Arts
10 நிமிட வாசிப்பு

விளையாட்டுப் புத்தி

September 11, 2024 | கேதா

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சமமானவை. விளையாட்டு வீரர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இயல்பாகவே இருக்கும். விளையாட்டால் விளையும் நன்மைகளைப்பற்றி இப்படி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். கடுமையாகப் போராடியபின் வென்றவர்களும் தோற்றவர்களும் நட்போடு கைலாகு கொடுத்துக் கடந்து போவதை நாம் அன்றாடம் காண்கிறோம். இந்த முதிர்ச்சி எப்போது ஒரு வீரரிடம் உருவாகிறது? இது விளையாட்டுத் திடலைத் தாண்டியும் நிலைத்திருக்குமா? மைதானத்தில் எமக்கு நாயகர்களாகத் தெரியும் வீரர்கள், அன்றாட வாழ்வில் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் வாழ்வின் சலிப்பான சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? இப்படிப் பல கேள்விகள் எனக்கு எழுவதுண்டு. யாரிடம் கேட்பது?

எனது கல்லூரி நாட்களில் நான் பார்த்து வியந்த வீரர்களில் ஒருவன் கௌசி. கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும் கால்பந்தாட்ட அணிக்கும் தலைவன். எப்போதும் சிரித்த முகம் வாய்த்த வெகு சில மனிதர்களில் கௌசியும் ஒருவன். கௌசியின் அந்த சிரிப்பில் முக்கிய பங்காற்றிய முன்வரிசையின் நான்கு பற்களை ஒரு எகிறு பந்து பறித்துக்கொண்ட பின்னாலும் கௌசி சிரிப்பை விடவில்லை. இப்போது கட்டுப் பற்கள் மீண்டும் புன்னகையை முழுமையாக்குகின்றன. பின்னாளில் முழங்காலில் ஒரு அறுவைச் சிகிச்சை, இன்னும் பல காயங்கள் என்று விழுப்புண்களைச் சுமப்பதில் கௌசி ஒரு பெரிய பழுவேட்டரையர். தமிழ்ப் பள்ளியில் பிள்ளைகளை இறக்கிவிட்டுத் ன்பாட்டில் றீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்த கௌசியை “வா மச்சான் ஒரு தேநீர் குடிப்பம்” என்று அருகிலிருந்த தமிழ்க் கடைக்கு அழைத்துப் போனேன்.

“மச்சான் பள்ளிக்கூட காலத்திற்குப் பிறகு நீ கிரிக்கெட் விளையாடேல்லையோ?” எனது திடீர்க் கேள்வி, கௌசியைஅந்தநாள் நினைவுகளுக்குள் தள்ளியிருக்க வேண்டும். தனது அடையாளமான சிரிப்பை உதிர்த்தபடி, “அந்தளவுக்கு விளையாடேல்லதான். ஆனாலும் நிறைய விளாயாடினான். இங்க ஒஸ்திரேலியாக்கு வந்தும் நிறைய கழக மட்டப் போட்டிகள் விளையாடியிருக்கிறன். பயிற்சியாளரா இருக்கிறன். ஒரு முழங்கால் காயத்திற்குப் பிறகு விளையாடுறத சரியாக் குறைச்சிட்டன்.” மீண்டும் சன்னமான சிரிப்பு.

கௌசியின் திறமையை ஒரு ரசிகனாக தொலைவிலிருந்து வியந்து பார்த்திருக்கிறேன். அதைவிட எந்தப் பெருமையும் இல்லாமல் எளிமையாகப் பழகும் அவன் இயல்பைப் பார்த்து அதிகமாகவே ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பலபேர் மத்தியில் ஒரு நாயகனைப் போல விளையாடியபோதும், என்

போன்றவர்களுடன் சேர்ந்து ஒரு குளக்கரை வெளியில் விளையாடிய போதும் கௌசியால் ஒரே மாதிரி நடந்து கொள்ள முடிகிறது. “எப்பிடி மச்சான் உன்னால எப்பவும், சிம்பிளா ஒரு பந்தாவு மில்லாமல் ஒரேமாதிரி இருக்க முடியுது?” என்று கேட்டேன். “பின்ன எப்பிடி இருக்கோணுமடா?” என்று கேட்டுவிட்டு “எத்தினைபேரைப் பார்க்கிறம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி. எனக்கு இது பிடிச்சிருக்கு. சின்னனில இருந்து நிறைய வெற்றி தோல்வியைப் பார்த்து வளர்ந்ததால கொஞ்சம் நிதானம் வந்திருக்கலாம். “

“தோல்விகள் உன்னை வருத்திய தில்லையா?”

