்று அவனது தாயார் கூறினார்.
பெற்றோர் கூறிய அறிவுரை வருணை ஆழமாகச் சிந்திக்க வைத்தது. வருண் தனது லட்சியத்தை நிறைவேற்றத்தான் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சி செய்யவேண்டும் என்று முடிவு செய்தான். மறுநாள் பாடசாலையில் ஓவிய ஆசிரியர் திரு சீலன் அவர்களிடம் சென்று சிறந்த ஓவியராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டான். “உன் இலக்கை அடையும் உன் லட்சியத்தை நான் பாராட்டுகிறேன், வருண். நிச்சயமாக! நன்றாக வரைவதற்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும், நுணுக்கங்களையும் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்,” என்று திரு சீலன் சிரித்துக் கொண்டே கூறினார்.
தினமும், மதிய உணவு இடைவேளையில், ஓவிய ஆசிரியரை வருண் சந்தித்து தான் வீட்டில் வரைந்த ஓவியங்களையும் அந்த ஓவியங்களை எவ்வாறு மிகவும் நேர்த்தியாக வரையலாம் என்றும் ஆசிரியரிடம் ஆலோசனை கேட்டு மீண்டும் மீண்டும் வரைந்து பார்ப்பான். வருணின் ஓவியம் கற்கும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நாட்கள் வாரங்களாகின்றன. வாரங்கள் மாதங்களாகின. மாதங்கள் ஒரு வருடம் ஆனது.
அன்று வெள்ளிக்கிழமை பாடசாலையின் ஆண்டிறுதி நாள் என்பதால் அனைத்து வகுப்புக்களும் பாடசாலை ஆண்டிறுதி நாளைக் கொண்டாட முடிவு செய்தார்கள். ஓவிய ஆசிரியரான திரு சீலன் அவர்கள் அன்று வருணின் வகுப்பிற்கான ஓவியப் போட்டியை நடத்த முடிவு செய்திருந்தார். திரு சீலன் அவர்கள் முழு வகுப்பினருக்கும் ஏதாவது ஒன்றை அல்லது ஆண்டு முழுவதும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்த ஒருவரை வரையும்படி கூறினார்.
ஓவியம் வரைவதில் தான் வளர்ந்த திறமையைத் தனது வகுப்பில் காட்டுவதற்கான சிறந்த நேரம் இது என்பதை வருண் உணர்ந்தான். வருண் ஒரு ஆழமான மூச்சை எடுத்து ஓவியம் வரைவதற்கு தன்னை தயார்படுத்தினான். வருண் தனக்கு முன்மாதிரியாக இருந்த ஒருவரின் படத்தை வரையத் தொடங்கினான். அவனிற்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்த ஒருவரின் படமே அந்த ஓவியம். அந்த ஓவியத்தின் ஒவ்வொரு நுணுக்கமான திறனும் அவன் திரு சீலன் அவர்களிடம் கற்றுக்கொண்டவையே. வரைவதற்கு கொடுக்கப்பட்ட முப்பது நிமிடங்கள் முடிவுக்கு வந்தது. வருண் வரைந்த ஓவியம் அவனது சிறந்த வழிகாட்டியான ஓவிய ஆசிரியர் திரு சீலன் அவர்களின் அழகான ஓவியம். சிரித்த முகத்துடன் தன்னை மிகவும் அழகாக வரைந்த வருணை திரு சீலன் அவர்கள் பாராட்டினார். “உன் திறமையில் நீ பெரிய முன்னேற்றம் காட்டியுள்ளாய் வருண். நான் உன்னை நினைத்து மிகவும் பெருமையடைகின்றேன்.” என்று திரு சீலன் அவர்கள் வருணைப் பாராட்டினார்.
வருண் தனது உலகமே போற்றும் ஓவியராக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கித் தொடர்ந்து பயணித்தான். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று அவன் நன்கு உணர்ந்து கொண்டான்

ஹரிணி திவாகர்


46 பார்வைகள்

About the Author

ஹரிணி திவாகர்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்