“யார் சொன்னது. அந்தநேரம் வாழ்க்கை வெறுக்கும். பிறகு அடுத்த போட்டிக்குப் போகேக்க அது மறந்திடும். விட்ட பிழையை திருப்பி விடக்கூடாதெண்டு யோசிப்பன், மற்ற படி தோல்வியைத் திருப்பித் திருப்பி யோசிக்கமாட்டன்”.

“விளையாடில கிடைச்ச அனுபவம், நாளாந்த வாழ்க்கையில உனக்கு உதவுதா?”

“நிறைய இடத்தில உதவி செய்யுது. நான் பாடசாலை மாணவனாக இருக்கும்போதே பழையமாணவர்கள் என்னை விடப் பல வயது கூடினவர்களோட சேர்ந்து கழக மட்டப் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். ஒரு போட்டியில நான் ஆட்டமிழக்காமல் நிற்க, மற்றப் பக்கத்தால மளமளவெண்டு விக்கட்டுகள் சரியத் தொடங்கீட்டுது. நான் சின்னப் பெடியன். மற்றவன் போலர். இரண்டு ஓவரில 25 ரன் அடிக்கோணும். பந்து வீசுபவன் பிரபலமான ஒரு வேகப் பந்துவீச்சாளன். எப்பிடி யோசிச்சாலும் எங்களுக்கு வாய்ப்பே இல்ல. இருந்தாலும் மனதுக்குள்ள ஒரு வைராக்கியம். முதல் பந்து ஆறு ஓட்டம். அதுக்குப் பிறகு இரண்டு நான்கு ஓட்டம். இரண்டு ஓவர்ல வெற்றி. மறக்கவே முடியாத வெற்றி. எப்பவெல்லாம் வாழ்க்கையில பிரச்சினைகள் வரும்போது, எப்பிடித்தான் இதைத் தாண்டப் போறம் எண்டு நினைக்கேக்க அந்தப் போட்டியைத்தான் நினைச்சுப் பார்ப்பன். ஒரு நம்பிக்கை வரும். இப்ப வாற சவால்கள் வேறுதான், ஆனால் அதை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அந்தப் பழைய அனுபவம் குடுக்குது”.

“சிலநேரம் வேலையில வாற பிரச்சினைகள்,வேலை இல்லாமல் போய் வேற வேலை தேடவேண்டி வாற சூழ்நிலைகள், இன்னும் எத்தனையோ நெருக்கடிகள் வரும்போதெல்லாம் நான் அந்தப் போட்டியை நினைச்சுப் பார்ப்பன். தளர்ந்துபோயிருந்த மனத்துக்குப் புதுத் தெம்பு கிடைச்சிடும்.”

ஆச்சரியமாயிருந்தது. விடாமுயற்சி மற்றும் நேர்மறையான எண்ணங்களை விளையாட்டுக் கற்றுக் கொடுக்கிறது என்பதை மிக எளிமையாக விளங்க வைத்தான்.

“சரி உன்னுடைய பிள்ளைகள் விளையாட்டில ஆர்வமா இருக்கிறாங்களா?”

“ஓம். இரண்டுபேரும் துடுப்பாட்டம், கால்பந்து விளையாடுறாங்கள். எங்களுக்கு இருந்ததைவிட அவங்களுக்கு நிறைய வளங்கள் இருக்கு. நான் சின்னனில இருந்தே சொல்லிச் சொல்லி அவங்களுக்கும் விளையாட்டில நல்ல விருப்பம். நான் பள்ளி நாட்களில் விளையாடியபோது, வீட்டில அதைப் பற்றிய அறிவோ ஆர்வமோ இருந்ததில்லை. நான் விளையாடும் போட்டிகளைப் பார்க்கக் கூட அம்மாவோ, அப்பாவோ வந்ததில்லை. அதை பிழையெண்டு சொல்லேலாலது, ஆனால் ஒரு கவலைதான். அதனால நான் என்ற பிள்ளையளுக்கு முடிஞ்ச அளவு விளையாட்டுக்கு உதவி செய்யுறன்.”

“உன்ற பழைய கதைகளை ஆர்வமாக் கேப்பாங்களா?”

“ஓம். அவங்களுக்கு எங்கட பழைய கதை களைக் கேட்க நல்ல விருப்பம். திரும்பத் திரும்பக் கேட்பார்கள். அதைவிடப் பெரிய சந்தோசம் இல்லையடாப்பா”

“படிப்பா விளையாட்டா என்ற விவாதம் வாறதில்லையா. குறிப்பா உன்னுடைய மனைவியின் கருத்து என்ன?”

“அந்த விவாதம் இல்லாமல் இருக்குமே. படிப்பு முக்கியந்தானே. அதை விட்டுப் போட்டு ஒண்டும் செய்யேலாது. எண்டபடியால் நான் அவங்களுக்குச் சொல்லுறனான், இரண்டையும் சமாளிச்சுக்கொண்டு போகோணும். மனைவிக்குப் படிப்புத்தான் முக்கியம். துவக்கத்தில் இந்த விஷயத்தில இரண்டு பேரும் வேறு வேறு நிலைப்பாட்டிலதான் இருந்தம். இருந்தாலும் போகப்போக இப்ப மனைவியும் விளையாட்டும் தேவைதான் எண்டு சொல்லுறா”

இவன் எந்தச் சவாலையும் பொறுமையாயும், நிதானமாயும் கையாளத் தெரிந்த தேர்ந்த விளையாட்டுவீரன் என்பது விளங்கியது.

“இருந்தாலும் பிள்ளைகளின் விளையாட்டுப் பயிற்சி, போட்டிகள் மற்ற விளையாட்டுத் தொடர்பான எல்லா விடயங்களையும் நான்தான் செய்யுறன். படிப்பு சம்பந்தமான வேலைகளுக்கு மனைவியைக் கேட்பதில் எந்த சிக்கலுமில்லை. விளையாட்டெண்டு வந்தா அது என்ற வேலைமட்டுந்தான் எண்டொரு எண்ணம் மனதில இருக்கு. சிலநேரம் அது ஒரு பெரிய அழுத்தமாயும் இருக்குது.”

வெற்றி பெற்றவர்களின் பிள்ளைகள் மீதான எதிர்பார்ப்பு ஒரு மிகப்பெரிய அழுத்தமாக மாறிவிடுவதுண்டு. தம்மில் தம் மக்கள் மேன்மையாக இருக்கவேண்டும் என்ற பெற்றோரின் ஆவல் ஒரு இரண்டு பக்கமும் கூரான வாள் போன்றது.

“உன்னைவிட அதிகமாய் உன் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்பது சவாலாக இல்லையா?”

“அப்பிடி யோசிச்சால்தானே மச்சான். அவங்கள் விருப்பத்தோடு விளையாடுறாங்கள். பயிற்சி செய்கிறாங்கள். என்னைவிட அதிகமான வாய்ப்புகளும் வளங்களும் அவங்களுக்கு இருக்கு. இனி எவ்வளவு சாதிக்கப் போறாங்கள் எண்டது அவங்களைப் பொறுத்தது. நான் என்னால எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு உதவியா இருப்பன். என்னுடைய கனவுகளைஅவங்கள் மேல போடக்கூடாது.”

“தெளிவாத்தான் கதைக்கிறாய். சரி நீ சொல்லிக்குடுத்தால், பிழையைச் சுட்டிக் காட்டினால் கேப்பாங்களா?”

“அது அவங்கள் இருக்கிற மூடப் பொறுத்து மாறும். மனமறிஞ்சு நடக்கோணுமடாப்பா!” மீண்டும் அதே சிரிப்பு.

மைதானத்தில் பட்டறிந்தது வேலை முதல் வீடுவரை கைகொடுப்பதைப் பார்க்கிறபோது வியப்பாகத்தான் இருந்தது. வெற்றிகளின் கிறக்கத்தை விட, விளையாட்டுக் கொடுக்கும் இந்தப் பக்குவத்தைப் பார்க்கச் சற்றுப்பொறாமையாயும் இருந்தது.

கேதா


29 பார்வைகள்

About the Author

கேதா

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்